வாஷிங்டனில் அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் அதிகாரிகளை சந்திக்க பிரபாகரன் அனுப்பி வைத்த நபர், அவரது மனைவி மதிவதனியின் நெருங்கிய உறவினர் என்றும், அந்த சந்திப்புக்கு முன், ஸ்டேட் டிபார்ட்மென்ட் அதிகாரிகள், இந்த உறவினர் தொடர்பான ‘பேக்ரவுன்ட் செக்யூரிட்டி செக்’ ஒன்றை செய்து பார்த்தபோது, வாஷிங்டன் அதிகாரிகளுக்கு தலை சுழன்றது என்றும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா?

அமெரிக்கா, தமது ஐரோப்பிய நேச நாடு உளவுத்துறை ஒன்றின் மூலமாகவே அந்த நபர் பற்றிய ‘பேக்ரவுன்ட் செக்யூரிட்டி செக்’ செய்தது.

ஐரோப்பிய நகரம் ஒன்றில் வசித்த அந்த உறவினர் (இப்போதும் ஐரோப்பாவில்தான் உள்ளார்), அந்த நாட்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்பதற்கு பொறுப்பாளராக இருந்தார். விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதில் அவர் வைத்திருந்த கொள்கை, மிக சிம்பிள்: ‘மயிலே மயிலே இறகு போடு என்றால், போடாது’

இதனால், இவர் நிதி சேகரித்த பகுதியில் வசித்த தமிழர்கள் தாமாக நிதி கொடுத்துவிட்டால் சரி. இல்லாவிட்டால், முதலில் மிரட்டல், அடுத்து ‘ஆளை தூக்குதல்’ என்ற நடைமுறைதான். அதுவும், நிதி கொடுக்க மறுத்தது தனிப்பட்ட நபராக இல்லாமல், ஒரு (தமிழரின்) வர்த்தக நிறுவனம் என்றால், ‘புகுந்து விளையாடி’ விடுவார்.

இதனால் அவர்மீது சில கிரிமினல் புகார்களும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், பெரும்பாலானவர்கள் புகார் செய்யவில்லை. (இப்போது புலிகள் இல்லாது போனபின், தாம் வசித்த நகரத்தையே மாற்றிவிட்டார். பெரிதாக வெளியே தலைகாட்டுவதில்லை)

அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் அதிகாரிகளுடன் பேசுவதற்காக விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இந்த நபரை பிரபாகரன் அனுப்பி வைத்தால், வாஷிங்டன் அதிகாரிகளுக்கு தலை சுற்றுமா? இல்லையா? இவருடன் அவர்கள் ‘மனித உரிமை மீறல்கள்’ பற்றி எதை டிஸ்கஸ் பண்ண முடியும்?

மொத்தத்தில், அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்ட நேரத்தில் இந்த நபர் தலைமையிலான விடுதலைப்புலிகள் குழுவை, அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட்டின் நடுத்தர பதவிநிலை அதிகாரி ஒருவர்தான் சந்தித்தார். அவரும் சும்மா ஒப்புக்கு நாலைந்து கேள்விகளை கேட்டுவிட்டு, கைகுலுக்கி இவர்களை அனுப்பி வைத்துவிட்டார்.

அதன்பின் அமெரிக்கா, இலங்கை அரசுக்கு ராணுவ உதவி என்ற வகையில், கடந்த பாகத்தில் நாம் குறிப்பிட்ட ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல் ராணுவ பயிற்சி கொடுக்க தீர்மானித்தது.

ரகசியமாக செய்யப்பட்ட ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல் பற்றிய தகவல்கள், ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியே தெரியவந்தபோது, அப்போதுகூட உடனே இலங்கை மீடியாக்களில் விபரங்கள் வெளியாகவில்லை. சர்வதேச ராணுவ சம்பந்தமான மீடியா (ஜேன் டிஃபென்ஸ்) இதுபற்றி துருவ தொடங்கியது.

அதையடுத்து இந்த விவகாரம் அந்த நாட்களில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அப்போது இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் அமெரிக்க பாதுகாப்பு துறையிடம் கருத்து கேட்டபோது, அமெரிக்க ராணுவத்தில் இலங்கை விவகாரங்களை கவனித்த அதிகாரியான கர்னல் கார்ள் காக்ரம் என்ன சொன்னார் தெரியுமா? “We have no dog in this fight” என்றார்.

திருக்குறள் போல சுருக்கமாக சொல்லப்பட்ட இந்த ஒற்றை வாக்கியத்துக்கு என்ன அர்த்தத்தை எடுத்துக் கொள்வதென்று அப்போது யாருக்கும் புரியவில்லை.

ஆனால், அமெரிக்கா பாதை போடத்தொடங்க, இலங்கை அரசு அந்தப் பாதையில் பாலம் போட்டு பயணம் செய்யத் தொடங்கிவிட்டது. அமெரிக்கப் பயிற்சியைத் தவிர வேறு சில ராணுவ சாதனங்களையும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள இலங்கை அரசு காய் நகர்த்தியது.

அதாவது இலங்கையில் மனித உரிமை மீறல்களின் எண்ணிக்கை குறைந்து போனதாக அமெரிக்க மானிட்டர்களின் அறிக்கை செனட்டின் பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததால் இலங்கைக்கான ஆயுத விற்பனையிலுள்ள சில தடைகளை நீங்கி, தங்குதடையில்லாமல் அமெரிக்க ஆயுதங்களைப் பெறும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியது.

சும்மா சொல்லக்கூடாது. இலங்கை அரசின் இந்த முயற்சி ஓரளவுக்கு பலிக்கத்தான் செய்தது.

முதல் கட்டமாக அமெரிக்கா 6 ரோந்துப் படகுகளை இலங்கை கடற்படைக்கு கொடுத்தது. கூடவே அவற்றில் பொருத்துவதற்கு தேவையான ஆயுதங்களையும், ராணுவ ஹெலிகாப்டர்களையும் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. அத்துடன் இரவு நேர தாக்குதல்களில் உபயோகிக்கப்படும் Night vision deviceகளை இலங்கைக்கு கொடுக்க அமெரிக்க கொள்கையளவில் இணங்கியது.

இந்த இடத்தில் இலங்கை அரசின் ராணுவ சாதன கோரிக்கை ஒரு யு-டர்ன் அடித்தது. காரணம் அப்படியான சமாச்சாரம் ஒன்றை இலங்கை கேட்டது.

அப்படி என்னதான் இலங்கை அரசு கேட்டது தெரியுமா? அமெரிக்க SIT (Satellite Imaging Technology) வேண்டும் என கோரிக்கை வைத்தது இலங்கை.

அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் அதிகாரிகளுடன் பேசுவதற்கு பிரபாகரன் தனது மனைவியின் உறவினரை அனுப்பியபோது, வாஷிங்டன் அதிகாரிகளுக்கு எப்படி தலை கிறுகிறுத்ததோ, அதேபோல, இலங்கை அரசு தமக்கு SIT தாருங்கள் என கோரிக்கை வைத்தபோதும், வாஷிங்டன் அதிகாரிகளுக்கு தலை கிறுகிறுத்திருக்கும்!

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஹெலிகாப்டர், ரோந்துப் படகு, இரவுநேர தாக்குதலுக்கான உபகரணங்கள் போன்றவை சில்லறை சமாச்சாரங்கள். அவற்றை இலங்கைக்கு தூக்கிக் கொடுப்பது அவர்களுக்கு ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. ஆனால் Satellite Imaging Technology அல்லது Us Mapping Technology அப்படியல்ல.

ஒரு வேளை இலங்கைக்கு அவற்றைக் கொடுத்தால், இலங்கை ராணுவம் அதை எப்படி உபயோக்கும் என்றும் உறுதியாக தெரியாது – இலங்கை ராணுவம் அதை எப்போது விடுதலைப் புலிகளிடம் பறிகொடுக்கும் என்றும் சரியாக தெரியாது.

இதனால் அமெரிக்கா இலங்கைக்கு கூறிய பதில் “Satellite Imaging Technology இப்போதைக்கு உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு கிட்டத்தட்ட அப்படியான தொழில்நுட்பம் ஒன்று தேவையென்றால், இஸ்ரேலிடம் வாங்குங்கள். நாங்களும் அவர்களிடம் சொல்லி வைக்கிறோம்” என்று இஸ்ரேல் பக்கமாக கையைக் காட்டிவிட்டது.

இந்தப் பேச்சுகள், கொடுக்கல்-வாங்கல்கள் ஒருபுறமாக நடந்து கொண்டிருக்க, அமெரிக்காவின் ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல் ரகசிய ராணுவ பயிற்சி, இலங்கையில் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.

அமெரிக்க ராணுவ ரேங்கிங்களில் CINPAC என்று ஒரு பதவியுண்டு. விரிவாக்கம் US Commander-in-Chief Pacific. இவரது அதிகாரத்தின் கீழ்தான் அநேக ஆசிய நாட்டு ராணுவங்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் வருகின்றன.

