எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்திய பெரு நிலமும் இச்சிறிய இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்ததென பூகோள வரலாறு சாட்சியம் பகர்கின்றது. அது மட்டுமல்ல இராமரின் வானரப்படைகள் சிறு கடலால் பிரிக்கப்பட்டிருந்த இலங்கைக்கு பாலம் அமைத்தார்கள் என இராமாயணம் கூறுகின்றது.
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டளவில் சிங்களவர்களின் மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து வந்தார்கள். அவ்வாறே தமிழர்களின் மூதாதையர்களும் இந்தியாவிலிருந்தே வந்தார்கள். புத்த மதமும், இந்து மதமும் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
பூகோள ரீதியாக தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஏற்படும் பூமி அதிர்ச்சியின் அதிர்வலைகள் இலங்கையில் உணரப்படும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இறுக்கமான சமுதாய உறவுகள் பலவுண்டு.
தமிழ் நாட்டு உறவு
தமிழ் நாடு தமிழர்களின் தாயகமாகும். ஏறக்குறைய ஆறு கோடி தமிழர்களின் வதிவிடமாகும். இலங்கையில் வாழும் தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். இலங்கை தமிழர்களுக்கு தீங்கு ஏதும் நடந்தால் தமிழ் நாடு கொதித்து எழும். பலவித போராட்டங்கள் நடத்தப்படும்.
இந்திய மத்திய அரசிற்கு பலவகை அழுத்தங்களை ஏற்படுத்துவர். அதனால் இந்திய மத்திய அரசு தான் நினைத்தபடி ஆட முடியாமல் போவதும் உண்டு.
மீனிற்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டும் விலாங்கின் குணம் படைத்த அரசியலில் இந்திய மத்தியரசு பயணிப்பதுமுண்டு. எது என்னவாக இருந்தாலும் எப்பொழுதும் எவ்விடத்திலும் இந்தியாவின் நலவுரிமையை பேணிக்காப்பதுவே அதன் முதன்மையான அரசியல் நிலைப்பாடாகும்.
மேலே விபரித்த அரசியல் சூழ்நிலையில் தான் இலங்கை-இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. (indo srilanka agreement) அவ்வாறே இந்திய நலவுரிமையை பேணிக்காப்பதற்காக எழுதப்பட்ட உடன்படிக்கையாகவே இது திகழ்கிறது.
உடன்படிக்கையுடன் கடிதங்கள்
இந்திய பிரதமருக்கும் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிற்குமிடையில் கடிதங்கள் பரிமாறப்பட்டன. அவையாவும் உடன்படிக்கையின் பகுதியாகவும் பாகமாகவும் கணிக்கப்பட்டன. அக் கடிதங்களில் முக்கியமாக மூன்று விடயங்கள் குறிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவையாவன
1. இந்தியாவின் நலவுரிமைகளுக்கு பாதகமாக திருகோணமலை துறைமுகம் மற்றும் இலங்கையின் துறைமுகங்கள் யாவும் இராணுவ பாவனைக்கு வேறு எந்த நாடும் பயன்படுத்துவதற்காக கொடுக்கப்படாது.
2. திருகோணமலை எண்ணெய் குதங்கள் திருத்துதல், செயல்படுத்துதல் ஆகியன யாவும் இந்தியாவும் இலங்கையும் இணைந்து கூட்டு முயற்சியாக செயற்பட வேண்டும்.
3. வெளிநாட்டு வானொலி அமைப்புக்களுடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் மீளாய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாப்புச் செய்யப்பட வேண்டும்.
அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்டவை பொதுமக்களின் பாவனைக்கான ஒலிபரப்பாக இருக்க வேண்டுமேயன்றி இராணுவ புலனாய்வு விடயங்களுக்கு உபயோகிக்கவே கூடாது.
மேலே விபரிக்கப்பட்டுள்ள மூன்று விடயங்களும் இந்தியாவின் பாதுகாப்புக்குரிய முக்கிய விடயங்கள். இந்தியாவின் பாதுகாப்பு இந்தியாவின் நலவுரிமையாகும்.
இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைகள் பாதுகாப்பு யாவும் பின் தள்ளப்பட்டன. இந்தியாவின் பாதுகாப்பிற்காக இலங்கை தமிழர்களின் உரிமைகள் பலி கொடுக்கப்பட்டவையே.
உடன்படிக்கையின் பிரிவு 2: 15
உடன்படிக்கையின் பிரிவு 2: 15 மிக முக்கியமானது. அப்பிரிவு என்ன கூறுகின்றது? அப்பிரிவு திட்டவட்டமாக பின்வருமாறு கூறுகின்றது. 04.08.1986 தொடக்கம் 19.12.1986வரையும் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானம் எடுக்காத மிகுதிப் பிரேரணைகள் முடிவெடுக்கப்பட்டு அவற்றை ஏற்றுக் கொள்வதென்ற நிபந்தனைக்கமைய இப் பிரேரணைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
உடன்படிக்கை கையெழுத்திட்ட ஆறு கிழமைக்குள் மேற்குறித்த காலத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு ஏற்ப இந்தியாவும் இலங்கையும் தீர்க்கமான முடிவை எட்டுவார்கள்.
இலங்கை அரசாங்கம் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா தனது நேரடி ஒத்துழைப்பை வழங்கும். மேற்குறித்த காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாகவே இந்திய ஒத்துழைப்பு இருக்கும்.
2:15 these proposals are also conditional to an accepance of the proposals negotiated from 04.05.1986 to 19.12.1986. residual matters not finalised during the above negotiations shall be resolved between india and sri lanka within a period of six weeks of signing This agreement. these proposals are also conditional to the government of india co -– operating directly with the Government of sri lanka in their implementation.
04.05.1986 தொடக்கம் 19.12.1986 வரையுமுள்ள காலப்பகுதிக்குள் கலந்து ஆலோசித்து தீர்வு எடுக்க முடியாமல் போன விடயங்களுக்கு உடன்படிக்கை கைச்சாத்திட்ட 6 கிழமைக்குள் தீர்வு எட்டப்படுமென்று கூறப்பட்டுள்ளது.
ஆறு கிழமைக்குள் தீர்க்கமான தீர்வு எட்டிய பின் உடன்படிக்கை கைச்சாத்திட்டிருக்கலாம் தானே. ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்கக் கூடாதா? உடன்படிக்கையில் விபரித்தவாறு ஆறு கிழமைக்குள் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.
6 கிழமை 13.09.1987 இல் முடிவிற்கு வருகின்றது.
13.09.1987வரையும் எவ்வித முயற்சிகளையும் இந்தியா எடுத்தமைக்கு ஆதாரம் இல்லை. இவற்றை இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்குள் சேர்க்கவில்லை. மாகாண சபைகள் சட்டத்தில் சேர்க்கவில்லை.
இவற்றிற்கு தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்காது இலங்கை அரசாங்கம் மேற்கூறிய இரு சட்டமூலங்களை வெளியிட்டதை இந்தியா எவ்வாறு அனுமதித்தது? 13ஆவது திருத்தம் கொண்டு வந்தது போல இத்தீர்மானங்களை உள்ளடக்கி இன்னுமோர் அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படவில்லை?
இன்று வரை 04.05.1986தொடக்கம் 19.12.1986 வரையும் கலந்தாலோசித்த விடயங்கள் எவை, என்ன தன்மை கொண்டவை விடயப்பொருள்கள் என்ன என்று இந்திய மக்களுக்கு தெரியப்படுத்தவே இல்லை. முற்று முழுதாக அவற்றை கைவிட்டது இந்தியா. எவரிற்கு நன்மை செய்தது இந்தியா? தமிழர்களுக்கா அல்லது பௌத்த சிங்கள மேலாதிக்கம் கொண்ட இலங்கை அரசிற்கா நன்மை ஏற்பட்டது?
எல்லா வகை தீர்மானங்களையும் செயல் வடிவம் கொடுப்பதற்கு ”இந்தியா அண்ட நைட்” காப்புறுதி செய்துள்ளது. அந்த காப்புறுதியையும் காற்றிலே பறக்க விட்டது இந்தியா. தமிழர்களின் உரிமையை நசுக்கி மழுங்கச் செய்து அழித்து அவர்கள் நட்டாற்றில் தள்ளிவிடப்பட்டார்கள். அப்பாவித் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் அழிந்த பின் கூட இந்தியா சரியான திசைக்கு திரும்பவே இல்லை.
