ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கிய போர் ஆரம்பமாகி தற்போது சரியாக 42 நாட்கள் கடந்துவிட்டன. ஆரம்பத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டிருந்த போதிலும், தற்போது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமே இதில் சிக்கியுள்ளதுடன், அதன் விளைவுகளை முழு உலகமுமே அனுபவித்து வருவதைக் காண முடிகிறது.
போர் தொடங்கிய முதல் மணிநேரத்திலேயே, அதன் உடனடிப் பாதிப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் ஒரு விசேட உரையை நிகழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இதன் காரணமாக விரைவில் எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என்றும், ஏதோ ஒரு கட்டத்தில் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் அபாயம் ஏற்படலாம் என்றும் எச்சரித்தார்.
எனவே, உடனடியாக ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விஜித ஹேரத்,
இருப்பினும், அதற்கு வழக்கம் போல கிண்டலாகப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஹோர்முஸ் நீரிணையை மூடும் அபாயம் இல்லை என்றும், அப்படி மூடினாலும் சிங்கப்பூரில் இருந்து எண்ணெய் பெறுவதில் இலங்கைக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்றும் கூறினார்.
ஆனால் இறுதியில், சஜித்தைப் பார்த்து சிரித்த அரசாங்கத் தலைவர்கள், அவர் சுட்டிக்காட்டியது போலவே மிக விரைவில் எரிசக்தி நெருக்கடியில் சிக்கி, ரஷ்யாவிடம் எண்ணெய் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருப்பினும் ரஷ;யா இலங்கைக்கு உதவி செய்யுமா என்பதில் சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவி ஏற்றவுடன், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விடுத்த நேரடி அழைப்பை ஜனாதிபதி நிராகரித்தார்.
அந்த நேரத்தில் இது ரஷ்யாவிற்கும் அதன் ஜனாதிபதிக்கும் செய்யப்பட்ட அவமதிப்பாகவே கருதப்பட்டது. இதன் காரணமாகவே, இரு தரப்பும் இடதுசாரிகளாகக் கருதப்பட்டாலும், ரஷ்யாவிற்கும் அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு ஏற்படவில்லை.
மேலும், கடந்த காலங்களில் இலங்கை பின்பற்றிய செயல்பாடுகள் காரணமாக, இது ஒரு இடதுசாரி அரசாங்கம் என்பதை விட, அமெரிக்காவிற்குச் சார்பான நிலையில் இருக்கும் ஒரு அரசாங்கமாகவே ரஷ்யா இலங்கையை அடையாளம் கண்டுள்ளது.
இது தவிர, தற்போதைய அரசாங்கத்திடம் சர்வதேச ரீதியாகக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்யக்கூடிய மற்றும் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட நபர்கள் பற்றாக்குறையாக இருப்பதன் காரணமாக, பல்வேறு ‘மூன்றாம் தரப்பினர்’ ஊடாக சர்வதேசத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த அரசாங்கங்களில் ரஷ்யாவுடன் தொடர்புகளை வைத்திருந்த சில நபர்கள் ஊடாகவே அரசாங்கம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உதயங்கவின் பதில்
எவ்வாறாயினும், ரஷ்யப் பிரதிநிதிகளின் வருகையை ஒரு பெரிய வெற்றியாகக் காண்பிக்க அரசாங்கம் முயற்சி செய்திருந்தாலும், உதயங்க வீரதுங்க அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு எதிர்வினையை ஆற்றியிருப்பது ஒரு விசேடமான நிகழ்வாகும். இதனை உதயங்க தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:
‘ரஷ்ய எண்ணெயை இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி ஒப்பந்த அடிப்படையில் வாங்குவது என்பது ஒரு முழுப் பொய்யாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான தூதுக்குழுவினர்,
மார்ச் 26ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷ்ய கூட்டமைப்புடன் அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி கொடுக்கல் வாங்கல் ஊடாக ரஷ்ய எரிபொருள், உரம் மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்யத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இது நடைமுறையில் சாத்தியமா என்பது குறித்து சந்தேகங்கள் உள்ளன.
ரஷ்யாவில் தூதுவராகப் பணியாற்றிய பத்து வருட அனுபவத்தின் அடிப்படையில் நான் அறிந்தவரை, ரஷ்யா இவ்வாறான அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களை அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் தமக்கு நெருக்கமான அல்லது நட்பு நாடுகளுடன் மட்டுமே கையெழுத்திடுகிறது.
இலங்கை ரஷ்யாவிற்கு எதிரான நாடு அல்ல என்றாலும், தெளிவாக அவர்களின் ‘நெருங்கிய நண்பர்கள்’ பட்டியலில் உள்ள நாடு அல்ல. இன்று இலங்கை ஒரு நடுநிலையான நாடாகவே ரஷ்யாவினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக விளாடிமிர் புடின் விடுத்த எழுத்துப்பூர்வ அழைப்பை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிராகரித்ததை அடுத்து, ரஷ்யா இலங்கைக்கு விசேட அரசியல் ஆதரவை வழங்குவதில் இருந்த ஆர்வம் குறைந்திருக்கலாம் என்பதை ஒரு நியாயமான கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல், வரலாற்றில் பதிவாகியுள்ளபடி, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க முயற்சி செய்த போதிலும் அது வெற்றிபெறவில்லை.
