சர்வதேச அரசியலில் ஒரு தேசத்தின் இறையாண்மை என்பது அதன் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், தனது குடிமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிப்பதிலும் தங்கியுள்ளது.
மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் இஸ்ரேல் எதிர்நோக்கும் சவால்கள் ஏனைய நாடுகளை விடவும் தனித்துவமானவை. குறிப்பாக, ஈரானுடனான தற்போதைய மோதல் என்பது வெறும் நிலப்பரப்பு சார்ந்தது மட்டுமல்ல. அதுவொரு தேசத்தின் இருப்பு சார்ந்த போராட்டமாகும்.
வரலாற்று ரீதியாக அண்டை நாடுகளுடன் போரிட்டு அமைதியை நிலைநாட்டிய அனுபவங்களைக் கொண்ட இஸ்ரேல், இன்றையச் சூழலில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேச அரசியல் கொள்கைகளின்படி எவ்வாறு அமைகின்றன என்பதை ஆராய்வது அவசியமானது.
இஸ்ரேலின் பாதுகாப்புச் சிந்தனையில் ஈரானின் நிலைப்பாடு எப்போதுமே கவலைக்குரிய காரணியாகவே இருந்து வந்துள்ளது.

உச்ச தலைவர் அயதுல்லா அலி
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் பகிரங்கமான எச்சரிக்கைகள், ‘இஸ்ரேல் இன்னும் 25 ஆண்டுகளில் அழியும்’ மற்றும் ‘சியோனிச ஆட்சி அழிக்கப்பட வேண்டும்’ போன்ற வாசகங்கள் வெறும் அரசியல் முழக்கங்களாக மட்டும் இஸ்ரேலால் பார்க்கப்படவில்லை. மாறாக, இவை தனது நாட்டின் இராணுவக் கொள்கைக்கு விடுக்கப்படும் சவால்களாகவே கருதப்படுகின்றன.
இஸ்ரேலின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் இந்த அச்சுறுத்தல் மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது
அதில் நேரடி அச்சுறுத்தல்: ஈரானின் பாரிய ஏவுகணை அபிவிருத்தி மற்றும் அணு ஆயுதக் கனவாகம்.
இரண்டாவது, நிழல் யுத்தம் அதாவது, இஸ்ரேலின் எல்லைகளில் நிலைகொண்டுள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்கு ஈரான் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவாகும்.
மூன்றாவதாக மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் எடுக்கும் முயற்சிகள் புவி சார்ந்த அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.
2015ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஈரானிய அணுசக்தி ஒப்பந்தம் ஒரு தற்காலிகத் தீர்வாகத் தெரிந்தாலும், அதிலிருந்து அமெரிக்கா விலகிய பின்னர் ஈரான் மேற்கொண்ட நடவடிக்கைகள் இஸ்ரேலின் அச்சத்தை உறுதிப்படுத்தின.
450 கிலோகிராம் யுரேனியத்தை ஆபத்தான நிலைக்குச் செறிவூட்டியது, ஈரானை அணு ஆயுத நாடாக மாற்றும் விளிம்பிற்குத் தள்ளியது.
இந்தச் சூழலில், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவ ரீதியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இஸ்ரேலின் இறையாண்மை சார்ந்த உரிமையாக பார்க்கப்படுவதை நிராகரிக்க முடியாது.
இஸ்ரேலின் வரலாற்றை உற்று நோக்கினால், அமைதி என்பது எப்போதும் போர்க்களத்தின் களைப்பிலிருந்தே பிறந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
1948இல் இஸ்ரேல் உருவானபோது, அதன் மிகப்பெரிய அச்சுறுத்தலாக எகிப்து விளங்கியது. அன்றைய எகிப்திய ஜனாதிபதி நாசரின் சொல்லாடல்கள் தற்போதைய ஈரானியத் தலைவர்களின் பேச்சுகளைப் போலவே கடுமையானவையாக இருந்தன. ‘இஸ்ரேல் ஒரு செயற்கையான நாடு, அது மறைந்துவிட வேண்டும்’ என்று அவர் முழங்கினார்.
இருப்பினும், முப்பது ஆண்டு கால மோதல்கள் மற்றும் பல போர்களுக்குப் பிறகு, 1977 இல் அன்வர் சதாத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெருசலேம் விஜயம் அமைதிக்கான பாதையைத் திறந்துவிட்டது.
1994இல் ஜோர்தானுடனான அமைதி ஒப்பந்தம் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜேர்மனி – பிரான்ஸ் இடையிலான உறவு மாற்றம் போன்றவை, பரம எதிரிகளும் காலப்போக்கில் பங்காளிகளாக முடியும் என்பதற்குச் சான்றுகளாகும்.
ஆனால், இந்த அமைதி ஒப்பந்தங்கள் அனைத்தும் இரு தரப்பும் போரினால் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாகப் பலவீனமடைந்த பின்னரே சாத்தியமாகின.
