‘ஒரு கட்சி ஆட்சி முறையில் நாட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள்’ என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்னர் பிரசுரமான கட்டுரையின் இறுதிப் பந்தியில், ‘ஒரு கட்சி முறை என்பது தனியொரு கோட்பாட்டின் ஊடாக அதிகாரத்தைக் குவிப்பதையும் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்கு புரட்சிகளுக்குப் பின்னர் நிறுவப்பட்டு வந்திருக்கிறது.

இது தொடர்பாகவும் பல கட்சிகளை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற ஜனநாயகங்களில் ஒரு கட்சி ஆட்சிமுறையைக் கொண்டுவருவது சாத்தியமா என்பது குறித்தும் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஆராயப்படும்’ என்றும் குறிப்பிட்டிருந்தோம். இன்று அது பற்றி கவனத்தைச் செலுத்துவோம்.

ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை ஒரு அரசியல் கட்சி மாத்திரமே கொண்டிருக்கும் ‘ஒரு கட்சி அரசுகளாக’ உலகில் இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளினால் அல்லது தேசியவாத இயக்கங்களினால் வழிநடத்தப்படுபடுகின்ற சீனா, கியூபா, வியட்நாம், லாவோஸ், வடகொரியா மற்றும் எரித்திரியா போன்றவற்றையே குறிப்பிட முடியும்.

ஏற்கெனவே கூறப்பட்டதைப் போன்று இந்த நாடுகளில் புரட்சிகள் அல்லது போர்களுக்குப் பின்னர் தனியொரு கோட்பாட்டின் ஊடாக அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காகவே ஒரு கட்சி ஆட்சிமுறை பேணப்படுகிறது.

மக்கள் சீனக்குடியரசு என்று அழைக்கப்படும் சீனாவில் இன்று இருப்பது தொழிலாளர்களும் விவசாயிகளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் முன்னெடுத்த புரட்சியின் மூலமாக 77 வருடங்களுக்கு முன்னர் நிறுவிய புரட்சிகர அரசு அல்ல.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கின்ற போதிலும், சீனா இன்று உலகில் இரண்டாவது பெரிய முதலாளித்துவ பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறிவிட்டது.

சீனாவின் ஆளும் வர்க்கம் அந்த பரந்து விரிந்த நாட்டில் அதிகாரக் கட்டமைப்பை இறுக்கமாகப் பேணுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அகல்விரிவான வலைப் பின்னலைத் தொடர்ந்து பாதுகாத்துப் பயன்படுத்துகிறது.

156 வருடகால பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கின் கட்டுப்பாட்டை 1997 ஜூலை முதலாம் திகதி சீனாவிடம் கையளித்தது.

அந்த அதிகார மாற்றத்துக்காக செய்யப்பட்ட 1984 சீன — பிரிட்டிஷ் பிரகடனத்தில் ஹெங்கொங் அதன் முதலாளித்துவ முறைமையை ஐம்பது வருடங்களுக்கு (2047 வரை) தொடர்ந்து பேணுவதற்கு அனுமதிக்கும் வகையில் ‘ஒரு நாடு, இரு முறைமைகள்’ ( One country, two systems) என்ற கட்டமைப்பை நடைமுறைப்படுத்த பெய்ஜிங் உறுதியளித்தது.

அந்த உறுதிமொழியின் மெய்யான அர்த்தம் ஐம்பது வருடங்களுக்கு பிறகு ஹொங்கொங் சோசலிச முறைமைக்கு மாறிவிடும் என்பதல்ல, சீனா முற்றாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ முறைமைக்கு மாறிவிடும் என்பதேயாகும்.

முற்றுமுழுதான அரசியல் உறுதிப்பாட்டை உறுதி செய்வதற்கும் பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தவும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்துக்கு சவால்கள் வருவதைத் தடுப்பதற்காகவும் ஒரு கட்சி முறை அவசியம் என்று கூறி சீனா அதை உறுதியாகப் பேணி வருகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்பு ரீதியான ஆதிக்கத்தினால் வரையறுக்கப்பட்டிருக்கும் ஒரு கட்சி முறையை மேற்கத்தைய ஜனநாயகத்துக்கு உறுதிவாய்ந்த ஒரு மாற்றாக சீனா முன்வைக்கிறது.

