யாழ்ப்பாண நகரத்தை இப்ப பார்த்தியள் எண்டால் அப்பிடியே அசந்து போயிடுவியள். இது யாழ்ப்பாணம்தானா? இல்லை பாரிஸில இருக்கிற லாசப்பலா..? எண்டு தனக்குச் சந்தேகமாயிருக்கு எண்டு சொன்னார் ஒரு பாரிஸ்வாசி.

jaffnaஅந்தளவுக்கு ஜம்பரோடயும் கையில்லாத பெனியனோடயும் சமர்க்குளியல் செய்யினம் தமிழாக்கள். இறுக்கமான ஜீன்சும் தொள தொள மேற்சட்டையும் போட்டுக்கொண்டு பொம்பிளையள் அள்ளுகொள்ளையாக நிக்கினம். சில பெடிச்சியள் அரைக்காற்சட்டையும் ரீ சேர்ட்டும் போட்டுக்கொண்டு உலாத்துகினம். எல்லாம் எங்கட தமிழாக்கள்தான்.

jaffna 2தமிழாக்கள் எண்டால்….. புலம்பெயர் நாடுகளில இருந்து இந்தச் சீசனுக்கு ஊருக்கு வந்திருக்கிற எங்கட சொந்த பந்தங்கள்தான். அங்க குளிருக்குள்ள கிடந்து விறைச்சதுகளுக்கு இஞ்ச இந்த வெயிலையும் வெளிச்சத்தையும் கண்டால்… அதைக் கொண்டாடாமல் இருக்கேலுமோ!

இப்படி வாய்ப்புக்கிடைச்ச இடத்தில கொண்டாடாமல் வேற எங்கதான் இதைக் கொண்டாட முடியும்? அதுவும் இவ்வளவு காசைச் செலவழிச்சு, இவ்வளவு தூரந்தொலைவுக்கு வந்து, சொந்த மண்ணிலயே விரும்பினமாதிரிக் கொண்டாட முடியேல்ல எண்டால்…. பிறகேன் இஞ்ச சொந்த மண்ணுக்கு வருவான்?

jaffna 3பேசாமல் கோவாவுக்கோ, தாய்லாந்துக்கோ, மலேசியாவுக்கோ போய் விரும்பினமாதிரி உலாத்திப்போட்டுப்போகலாமே…! அப்பிடியெல்லாம் வேற நாடுகளுக்குப்போகாமல் இஞ்ச பிறந்து வளர்ந்த மண்ணுக்கு இவையெல்லாம் வருகினம் எண்டால்… தாய்ப்பாசத்தைப்போல, தாய்மண்ணிலையும் ஒரு பாசம் எண்டதை நாங்கள் விளங்கிக்கொள்ளவேணும்.

jaffna 4அப்பிடி வாற பிள்ளையள் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் நடப்பினம். அது அவை அங்க பழகின பழக்கம். அதால, இதையெல்லாம் நாங்கள் கண்டு கொள்ளப்பிடாது. போனகிழமை வேலணைக்கடற்கரை – சாட்டிக்குப்போயிருந்தன். அங்க நான் கண்ட காட்சியைச்சொன்னால் நம்ப மாட்டியள்… வலு சுதந்திரமாகச் சுதந்திரக்குளியல் செய்து கொண்டிருந்துதுகள் அஞ்சாறு பெடிச்சியள். இதைப்பாக்க எனக்குக்கொள்ளை சந்தோசம்.

ஆரைப்பற்றிய கவலையும் இல்லாமல், இந்தக் கலாசாரம், கத்தரிக்காய் எண்ட ஒண்டைப்பற்றிய அக்கறையும் இல்லாமல் தங்கட இஸ்ரத்துக்கு கடல்ல போய் விழுகிறதும் கரைக்கு வாறதும் எண்டு வலு அமர்க்களமாகக் குளிச்சுக்கொண்டு நிண்டதுகள். உடுப்பைப்பற்றி நான் சொல்லத்தேவையில்லை. நீச்சலுக்கு வாறதெண்டால் 12 முழத்தில புடவையா கட்டிக்கொண்டு வரேலும்?