இலங்கை ராணுவத்திற்கு ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல் திட்டத்தில் இலங்கை வீரவில விமானத்தளத்தில் கொடுக்கப்பட்ட பயிற்சிகளும், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இலங்கைக்கு வெளியே, அமெரிக்காவில் வைத்துக் கொடுக்கப்பட்ட பயிற்சிகளும், இவரது கமாண்டின் கீழ்தான் கொடுக்கப்பட்டன. ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல் பயிற்சிகளை கொடுப்பதற்காக கொழும்பு சென்று இறங்கிய 12 பேரும், இந்த கமாண்டின் அதிகாரத்தின் கீழ் இருந்த ஆட்கள்தான்.

இவர்கள் எந்தவொரு நாட்டு ராணுவத்திற்கும் பயிற்சி கொடுக்கும் முன்னர் அது பற்றிய செய்திக்குறிப்பு ஒன்றை அமெரிக்க ராணுவம் வெளியிடுவது வழக்கம். ஆனால் ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல் ராணுவப் பயிற்சியை இலங்கையில் கொடுப்பது என்று திட்டமிடப்பட்டபோதும் சரி, முதலாவது பேட்ச் ஆட்கள் இலங்கை போய் இறங்கியபோதும்சரி, விஷயம் வெளியிடப்படவில்லை என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இலங்கை ராணுவத்திற்கு வீரவில விமானத்தளத்தில் வைத்து பயிற்சி கொடுத்த அமெரிக்க ராணுவ குழுவினரின் தலைவராக செயல்பட்டவரின் பெயர், கேப்டன் ஜார்ஜ் மெக்டோனல்ட்.

முதலில் ரகசியமாக இருந்த Operation Balanced Style பற்றிய விபரங்கள் ஜேன்ஸ் டிஃபென்ஸ் மூலம் வெளியே தெரிய வந்தபின் கேப்டன் ஜார்ஜ் மெக்டோனல்ட் கொடுத்திருந்த பேட்டி ஒன்று அந்த நாட்களில் ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்திருந்தது (அட, அப்போதுகூட இலங்கை, இந்திய மீடியாக்களில் அது வெளியாகவில்லை).

அதில் அவர் இலங்கை வீரவில விமானத்தளம் பற்றி குறிப்பிட்டபோது – “எனது வாழ்க்கையில் விமானத்தளம் ஒன்றில் மயில்கள் நடமாடுவதை இலங்கையில்தான் பார்த்தேன்” என்று தமாஷாக கூறியிருந்தார்.

அவரால் பயிற்சி கொடுக்கப்பட்ட இலங்கை விமானப்படையைச் சேர்ந்தவர்கள் பயிற்சி முடிந்து வடக்கே தாக்குதலுக்கு சென்றபோது, கீழே மயில்கள் இருக்கவில்லை. புலிகள் இருந்தார்கள்!

1990-களின் ஆரம்பத்தில், இலங்கை விமானப்படை விமானிகள் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்த சென்றபோது, ‘எண்ணைச் சட்டிக்குள் போண்டா போட்டதுபோல’ குத்துமதிப்பாக குண்டு போட்டுவிட்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இரவு நேர விமானத் தாக்குதல்களில் அவர்கள் ஈடுபட்டதே இல்லை. அமெரிக்கப் பயிற்சியின் பின்னர்தான் அவர்களது குண்டுவீச்சு டெக்னிக்குகள் மேம்பட தொடங்கின.

இறுதி யுத்தத்தின்போது 2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி, கிளிநொச்சியில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்செல்வனின் மறைவிட வீடு இருந்த பகுதிக்கு மேல், இருள் விலகாத அதிகாலை நேரத்தில், இலங்கை விமானப்படையில் அமெரிக்க பயிற்சி பெற்ற விமானிகளால் செலுத்தப்பட்ட விமானங்கள் பறந்து வந்தன.

விமானங்கள் வருவது தெரிந்து தமிழ்செல்வனும் அவருடன் இருந்தவர்களும் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி, தரையடி பங்கர் ஒன்றுக்குள் சென்று மறைந்தனர்.

அந்த இருள் நேரத்திலும், இலங்கை விமானப்படை விமானங்கள் இரு குண்டுகளை துல்லியமாக அந்த தரையடி பங்கரின் வாயில் பகுதியில் வீசின. தமிழ் செல்வனும் அவருடன் இருந்த 5 பேரும் பங்கருக்கு உள்ளேயே மரணமடைந்தனர்.

இந்த துல்லியத் தாக்குதலுக்கு, அமெரிக்க ராணுவம் கொடுத்த பயிற்சி மட்டுமே காரணமல்ல. அமெரிக்கர்களால் கொடுக்கப்பட்ட, இரவு நேர தாக்குதல்களில் பயன்படும் Night vision deviceகளும்கூட ஒரு காரணம்தான்!

(தொடரும்)

Share.
Leave A Reply

Exit mobile version