நீண்டகாலத் திட்டமிடல், ஒன்றிணைந்த கொள்கை நடைமுறைப்படுத்தல் மற்றும் ஆட்சியின் பாதுகாப்புக்கு அந்த முறை அவசியம் என்று சீனா வாதாடுகிறது.

தேசிய ஐக்கியத்துக்கும் உறுதிப்பாட்டுக்கும் அதன் தலைமைத்துவம் இன்றியமையாதது என்று நோக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அரச இயந்திர சாதனங்கள் சகலவற்றையும் அதன் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் தனது அதிகாரத்துக்கு சுயாதீனமான எந்தவொரு அமைப்பும் சவால் விடுக்க முடியாதவாறு உறுதிப்படுத்துகிறது.

தனியொரு கட்சி அரசைக் கொண்ட வியட்நாமில் கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரமே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஆளும் கட்சியாகும்.

கம்யூனிஸ்ட் கட்சியே வியட்நாமிய அரசினதும் சமூகத்தினதும் ஒரேயொரு தலைமைத்துவ அமைப்பு என்று அரசியலமைப்பு உறுதிப்படுத்துகிறது.

கியூபாவில் 1959 புரட்சிக்குப் பிறகு சட்டரீதியான அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு கட்சியாக இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

அரசை வழிநடத்தும் அதியுயர் அரசியல் நிறுவனம் அதன் மகாநாட்டை ஐந்நு வருடங்களுக்கு ஒரு தடவை நடத்துகிறது. தேசிய சட்டசபைக்கும் மாநகரசபைகளுக்கும் தேர்தல்கள் நடைபெறும் போது கம்யூனிஸ்ட் கட்சியே வேட்பாளர்களை பரிசீலித்து நிறுத்துகிறது.

வடகொரியாவில் தொழிலாளர் கட்சியே ஒரேயொரு ஆளும் கட்சி.

ஒரு கட்சி அரசைக் கொண்ட ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான மக்கள் முன்னணி என்ற கட்சியே அதிகாரத்தில் இருக்கிறது.

எதியோப்பியாவிடமிருந்து 1993 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த பிறகு ஜனாதிபதி ஐசைஸ் ஆவ்வெர்கியின் எதேச்சாதிகாரத் தலைமைத்துவத்தின் கீழ் இருந்துவரும் அந்த நாட்டில் தேசியத் தேர்தல்கள் ஒருபோதும் நடத்தப்படவில்லை.

சட்டபூர்வமான எதிர்க்கட்சி என்று எதுவும் கிடையாது. 1997 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அது ஒருபோதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை. அரசியலமைப்பு ‘செத்துவிட்டது’ என்று 2014 ஆம் ஆண்டில் பிரகடனம் செய்த ஜனாதிபதி தனது உத்தரவு மூலம் ஆட்சிசெய்து வருகிறார்.

ஒரு கட்சி அரசு கோட்பாட்டின் தோற்றுவாய்:

மாரக்சிய — லெலனிய அரசுகளே ஒரு கட்சி ஆட்சிகளாக படிப்படியாக வளர்ச்சியடைந்ததே வரலாறாக இருப்பதால் அந்த ஆட்சிமுறையின் தோற்றுவாயின் பின்னணி குறித்து விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்

தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி ‘பிற்போக்குவாதிகளை ஒடுக்கவும் சோசலிசத்தைக் கட்டியெழுப்பவும்’ வர்க்க போராட்டத்தின் தவிர்க்கமுடியாத கருவியாக ஒரு கட்சி ஆட்சியை மாவோ சேதுங் நோக்கினார்.

அந்த ஆட்சியை ‘மக்களுக்கான ஜனநாயகம் என்றும் பிற்போக்குவாதிகள் மீதான சர்வாதிகாரம் என்றும்’ மாவோ வரையறை செய்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமும் நிலைமாறு காலத்துக்கு உரியவை என்று வாதிட்ட மாவோ வர்க்கங்கள் இல்லாமல் போகும்போது வர்க்க போராட்டத்தின் சகல கருவிகளும் (கட்சிகளும் அரசு இயந்திரங்களும்) செயற்பாட்டை இழந்து விடும் என்று கூறினார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டிப்பான ஒழுங்கு கட்டுப்பாட்டை எதிர்த்த கட்சி அதிகாரிகளைத் தாக்குமாறு மக்களைத் ஊக்கப்படுத்தி 1960 களில் மாவோ கலாசாரப் புரட்சியை முன்னெடுத்தார். பிற்காலத்தில் மாவோவை கண்டனம் செய்வதற்கு எதிரிகள் பயன்படுத்திய வலிமையான ஆயுதமாக கலாசாரப் புரட்சிக்கால அத்துமீறல்கள் மாறின.

மாவோவுக்கு முன்னர் ரஷ்யாவில் விளாடிமிர் லெனின் ஒரு கட்சி ஆதிக்கத்தை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு இலக்காக இல்லாமல் ரஷ்யப் புரட்சியின் அவசியமான ஒரு விளைவாகவும் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த எதிரிகளிடமிருந்து பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாப்பதற்கு தேவையான கருவியாகவும் நோக்கினார்.

ஒரு கட்சி முறையை நியாயப்படுத்தியபோது லெனின் போல்ஷெவிக் கட்சியை அவர் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கிய ‘தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப் படை’ என்று வர்ணித்தார்.

முதலாளித்துவ ஜனநாயகம் எத்தனை கட்சிகளைக் கொண்டதாக இருந்தாலும் அது முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரமே என்றும் ஒரு கட்சி அரசு தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்தவரை, முதலாளித்துவ ஜனநாயகத்தை விடவும் ஆயிரம் மடங்கு கூடுதல் ஜனநாயகத் தன்மை கொண்டது என்றும் லெனின் வாதிட்டார்.

லெனின்

லெனினுக்கு முன்னர் காரள் மார்க்ஸ் வெளிப்படையாக ஒரு கட்சி அரசுக்காக குரல் கொடுக்கவில்லை என்றும் அத்தகைய அரசை நிறுவுவதற்கான விரிவான நிறுவன ரீதியான கோட்பாட்டையும் அவர் முன்வைக்கவில்லை என்றும் மார்க்சிய அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பரந்த கோட்பாட்டில் கவனம் செலுத்திய லெனின் தொழிலாளர் வர்க்கம் அதன் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கும் தனித்துவமான அரசியல் கட்சியொன்றை அமைக்க வேண்டிய தேவையிருக்கிறது என்று வாதிட்ட அதேவேளை, மார்க்சிய அரசுகள் பலவற்றில் பிற்காலத்தில் வெளிப்பட்டதைப் போன்ற சர்வாதிபத்திய கட்டமைப்பை (Totalitarian structure) அவர் மனதில் கொண்டிருந்தார் என்று கூறமுடியாது என்றும் அந்த அறிஞர் கூறுகிறார்கள்.

ஆனால், மார்க்ஸின் படைப்புக்கள் அரசாங்கத்தின் கட்டமைப்பு வடிவத்தைத் தெளிவற்றதாக விட்டுச் சென்றுவிட்டன என்று கூறும் அவர்கள் அவரது ஆருயிர் நண்பரான பிரெடரிக் ஏங்கெல்ஸ் நிரந்தரமான ஒரு கட்சி அரசுக்காக குரல் கொடுக்கவில்லை என்று வாதிடுகிறார்கள்.

சமூகப் புரட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக தொழிலாளர் வர்க்கம் அதற்கு எதிரான சகல பழைய கட்சிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமான அரசியல் கட்சியாக தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளாமல் செயற்பட முடியாது என்று ஏங்கெல்ஸ் நம்பினார்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாடு மார்க்சியத் தத்துவத்தில் முக்கியமானதாக இருந்தாலும், மார்க்ஸும் ஏங்கெல்ஸும் கூட்டாகத் தயாரித்த கம்யூனிஸ்ட் அறிக்கையில் ( Communist Manifesto 1848) அந்த பதம் இடம்பெறவில்லை.

பாரிஸ் கம்யூனின் (1871) தோல்விக்குப் பின்னர் மாத்திரமே தொழிலாளர் வர்க்கம் கைப்பற்றிய அதிகாரத்தை நிலை நிறுத்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவவேண்டும் என்று அவர்கள் இருவரும் தங்களது வேறு கட்டுரைகளில் எழுதினார்கள்.

புரூசியாவுடனான போரில் பிரான்ஸின் தோல்விக்கு பிறகு 1871 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரை ஆட்சி செய்த புரட்சிகர அரசாங்கமே பாரிஸ் கம்யூன் (Paris. Commune) என்று அழைக்கப்படுகிறது. பாரிஸ் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து அமைத்த அந்த மதசார்பற்ற, சோசலிச மாநகர ஜனநாயக ஆட்சி 72 நாட்களே ( 1871 மார்ச் 18 — மே 28) நீடித்தது.

பாரிஸ் மாநகரத்திற்குள் மே 21 பிரவேசித்த மூன்றாவது பிரெஞ்சு குடியரசு இராணுவம் ஒரு வாரகாலத்தில் 10 — 20 ஆயிரம் பேரைக் கொன்றொழித்து அந்த முன்னோடி தொழிலாளர் வர்க்க புரட்சிகர அரசை நசுக்கியது. அதற்கு பின்னர் மாத்திரமே தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் அதை நிலை நிறுத்துவதற்கு சர்வாதிகாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு மார்க்ஸும் ஏங்கெல்ஸும் வந்தனர்.

அவர்களின் விளக்கத்தின் பிரகாரம் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மார்க்சியத்தின் ஒரு முக்கியமான கொள்கையாகும். இது முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கும் மற்றும் ஒரு வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்குவதற்கும் இடைக்காலமாக தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் நிலையைக் குறிக்கிறது.

இது ‘முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்திற்கு’ மாற்றாக அமையும் ஒரு ‘தொழிலாளர் அரசு’ அல்லது ‘பாட்டாளி வர்க்க ஜனநாயகம்’ ஆகும். மார்க்சியம் சகல அரசுகளையும் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரங்களாகவே பார்க்கிறது.

பலகட்சி பாராளுமன்ற ஜனநாயகம்

இனிமேல் பல கட்சிகளைக் கொண்ட பாராளுமன்ற ஜனநாயக முறைமை மிகவும் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வரும் ஒரு நாட்டில் ஒரு கட்சி அரசை நிறுவுவது சாத்தியமா என்பது குறித்து நோக்குவோம்.

இலங்கை அரசு அடிப்படையில் இனத்துவ மேலாட்சித் தன்மையுடையதாக இருக்கின்ற போதிலும், ஆழமாக வேரூன்றிய பல கட்சி ஜனநாயக முறைமையைக் கொண்டிருப்பதால் ஒரு கட்சி ஆட்சியை நிறுவுவது என்பது சட்டரீதியாகவும் நடைமுறையிலும் சவால்மிக்கதாக இருக்கும் என்றும் குறிப்பாக, தென்னிலங்கையின் அரசியல் கலாசாரம் தீவிரமான கட்சி அரசியல் போட்டியைக் கொண்டதாக இருந்து வருவதால் ஒரு கட்சி மேலாதிக்கத்தை அது அனுமதிக்கக்கூடிய சாத்தியத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் முன்னைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுதந்திர இலங்கையில் தெற்கில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளுக்கும் இனமுரண்நிலையின் விளைவான மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கும் மத்தியிலும் கிரமமாக தேர்தல்களை நடத்தியதையும் ஆட்சியதிகார மாற்றம் அமைதியான முறையில் — அரசியலமைப்பின் பிரகாரமே இடம்பெற்று வந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால், ஒரு கட்சி ஆட்சியை அல்லது ஆதிக்கக்கட்சி அரசை (One – party rule or dominant – party state) நிறுவுவதற்கு பாராளுமன்ற ஜனநாயகம் பயன்படுத்தப்பட்ட உதாரணங்களும் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பாராளுமன்ற முறைமைகள் பல கட்சிப் பிரதிநிதித்துவத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டதாக இருக்கின்ற அதேவேளை, குறிப்பாக ஆளும் கட்சி பாராளுமன்றத்தை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போது கட்சிகளுக்கு இடையிலான போட்டிகளை ஒழிப்பதற்கு அந்த முறைமைகளை சூழ்ச்சித்தனமாகக் கையாளமுடியும்.