 இதைமாதிரித்தான் எங்கட கசூரினா பீச்சுப் பக்கம் நீங்கள் போனீங்கள் எண்டால், அங்கயும் இந்த மாதிரிச் சந்தோசத்தைப் பார்க்கலாம். இப்பிடித்தான் இப்ப நல்லூரிலயும் ஆட்கள் கூடத்தொடங்கீட்டினம்.

யாழ்ப்பாணத்தில இருக்கிற ஐஸ்கிறீம்கடைகள், கவர்னர் பூங்கா அதுதான் கச்சேரியடியில இருக்கிற பழைய பூங்கா, யாழப்பாணக் கோட்டையின் பின்வீதி எண்டு எல்லாப்பக்கத்திலயும் எங்கட சொந்த பந்தங்கள் வலு சோக்காகச் சுதந்திரமாக உலாத்துதுகள்.

 இப்பிடி உலாத்துகிற ஆட்களுக்கு இஞ்ச இருக்கிற சொந்த பந்தங்கள் உதவியாக – சேர்ந்து நடக்கிற, சேர்ந்து குளிக்கிற, சேர்ந்து குடிக்கிற ஆட்களாக இருக்கினம். அவையையும் இவையையும் பாக்க எனக்குச் சிலவேளை சிரிப்பு வாறதும் உண்டு.

 அவை கொஞ்சம் வாளிப்பாக, கலகலப்பாகவும் மினு மினுப்பாகவும் இருப்பினம். இவை – இஞ்ச நாட்டில இருக்கிறவை இப்ப அடிக்கிற வறட்சியைப்போலக்கொஞ்சம் காய்ஞ்சு, கறுத்து, மெலிஞ்சு வதங்கிப்போயிருப்பினம்.

இதைவிட இப்பிடி உலாத்துகிற, கூடிக்குளிக்கிற, சேர்ந்து குடிக்கிற கூட்டத்தை ஆசையாக வேடிக்கை பாக்கிற எங்கட ஆக்களும் இருக்கினம். அவையையும் இவையையும் வேடிக்கை பாக்கிற ஆட்களையும் பாக்க எனக்குச் சிலவேளை சிரிப்பு வரும். சிலவேளை அழுகையும் வந்ததுண்டு.

என்ன செய்யிறது, எல்லாம் சொந்த பந்தங்கள். வெளியில இருக்கிறதால கொஞ்சம் செந்தளிப்பாக, செல்லச்செழிப்பாக இருக்கினம். மற்றப்படி அவையும் அங்க கஸ்ரப்படுகினம். நாங்கள் இஞ்ச கஸ்ரப்படுகினம்.

சரி, எப்பிடியோ இப்பிடி நாட்டுக்கு வந்து கொண்டாடுகிற ஆட்களால இப்ப யாழ்பாணம் களை கட்டியிருக்கு. லாசப்பல்ல நிண்டு கொண்டு சொல்லுகினம், இது பாரிஸில இருக்கிற யாழ்ப்பாணம் எண்டு. யாழ்ப்பாணத்தில இருந்து கொண்டு நண்பர் ஒருத்தர் சொல்லிறார் இது யாழ்ப்பாணத்தில இருக்கிற லாசப்பல் எண்டு.

 எப்பிடியோ கொண்டாட்டமும் குதூகலமுமாக நாடு மாறிக்கொண்டிருக்கு. ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் அவரவர் தங்கட காரியங்களை அந்த மாதிரித்தான் பார்த்துக்கொண்டிருக்கினம். ஆனால், அரசியல் எண்டு வந்தால்…. அப்பிடி வந்தால் இஞ்ச நாட்டில ஆத்திரம் அந்தரத்துக்குக் கூட ஒண்டுக்குக்கே போகேலாது.

 எங்க பாத்தாலும் ஆமி மயம். சீ என்ன கொடுமையப்பா…அங்க (யாழ்ப்பாணத்தில) ஒரு காலடியை எடுத்து வைக்கேலாது. ஆமிக்காரன் ஒண்டுக்கும் விடுகிறான் இல்லை..

jaffna 5

Share.
Leave A Reply