காணாமல் போனோரை கண்டறியும் அமைப்பினர் கொழும்பு, மருதானை, சீ.எஸ்.ஆர்.மண்டபத்தில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வின்போது வேனொன்றில் வந்த பெளத்த தேரர்கள் தலைமை யிலான சிவில் உடை தரித்த குழுவொன்று அத்துமீறி பிரவேசித்து குழப்பம் விளைவித்ததனால் நேற்று மாலை அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவியது.

அத்து மீறிய குழுவினர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் குழுவினரையும் ஏற்பாட்டாளர்களையும் கலந்துகொண்டிருந்த காணாமல் போனோரது உறவுகளையும் சிறைப்படுத்தி அவர்களை தேசத்துரோகிகள் என சித்தரித்ததினாலேயே அங்கு பதற்றம்நிலவியது. எவ்வாறாயினும்

showImageInStoryஉடனடியாக மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வந்த பொலிஸ் குழு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சிறைப்பட்டிருந்த வெளி நாட்டு இராஜ தந்திரிகளை அங்கிருந்து வெளியேற உதவி செய்தது. எனினும் காணாமல் போனோரை கண்டறியும் அமைப்பின் கலந்துரையாடல் கூட்டமானது குழப்பத்தை அடுத்து இரத்து செய்யப்பட்டது.

காணாமல் போனோரை கண்டறிவதற்கான அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் கூட்டமானது நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மருதானை, சீ.எஸ்.ஆர்.மண்டபத்தில் ஆரம்பமானது. இந்த கலந்துரையாடலில் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் காணமல் போன உறவுகளின் உறவினர்களும் காணாமல் போனோர் தொடர்பிலான விபரங்களை தெரிந்துகொள்வதற்காக வெளி நாட்டு இராஜதந்திரிகள் குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

இந் நிலையில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலம் கடந்த நிலையில் சுமார் பிற்பகல் 3.30 மணியளவில் வேனொன்றில் 8 பெளத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேருக்கும் மேற்பட்ட குழுவொன்று குறித்த கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.

pikkuகட்டிடத்துக்குள் நுழைந்தவர்கள் ‘ சிங்களவர்களிலும் காணாமல் போனோர் உள்ளனர். அது தொடர்பில் நாம் சாட்சியம் வழங்குகின்றோம். அதனையும் கேளுங்கள். தேசத் துரோக வேலைகளில் ஈடுபட வேண்டாம்’ எனக் கூறியவாறே குழப்பத்தில் ஈடுபட்டதாக கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த அருட் தந்தை சக்திவேல் ஊடகங்களிடம் தெளிவுபடுத்தினார்.

இதனை அடுத்தே கலந்துரையாடலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிங்களவர்கள் காணாமல் போயிருப்பின் அது தொடர்பில் விகாரையில் கூட்டம் நடத்தி விளக்கமளிக்க முடியும் எனவும் அவ்வாறு ஏற்பாடு செய்யப்படுமிடத்து தாம் கண்டிப்பாக அங்கு வருகைதந்து விடயங்களை கேட்டறிய தயார் என கலந்துரையாடலில் இருந்தோர் தெரிவித்துள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்டோர் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை குழப்ப வேண்டாம் எனவும் கோரியுள்ளனர்.

showImageInStoryஎனினும் இது தொடர்பில் பெளத்த தேரர்கள் தலைமையிலான குழுவினர் கவனம் கொள்ளாது குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கூட்டதில் கலந்துகொண்டிருந்த வெளி நாட்டு இராஜதந்திரிகள் குழு இதனால் கட்டிடத்துக்குள்ளேயே சிறைப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் வரை அந்த குழு கட்டிடத்துக்குள்ளேயே சிறைப்பட்டிருந்தது.

குறித்த கல்ந்துரையாடலானது புலிகளின் மா வீரர் குடும்பங்களை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படுவதாகவும் மீண்டுமொரு பிரச்சினையை கொண்டுவரும் நோக்குடன் முன்னெடுக்கப்படுவதகவும் தேசத் துரோக செயல் எனவும் தேரர்கள் தலமையில் அத்துமீறிய குழுவினரால் குற்றம் சுமத்தப்பட்டது.

எனினும் ஏற்பாட்டாளர்கள் பெளத்த தேரர்களிடம் விடயங்களை விளக்கிய போதும் அதனை ஏற்றுக்கொள்ள அங்கு வந்த அங்குலுகல்லே சிதா நந்த தேரர் தலைமையிலான சுமார் 8 தேரர்களும் ஏனைய சிவில் உடை தரித்தவர்களும் மறுப்பு தெரிவித்ததுடன் அந்த கூட்டதை நடத்த இடம் தர முடியாது எனவும் தேச துரோக வேலைக்காக இடம் கொடுப்பது அபத்தமானது எனவும் கூச்சலிட்டனர்.

இதனிடையே மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் விஷேட பொலிஸ் குழு ஸ்தலத்துக்கு விரைந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபடுவது இதனூடாக தடுக்கப்பட்டது.

இதனிடையே சீ.எஸ்.ஆர்.மண்டபத்திலிருந்து வெளியே வந்த பெளத்த தேரர்கள் தலமையிலான குழுவினர் அந்த மண்டப முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த QP KN – 2991 என்ற கறுப்பு நிற சொகுசு வாகனத்தையும் DP KJ – 8639 என்ற வெள்ளை நிற சொகுசு வாகனத்தையும் சுட்டிக்காட்டி அது அரசால் வழங்கப்பட்டது எனவும் அதனை தேசத் துரோக வேலைகளுக்கு பயன்படுத்துவது குறித்து நாட்டின் புலனாய்வுப் பிரிவும் உயர் அதிகாரிகளும் தூங்குகின்றனரா என கேள்வி எழுப்பி மீண்டும் பதற்றத்தை தோற்றுவித்தனர்.

எனினும் இதன் போது பொலிஸார் தலையிட்டு குறித்த கட்டிடத்துக்கும் அங்கு நடைபெற்ற கூட்டதில் கலந்துகொண்டோருக்கும் பாதுகாப்பளிப்பதாகவும் எனினும் பிரச்சினை ஏற்படா வண்னம் கூட்டத்தை தொடராது அதனை நிறுத்துமாறும் ஏற்பாட்டாளர்களிடம் வேண்டினர். இதனை அடுத்து அந்த கூட்டம் இரத்து செய்யப்பட்டது. அத்துடன் பங்கேற்ற வெளி நாட்டு இராஜதந்திரிகள் பாதுகாப்பக அவர்கள் வருகை தந்த வாகனங்களில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந் நிலையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் அமைப்பின் பிரதி நிதிகளையும் அவர்களது கூட்டதுக்குள் அத்துமீறிய பெளத்த தேரர்கள் தலைமையிலான குழுவினரையும் பொலிஸார் நேற்று மாலை மருதானை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்திருந்தனர். இச்செய்தி எழுதப்படும் வரை இரு தரப்பினரும் சுமுகமாக நடந்துகொள்வது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் கல்ந்துரையாடல் ஒன்ரு நடைபெற்றுவந்த நிலையில் அது நிறைவடைந்திருக்கவில்லை.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த அழைப்பொன்றை அடுத்தே அவ்விடத்து தாம் வந்ததக குறிப்பிடும் மருதானை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply