ஹோர்மூஸ் நீரிணையை “பொருளாதார அணு ஆயுதம்” எனக் குறிப்பிட்ட அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, இரான் அதனை உலகுக்கு எதிராகப் பயன்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், “உலக எரிசக்தியின் 20 முதல் 25 சதவிகிதத்தை தன்னால் முடக்க முடியும் என இரான் பெருமையாக கூறுகிறது.

இரானுக்கு அணு ஆயுதங்கள் கிடைத்தால் கற்பனை செய்து பாருங்கள், அது ஒட்டுமொத்த உலகத்தையும் பணயம் எடுத்துவிடும்.” என்றார்.

இந்த மோதலுக்குப் பிறகு இரான் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உலகம் புரிந்துகொள்ளும் என நம்புவதாகவும் மார்கோ ரூபியோ தெரிவித்தார். அணு ஆயுதத்தால் அடைய விரும்பும் இலக்குகளை தற்போது எண்ணெய் மூலம் இரான் நிறைவேற்றி வருகிறது என்றும் கூறினார்.

“மோதலுக்கு முன்பாக இரான் எதிர்கொண்ட பிரச்னைகள் அப்படியே தான் இருக்கின்றன அல்லது மோசமடைந்துவிட்டன. ஆனால் தற்போது அதனிடம் முன்பு இருந்ததைவிட பாதி எண்ணிக்கையிலான ஏவுகணைகள் மட்டுமே உள்ளன, எந்த தொழிற்சாலைகளும் இல்லை. அதன் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டது,” என்றும் அவர் தெரிவித்தார்.

இரானில் நடைபெற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை பற்றி பேசிய அவர், “இரானிய மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோமே தவிர, தெருக்களில் 30,000-இல் இருந்து 40,000 பேர் கொல்லப்படுவதை அல்ல.” என்றார்.

இரான் அதிஉயர் தலைவர் உயிருடன் உள்ளாரா? – அமெரிக்க வெளியுறவு செயலாளர் அளித்த பதில்

மொஜ்தபா காமனெயி

இரானில் அதிகாரம், ‘கடும்போக்கு சிந்தனை’ கொண்டவர்களின் கைகளிலேயே இருப்பதாக, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் ரூபியோ கூறுகையில், “மதரீதியாக கடும்போக்கு சிந்தனை கொண்ட தனிநபர்கள், இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) அதிகாரிகளாக மட்டுமல்லாமல், இரானிய அரசியலிலும், அவர்களைச் சுற்றியுள்ள ஆலோசனைக் குழுக்களிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.” என்றார்.

இந்தப் பேட்டியின்போது, இ​ரானின் புதிய அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி உயிருடன் இருப்பதாக அவர் கருதுகிறாரா என்று ரூபியோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த மார்கோ ரூபியோ, “ஆம்; அவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எங்களிடம் உள்ளன, ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அவர் உயிருடன் இருப்பதாக இரானும் தொடர்ந்து கூறி வருகிறது,” என்று தெரிவித்தார்.

ஆயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு அதிஉயர் தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா காமனெயி-யின்எந்தவொரு காணொளி அல்லது ஒலிப்பதிவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும், ஊடகங்களில் அவரது எழுத்துப்பூர்வமான செய்திகள் மட்டுமே வெளியாகியுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share.
Leave A Reply