தற்போதைய ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் அத்தகையதொரு ‘போர்க்கள களைப்பை’ நோக்கி இரு நாடுகளையும் தள்ளிக் கொண்டிருக்கிறது.
ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போதைய போரினால் ஈரான் சந்தித்திருக்கும் பொருளாதாரச் சரிவு முன்னெப்போதும் இல்லாதது.
2026 ஆம் ஆண்டில் ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10சதவீதம் வரை சுருங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
40 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்கம், உணவுப் பொருட்களின் விலை நூறு சதவீதத்திற்கும் மேல் உயர்வு, மற்றும் 10 மில்லியன் ரியால் பணத்தாள்களை அச்சிடும் அளவிற்கு வீழ்ச்சியடைந்த நாணய மதிப்பு என்பன ஈரானை பொருளாதார அனர்த்த நிலைக்குத் தள்ளியுள்ளன. இஸ்பஹான் மற்றும் குசெஸ்தான் போன்ற தொழில்முறை மையங்கள் மீதான தாக்குதல்கள் அந்நாட்டின் முதுகெலும்பைத் தகர்த்துள்ளன.
இஸ்ரேலின் பொருளாதாரமும் அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது. 2026ஆம் ஆண்டிற்கான வரவு,செலவுத் திட்டம் பாதுகாப்புச் செலவுகளுக்காக மேலதிகமாக 32 பில்லியன் ஷெக்கல்களைக் கோருகிறது. நாட்டின் கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 சதவீதமாக உயரும் அபாயம் உள்ளது.
சுற்றுலா, சில்லறை வணிகம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இஸ்ரேல் உயர் வருமான நாடாக இருப்பதால், இந்த நெருக்கடியைத் தாங்கும் வலுவை இன்னும் தக்கவைத்துள்ளது.
மறைந்த பொருளாதார நிபுணர் ஸ்டான்லி பிஷர் குறிப்பிட்டது போல, அமைதி நிலவும் சூழலில் இஸ்ரேலால் 7சதவீத வளர்ச்சியை எட்ட முடியும்.
ஆனால், அந்தப் பொருளாதார வளர்ச்சியை விடவும் நாட்டின் பாதுகாப்பே முதன்மையானது என்பதில் இஸ்ரேலிய அரசு உறுதியாக உள்ளது என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தான் சுபீட்சமான எதிர்காலம் தங்கியுள்ளது.
அதேநேரம், போர் என்பது எப்போதும் ஒரு தீர்வாக இருக்க முடியாது என்பதை இஸ்ரேல் உணர்ந்தே இருக்கிறது.
2002ஆம் ஆண்டு அரபு லீக் முன்வைத்த ‘அரபு அமைதி முயற்சி’ இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஈரான் அந்த அமைப்பில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக அதை ஏற்றுக்கொண்டிருந்தது. இஸ்ரேல் ஒரு பலமான நிலையில் இருந்து கொண்டு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதையே விரும்புகிறது.
தற்போதைய போர் ஈரானின் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது அதன் அணு ஆயுதத் திட்டத்தை முழுமையாக முடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் ஈரானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தியுள்ளன.
அரபு நாடுகளுடனான இஸ்ரேலின் உறவு மேம்பட்டு வரும் சூழலில், ஈரானின் ஆதிக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இது பிராந்தியத்தில் புதிய அதிகாரச்சமநிலையை உருவாக்கும்.
அந்த வகையில், இஸ்ரேலின் தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் என்பது வெறும் நிலப்பரப்பை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல.
மாறாக, அவை தனது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கானவொரு கவசமாகும். நாடொன்று தனது அழிவை நோக்கமாகக் கொண்ட சக்திகள் எல்லையில் வளர்வதை வேடிக்கை பார்க்க முடியாது என்ற சர்வதேச அரசியல் தர்மத்தின் அடிப்படையிலேயே இஸ்ரேலின் செயற்பாடுகள் அமைகின்றன.
வரலாறு காட்டியுள்ளபடி, எகிப்து மற்றும் ஜோர்தானுடன் ஏற்பட்ட அமைதியைப் போன்றதொரு நிலை ஈரானுடனும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், அந்த அமைதி நிலைக்குச் செல்வதற்கு முன்னதாக, தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதில் இஸ்ரேல் சமரசம் செய்து கொள்ளாது.
போரை இஸ்ரேல் கடைசித் தெரிவாக மாற்ற வேண்டுமாயின், அதற்கு வலுவான இராணுவத் தற்காப்பு அரண் அவசியமாகிறது.
இஸ்ரேல் மற்றும் ஈரானிய மக்களின் கைகளில் உள்ள இந்த எதிர்காலம், அழிவிலிருந்து மீண்டு வளர்ச்சியை நோக்கியதாக மாற வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் அந்தப் புரிதல் தற்காலிகப் போர் நிறுத்தத்தை எதிர்க்கும் ஈரானிடத்தில் இன்னமும் ஏற்படவில்லை.
ஆர்..ராம்

