தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அறிமுகக் களத்திலேயே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்று ஏக்ஸிஸ் மை இந்தியா கணித்துள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழகச் சட்டப்பேரவையில், தவெக 98 முதல் 120 இடங்கள் வரை வெல்லக்கூடும் என்றும், சுமார் 35 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தற்போதைய ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணிக்கு (92 – 110 இடங்கள்) மிகக் கடுமையான சவாலாக அமைந்துள்ளது.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் விஜய்யின் செல்வாக்கு அதிகமாக இருப்பதே இந்த எழுச்சிக்குக் காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேவேளை, அதிமுக தலைமையிலான கூட்டணி இந்தத் தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் தேர்தல் முடிவுகளைக் காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறது.