காலனித்துவத்துக்கு பின்னரான காலகட்டத்தில் (1960 களில் தொடங்கி 1980 கள் வரை) பல ஆபிரிக்க நாடுகளில் குறிப்பாக ஜூலியஸ் நியரேரேயின் கீழ் தான்சானியாவிலும் குவாமே என்குருமாவின் கீழ் கானாவிலும் காலனித்துவ வல்லாதிக்க நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட பாராளுமன்ற முறைமைகளைப் பயன்படுத்தி ஒரு கட்சி தனிக்கட்சி அரசுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தேசிய ஐக்கியம், செயற்திறன் மற்றும் அபிவிருத்திக்கு தனிக்கட்சி முறை அவசியமானது என்று அவர்கள் வாதிட்ட போதிலும், இறுதியில் அது தனியொரு இயக்கம் அதிகாரத்தை மத்தியமயப்படுத்துவதிலேயே போய்முடிந்தது.

நவீன உதாரணமாக, கிழக்கு ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் 2010 ஆண்டில் இருந்து பிரதமர் பதவியில் இருந்து வந்த கிறிஸ்தவத் தேசியவாத — தீவிர வலதுசாரி ஃபிடெஸ் கட்சியின் தலைவரான விக்டர் ஓர்பன், தனிக்கட்சி ஆட்சியை நடத்தாவிட்டாலும் அரசியலமைப்பையும் தேர்தல் சட்டங்களையும் மாற்றுவதற்கு பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை படுமோசமாகப் பலவீனப்படுத்தி ஆதிக்கக்கட்சி ஆட்சியை நிறுவினார்.

ஆனால், இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் அவர் படுமோசமான தோல்வியைச் சந்தித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஹங்கேரியில் மிகவும் நீண்டகாலமாக பதவியில் இருந்துவந்த ஓர்பனே அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

தேர்தல் நாட்களில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஹங்கேரிக்கு விஜயம் செய்தார். ஓர்பனின் தோல்வியை ஐரோப்பாவில் செல்வாக்குப் பெற்றுவரும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாக நோக்குகின்றன.

எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தல்

பாராளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மைப் பலத்தைக்கொண்ட அரசாங்கங்கள் எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்துவதில் எப்போதும் குறியாக இருந்து வந்திருக்கின்றன. இலங்கையில் குறிப்பாக, இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அந்தப் போக்கு மேலும் தீவிரமடைந்ததை அனுபவ வாயிலாக நாம் கண்டிருக்கிறோம்.

ஆளும் கட்சிகள் பொதுவில் எதிர்க் கட்சிகளின் தேர்தல் வாய்ப்புக்களை பலவீனப்படுத்தக்கூடிய தந்திரோபாயங்களையே கடைப்பிடிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தன ஒரு தடவை தேர்தல் இடாப்பைச் சுருட்டி வைப்பது குறித்துக் கூடப் பேசினார். ராஜபக்சாக்களின் ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு விலைபேசுவது ஒரு அரசியல் கலாசாரமாகவே இருந்தது.

முன்னைய எந்தவொரு அரசாங்கத்துக்கும் கிடைத்திராத பாராளுமன்றப் பெரும்பான்மை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இருக்கிறது. 2024 பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி. தலைவர்கள் தங்களுக்கு சுமுகமாக அரசாங்கத்தை நடத்தக் கூடிய பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தால் போதுமானது என்று வெளிப்படையாகக் கூறியபோதிலும், மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கினார்கள்.

அத்தகைய பிரமாண்டமான பெரும்பான்மைப் பலத்தை அரசாங்கம் கொண்டிருக்கின்ற அதேவேளை, எதிர்க்கட்சிகள் முன்னென்றுமில்லாத அளவுக்கு பலவீனப்பட்டிருப்பது ஒரு கட்சி ஆட்சியில் அரசாங்கம் நாட்டம் காட்டக்கூடும் என்ற பீதிக்கு முக்கியமான ஒரு காரணம். ஆனால், அத்தகைய எந்த முயற்சியிலும் அரசாங்கம் இறங்கக் கூடிய சாத்தியம் இல்லை. என்றாலும், அவ்வாறான முயற்சி எதுவும் முன்னெடுக்கப்படுமானால் இலங்கைக்கு பல ‘அறகலய’ க்கள் தேவைப்படலாம்.

— வீரகத்தி தனபாலசிங்கம்

Share.
Leave A Reply