மு.க. ஸ்டாலினின் நெருங்கிய ஆதரவாளரான கல்யாண சுந்தரம், திமுக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்தும் ‘கலைஞர் டிவி’யின் இயக்குநர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். தலைமைக்கு மிகவும் முக்கியமான 4 கோரிக்கைகள் விடுத்து கட்சியின் தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால், திமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கல்யாணசுந்தரம் பதவியிலிருந்து விலகியதற்கு பின்னணி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

திமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவர் கல்யாணசுந்தரம். வழக்கறிஞரான இவர் ஸ்டாலினின் நெருங்கிய ஆதரவாளர். திமுகவில் ஸ்டாலின் கை ஓங்கியதிலிருந்து கட்சியின் முக்கியக் குழுக்கள் அனைத்திலும் இடம் பெற்று வந்தார்.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வுகளில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. திமுகவின் உள்கட்சித் தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கலைஞர் டிவியின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து வந்தார். மேலும், அறிவாலயத்தின் பொறுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவராகத் திகழ்ந்தார்.

இந்நிலையில், திமுகவின் உட்கட்சி தேர்தல் தொடங்கியதிலிருந்து மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து அறிவாலயத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. ஆனால், இந்தப் புகார்கள் கட்சித் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குற்றம் சுமத்தி வந்தார்.

மதுரை மாவட்ட உட்கட்சி தேர்தலில், முதலில் பிரச்னை வெடித்தது. இதை தொடர்ந்து கட்சியில் இருந்து, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி உட்பட மதுரையை சேர்ந்த 23 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களிலும், உட்கட்சித் தேர்தல் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. உட்கட்சித் தேர்தல் பிரச்னைகள், அடிதடி வரை செல்லும் நிலை உருவானதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு, சில மாவட்டங்களில் நடக்க வேண்டிய தேர்தலை அறிவாலயத்தில் நடத்த கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதை ஒருங்கிணைக்கும் பொறுப்புகள் அனைத்தும் கட்சியின் அமைப்புச் செயலர் கல்யாணசுந்தரம், அறிவாலய மேலாளர் ஜெயக்குமார் ஆகிய இருவரிடமும் ஸ்டாலின் ஒப்படைத்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையில், உட்கட்சி தேர்தல் தொடர்பாக பிரச்னைகள் ஏற்பட்டு உச்சக்கட்டத்தை அடைந்தது.

இந்நிலையில், கல்யாணசுந்தரம் அமைப்புச் செயலாளர் மற்றும் கலைஞர் டிவி இயக்குநர் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கிறார். அதற்கான கடிதத்தை, அவர் கோபாலபுரம் கருணாநிதி இல்லம் மற்றும் ஸ்டாலின் இல்லத்திற்கும் கடந்த செவ்வாய்க்கிழமையே அனுப்பி வைத்துவிட்டார்.

அந்தக் கடிதத்தில் மிகவும் முக்கியமான 4 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

1. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.

2. கனிமொழி, ராஜா, தயாநிதி மாறன் ஆகியோர் கட்சியை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டும்.

3. பிரிக்கப்பட்ட 65 மாவட்டங்களுக்கு உடனடியாக பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். ஒன்றிய, நகர, பகுதி, மாவட்டச் செயலாளர்கள், கட்சிப் பொறுப்புகளுக்கு இரண்டு முறைக்கு மேல் போட்டியிடக் கூடாது.

4. நில அபகரிப்புப் புகார்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கக்கூடாது.

“இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் கட்சி வலுப்பெறும் என்பது எனது எண்ணம். கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்யாண சுந்தரத்தின் இந்தக் கடிதம் திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், கல்யாண சுந்தரம் கொடுத்துள்ள இந்தக் கடிதத்தின் பின்னணியில் மு.க.ஸ்டாலின் இருப்பதாக கட்சியில் சிலர் நம்மிடம் தெரிவித்தனர்.

கல்யாண சுந்தரத்துக்கு மிகவும் நெருக்கமான மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரிடம் நாம் பேசியபோது, “இந்தக் கடிதத்தின் அர்த்தம், திமுகவில் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே மோதல் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதுதான்” என்று கூறி அதிரவைத்தார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, “இப்போதெல்லாம், ஸ்டாலின் கூறுவதை கருணாநிதி கேட்பதில்லை, கருணாநிதி கூறுவதை ஸ்டாலின் கேட்பதில்லை. அழகிரியிடம் சமாதானப்போக வேண்டும் என கருணாநிதி கூறுகிறார். ஆனால், இதற்கு ஸ்டாலின் ஒத்துக்கொள்ளவில்லை.

மறுபுறத்தில், கட்சியைச் சீரமைக்க சில கசப்பான மருந்துகள் கொடுத்தால்தான் புத்துயிர் ஊட்ட முடியும் என ஸ்டாலின் கூறுவதை கருணாநிதி ஏற்கவில்லை.

இதுதவிர, கனிமொழி, ராஜா, தயாநிதி மாறன் ஆகியோர் மீது ஸ்டாலின் கடும் அதிருப்தியில் உள்ளார்.

மெகா ஊழல்களில் பெயர் அடிபட்ட இந்த மூவரில் இருவருக்கு, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மூன்றாவது நபர், ராஜ்யசபா எம்.பி.யாக அனுப்பி வைக்கப்பட்டார். இதற்குப் பின்னரும் கட்சிமீது பொதுமக்களுக்கு எப்படி மரியாதை வரும்? என்பதே ஸ்டாலினின் கோணம்.

2016 சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் முக்கியமான இந்த 4 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று எழுதப்பட்டிருப்பது, யாருடைய கருத்தாக இருந்தாலும், அதுதான் உண்மை. ஸ்டாலின் விரும்புவதும் அதைத்தான்.

ஆனால், கருணாநிதியின் குறுக்கீடு காரணமாக ஸ்டாலினால் சுயமாகச் செயல்பட முடியவில்லை. இந்த நிலையில்தான் இப்படியொரு கடிதத்தை – ஸ்டாலினின் மனதில் உள்ள அதே 4 அம்ச கோரிக்கையை எழுதிக் கொடுத்துவிட்டு கல்யாண சுந்தரம் பதவியிலிருந்து விலகியுள்ளார். இப்போது யோசித்துப் பாருங்கள், இந்த கடிதத்தின் பின்னணி என்ன என்பதை” என்றார்.

இது குறித்து நாம் திமுக தரப்பில் வேறு சில வி.ஐ.பி.களிடம் விசாரித்தபோது, அனைவருமே கல்யாண சுந்தரம் பதவி விலகியிருப்பதில் ஏதோ உள் விவகாரம் இருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள்.

Share.
Leave A Reply