அப்போதைப் போலவே இப்பொழுதும், இதனை ஒரு இரு நாட்டு அரசாங்களுக்கு இடையிலான ஒப்பந்தமாக நாட்டுக்குக் காட்டிவிட்டு, இடைத்தரகர்கள் ஊடாகவே கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது.
அன்று, ஜனாதிபதி கோட்டாபய ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அனுப்பிய கடிதத்தில், இராஜதந்திர அந்தஸ்து இல்லாத ஒரு இலங்கையரின் பெயரைக் குறிப்பிட்டு இராஜதந்திர மரபுகளை மீறியிருந்தார்.
அரசாங்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாகக் காட்டிவிட்டு, ஒரு தனியார் துறை ஒப்பந்தத்திற்காக எடுக்கப்பட்ட அந்த முயற்சி அன்று தோல்வியில் முடிந்தது.
இந்த முறையும், ஜனாதிபதி அநுர குமாரவுடன் பிரதி அமைச்சர் ஒருவர் நடத்தும் உயர்மட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தையில் ரஷ்யத் தரப்பில் இராஜதந்திர அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.
ஆனால், அங்கு ரஷ்யத் தூதுவரால் ‘மூன்றாம் தரப்பாக’ இராஜதந்திர அந்தஸ்து இல்லாத ஒரு இலங்கையரை பேச்சுவார்த்தையில் சேர்த்துக்கொண்டதும், அதற்கு அனுமதி வழங்கியதும் எதைக் காட்டுகிறது என்றால், இது ஒரு அரசாங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல, மாறாக ஒரு குறிப்பிட்ட குழுவின் ‘தனியார் கொடுக்கல் வாங்கல்’ என்பதை ஜனாதிபதி செயலகம் முன்கூட்டியே அறிந்திருந்தது என்பதையேயாகும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிடம் வினாவிய அரசாங்கம்
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், முதற்கட்டமாக இரண்டு எரிபொருள் கப்பல்களை மாத்திரம் வழங்க ரஷ்யா உடன்பட்டிருந்தது.
அத்துடன், தொடர்ந்து எண்ணெய் தேவைப்பட்டால், ரஷ்யாவின் நிபந்தனைகளின் கீழ் 5 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இதனை நடைமுறையில் சாத்தியப்படுத்த முடியுமா என்ற பாரிய கேள்வியை அரசாங்கம் இப்போது எதிர்கொண்டுள்ளது.
ஏனெனில், மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்பு, உலக நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது.
எனினும், போர் தொடங்கியவுடன் உலகெங்கும் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டைத் தற்காலிகமாகச் சமாளிக்க, ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்தார்.
ரஷ்யாவோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தொடர்ந்து எண்ணெய் வேண்டுமானால் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்கிறது. இந்த 30 நாள் சலுகை காலம் முடிந்த பிறகு, ட்ரம்ப் மீண்டும் தடைகளை விதித்தால் நிலைமை என்னவாகும் என்பதே இங்குள்ள பாரிய சிக்கல்.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து அரசாங்கம் கடந்த வாரம் அமெரிக்கத் தரப்பிடம் வினவியுள்ளது.
இதன பிரகாரரம் இந்த 5 ஆண்டு கால ஒப்பந்தத்திற்கு அமெரிக்கத் தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
பெரும்பாலும் இந்த 30 நாட்கள் முடிந்தவுடன் அமெரிக்க அரசு மீண்டும் ரஷ்ய எரிபொருள் மீது தடைகளை விதிக்கவே அதிக வாய்ப்புள்ளது.
இந்த இக்கட்டான நிலைக்கு மத்தியில் ரஷ்யாவும் ஒரு கடுமையான முடிவை அறிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் மாதம் முதல் எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்த ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எரிபொருள் தாராளமாகக் கிடைத்த காலத்தில் ரஷ்யாவை மதிக்காத நாடுகளுக்குப் பாடம் புகட்டவே புடின் இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பலரும் கருதுகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ரஷ்ய எண்ணெயைப் பெறுவது கடினமாகி, நாடு மீண்டும் ஒரு எரிபொருள் நெருக்கடியைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாடு திரும்பிய ரணில்
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதன்பின்னர் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை முடித்துக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை காலை நாடு திரும்பினார்.
ரணில் வரும் தினத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட ஒருசில நெருக்கமானவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்.
ரணிலை விமான நிலையத்தில் வரவேற்பதற்காகப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, வஜிர அந்த இரகசியத்தைப் பாதுகாத்தார். ரணிலுக்குச் சற்று ஓய்வு தேவை என்றும் சந்திப்புகளைக் குறைக்க வேண்டும் என்றும் மருத்துவ அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி, ரணில் சில வாரங்கள் ஓய்வெடுக்க உள்ளார். ரணில் வெளிநாடு செல்வதற்கு முன்பே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியவை ஒரு மாத காலத்திற்குள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்து அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பணிகள் குறித்து வஜிரவுடனும், கூட்டு எதிர்க்கட்சியின் பணிகள் குறித்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடனும் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தனது கருத்தை அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, நாரஹேன்பிட்டியில் உள்ள பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் கூட்டு எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து அங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் கூட்டுவது பொருத்தமானது என்றும் அங்கு தீர்மானிக்கப்பட்டது.
கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், அது ஒரு சிறந்த விடயம் என்றும், இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் ஜி.எல். பீரிஸ் அங்கு குறிப்பிட்டார்.
(லியோ நிரோஷ தர்ஷன்)