உடன்படிக்கையின் பிரிவு 2: 14
பிரிவு 2 : 14 பின்வருமாறு கூறுகிறது. the government of india will under wright and guarantee the resoluations and co – operate in the implementation of these proposals
இந்திய அரசாங்கம் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு திடசங்கற்பம் கொண்டுள்ளது. அத்தோடு உத்தரவாதமும் அளிக்கிறது. இந்தப் பிரேரணைகளை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பும் வழங்குகின்றது என கூறப்பட்டுள்ளது. ஆனால் செயலில் இந்தியா மயான அமைதி காத்து நிற்கின்றது.
இராமாயணத்தில் வாலிவதை படலம் வருகின்றது. வாலியுடன் நேர் நின்று யுத்தம் செய்து வெல்ல முடியாது. ஆனால் நேர் நின்று யுத்தம் செய்தால் நேர் நின்று யுத்தம் செய்பவரின் பலத்தில் சக்தியில் அரைப்பங்கு வாலிக்கு சென்று விடும்.
அதனால் இராமன் மறைந்து நின்றுதான் வாலிக்கு அம்பெய்தான். இலங்கையில் அக்காட்சி மாற்றம் அடைகின்றது. இராமன் இந்திய மத்திய அரசாகவும் வாலி பௌத்த சிங்கள மேலாதிக்கம் கொண்ட இலங்கை அரசாகவும் சுக்கிரீவன் தமிழர்களாகவும் தோற்றம் பெறுகின்றார்கள்.
இந்திய வல்லரசு நாடாகத் தோன்றினாலும் இச்சிறிய இலங்கையின் இராஜதந்திர அரசியல் நகர்வுகளால் மழுங்கடிக்கப்படுகின்றது. உதாரணங்கள் பலவுண்டு. விரிவிற்கஞ்சி இங்கு விபரிக்கப்படவில்லை.
தமிழர்களின் பிரச்சினையிலும் இந்தியா மறைந்து நின்றுதான் செயல்படுகின்றது. அவர்கள் செய்யும் அரசியல் யுத்த செயல்பாடுகளால் காக்கப்பட வேண்டிய சுக்கிரீவனான தமிழர்கள் படுகாயமடைந்து மரணித்து நாதியற்றவர்களாக உருமாறி விட்டார்கள்.
13வது திருத்தமும் மாகாண சபையும்
13ஆவது அரசியலமைப்பின் திருத்தத்தின் மூலமும் மாகாண சபைகள் சட்டத்தின் மூலமும் மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. காய்தல், உவத்தல் இன்றி வெறுப்பு விருப்பின்றி மாகாண சபைக்கான அதிகாரங்களை அலசிப்பார்த்தால் எவ்வித அதிகாரங்களும் மாகாண சபைக்கு கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகும்.
மாகாண சபை அரசாங்கத்தின் ஓர் முகவர் நிலை அந்தஸ்த்தை பெற்றுள்ளது. முகவராகவே செயல்படுகின்றது. அவ்வாறு செயல்பட வேண்டும். மாகாண சபைக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படும் அதிகாரங்கள் எதனையும் மாகாண சபை சுயமாக சுதந்திரமாக செயல்படுத்த முடியாது.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஆளுநர், அமைச்சு செயலாளர் கொடுக்கின்ற பிச்சையைத்தான் மாகாண சபை ஏற்க வேண்டும். இவர்கள் மாகாண சபைக்கு அதிகாரங்களைக் கொடுக்கலாம். எடுக்கலாம்.
குறைக்கலாம். மழுங்கடிக்கலாம். ஒருகையால் கொடுத்ததை மறுகையால் அக்கணமே எடுத்து விடலாம். காலையில் கொடுத்ததை மாலையில் எடுக்கலாம். மாகாண சபையால் இவற்றிற்கு எதிராக ஒன்றுமே செய்து விட முடியாதது.
இந்திய அரசியல் முறைமை
இந்திய அரசியல் முறைப்படி அரசியலமைப்பிலிருந்தே நேரடியாக மாநிலங்களுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கென வரையறுத்துக்கொடுக்கப்பட்ட அதிகாரங்களை நேரடியாக செயல்படுத்த முடியும்.
இந்திய ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் ஆளுநர் செயலாளர்கள் இவர்கள் போன்றவர்களின் கருணையால் மாநிலங்கள் இயங்கவில்லை. மாகாண சபையும் அவ்வாறு செயல்படுவதற்கான செயல்பாடுகளை இந்தியா செய்யவில்லை.
இப்பொழுது இந்தியா பகிரங்கமாகவே கூறுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இலங்கை அரசாங்கத்துடன் கதையுங்கள். மாகாண சபைக்கான அதிகாரங்களை ஜனாதிபதியுடன் கதைத்துப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி தனது இயலாமையை தெரிந்தோ, தெரியாமலோ வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி.
ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் சட்டங்களில் வரையப்பட்டுள்ள சிறுபான்மை காப்புகளை அலசிப்பார்க்கின்றோம். ஆனால் சீனாவில் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காப்புகளை எட்டி நின்றும் பார்ப்பதில்லை.
சீனா கம்யூனிச சர்வாதிகார நாடு. என்ன அங்கு நடக்கின்றது என யாரும் நுழைந்து பார்க்க முடியாது என்ற எண்ணம் பலரது மனத்தில் பதிந்துள்ளது. அதனால் சீனாவில் சிறுபான்மை மக்கள் கேவலமாக நடத்தப்படுகின்றார்கள் என்ற தவறான எண்ணம் பலரது மனதிலும் உள்ளது. உண்மை அவ்வாறு இல்லை என்பதே உண்மையாகும்.
சீனாவில் 155க்கு மேற்பட்ட சிறுபான்மை இனத்தவர்கள் வாழ்கின்றார்கள். அவர்களது உரிமைகள் யாவும் அரசியலமைப்பின் பிரகாரம் நன்றாகப் பேணி காப்பாற்றப்படுகின்றன. செயல் முறையிலும் எவ்வித நழுவல் தளும்பல் இல்லாமல் செயல்படுத்தப்படுகின்றன.
முக்கியமாக மூன்று விடயங்களைப் பற்றி இப்பொழுதிற்கு விபரிக்கப்படுகின்றன.
தமிழ் தேசிய மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்களது தாயகம் Homeland என்பது போல சீனாவிலும் சிறுபான்மை மக்களின் தாயகம் எனும் கொள்கையை பேணி காப்பாற்றுகின்றார்கள்.
“The Minority people became master of their homeland and their own destinies” சிறுபான்மை மக்கள் தங்களது தாயக பூமிக்கு அவர்களே எஜமானர் தங்களது தலைவிதியை அவர்கள் தீர்மானிப்பதற்கு அவர்களுக்கே உரிமை உண்டு.
ஒவ்வொரு சிறுபான்மை இனமும் தங்களுக்குள் முரண்படாமல் ஒரு இனம் மற்றைய இனத்தை வீழ்த்தாமல் ஒற்றுமையாக அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் சீன அரசாங்கம் எல்லா வகையிலும் செயல்பாட்டையும் செய்து கொடுக்கும். இலங்கையில் அவ்வாறு செயல்படுத்துவதில்லை. சிறுபான்மை இனத்துக்குள்ளேயே பிரிவுகள் உருவாக் கப்படுகின்றன.
155 சிறுபான்மை இனத்தவர்களுக்கும் Autonomous Regions தன்னாட்சி பிர தேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களது மொழி, கலாசாரம், பண்பாடு, மத நம்பிக்கை வழிபாடுகள் யாவற்றையும் எவரது தலையீடும் இன்றி அனுபவிக்கலாம்.
தாயகக் கோட்பாடு மிக முக்கியமான கோட்பாடாக சீனாவில் பேணி காப் பாற்றப்படுகின்றது. இலங்கையில் தாயகம் (Homeland) என்றாலே தனி நாடு என்பது வேண்டாத அர்த்தம் கொடுக்கப்படுகின்றது. சீனாவில் அவ்வாறு இல்லை.
சீன அரசியலமைப்பின் பிரகாரம் சிறுபான்மை மக்களுக்கு பலவித உரிமை களை காப்புகளை சீன அரசாங்கம் கொடுத்துள்ளது. சீனா இலங்கையின் தலை சிறந்த நட்பு நாடு.
சீனா இலங்கைக்கு பலவித உதவிகளை செய்கின்றது. அதனால் சீனாவில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் எவ்வாறு பேணிக்காத்து வளர்க்கப்படுகின்றதென்பதனை ஆராய்ந்து சீனா காட்டும் தீர்வை நாமும் ஏன் பின்பற்றக்கூடாது.
எல்லா வகை முயற்சிகளிலும் தமிழர்களுடைய அரசியல் பிரச்சினை, அவர்களது உரிமைகள் யாவும் அமைதி வழியில் தீர்க்க வேண்டிய கடப்பாடு பௌத்த சிங்கள தேசிய மக்களுக்குண்டு. செய்வார்களா?
-சீ.வி.வீவேகானந்தன்-