விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் தொடங்கியபோதே, இலங்கை தேசிய உளவுத்துறை SIS மூழுமூச்சுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மேல்மட்ட உறுப்பினர்கள் அனைவர் பற்றிய தகவல்களையும் சேகரிக்க தொடங்கியது. பிரபாகரனில் தொடங்கி சுமார் 40 பேர் பற்றிய விபரங்களுக்காக தனித்தனி பைல்கள் திறக்கப்பட்டன.

sarls antaniஅப்படி திறக்கப்பட்ட பைல்களில் ஒன்று, பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் ஆன்டனி பற்றியது.

ஆனால், மிக ஆச்சரியகரமாக SIS தயாரித்த பைல்களில் மிக குறைவான விபரங்கள் இருந்த பைல் சார்ள்ஸ் ஆன்டனியின் பைல்தான்.

2008-ம் ஆண்டு இறுதிவரை சார்ள் ஆன்டனி பற்றிய விபரங்கள் பெரியளவில் இலங்கை உளவுத்துறைக்கு கிடைக்கவில்லை. சார்ள் ஆன்டனியின் உறுதிப்படுத்தப்பட்ட போட்டோகூட கிடைக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்த சில போட்டோக்களில் இருந்த நபர் நிஜமாகவே சார்ள்ஸ் ஆன்டனிதானா என்ற சந்தேகம் இருந்தது.

இந்த ப்ராஜெக்ட்டில் அப்போது ஈடுபட்டிருந்த இலங்கை உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் சமீபத்தில் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
2009-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவு விசுவமடு டவுனை கைப்பற்றியபோது ராணுவத்திடம் சரண் அடைந்த முதியவர் ஒருவர், பிரபாகரன் குடும்பத்துடன் நெருக்கமானவர் என்றும், அவர் மூலம் சில விஷயங்கள் ராணுவத்துக்கு தெரிய வந்தது என்றும் கடந்த பாகத்தை முடித்திருந்தோம்.

charles-antony-20140823-4

விடுதலைப் புலிகள் சீருடையில் சார்ள்ஸ் ஆன்டனி

ராணுவத்துக்கு தெரியவந்து மிக முக்கிய விஷயம், பிரபாகரனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே, வன்னி பகுதியில்தான் உள்ளார்கள் என்பது.

இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, ராணுவம் வேகமாக முன்னேறி ஒவ்வொரு நகரமாக கைப்பற்றிக் கொண்டு வந்த நேரத்தில், பிரபாகரன் தனது மனைவி, மற்றும் பிள்ளைகளை இலங்கைக்கு வெளியே அனுப்பி விட்டதாக ஒரு தகவல் அடிபட்டுக் கொண்டிருந்தது. மற்றொரு தகவல், பிரபாகரனேகூட இலங்கைக்கு வெளியே சென்று விட்டதாக இருந்தது.

இலங்கை உளவுத்துறை SIS-ல் கூட சிலர் இதை நம்பினார்கள் (என்று பின்னாட்களில் தெரியவந்தது).

இப்படியான நிலையில் சரணடைந்த அந்த முதியவர், பிரபாகரனின் முழு குடும்பமும் வன்னிப் பகுதியில் இருப்பதாகவும், தாம் சரணடைவதற்கு இரு தினங்களுக்கு முன்பு, விசுவமடு பகுதியில் சார்ள்ஸ் ஆன்டனியை பார்த்ததாகவும் தெரிவித்தார்.

பிரபாகரன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவு அல்லது புதுக்குடியிருப்பு பகுதியில் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். (புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்துதான், யுத்த முனையில் உள்ள புலிகளுக்கு உத்தரவுகள் வந்துகொண்டு இருந்தன என்பதை ராணுவம் ஏற்கனவே தெரிந்து கொண்டிருந்தது)

சரணடைந்த முதியவர் மூலம் ராணுவத்துக்கு கிடைத்த மற்றொரு பெரிய விஷயம், விசுவமடு பகுதியில் பிரபாகரன் குடும்பத்தினரின் மறைவிட வீடு ஒன்று இருக்குமிடம் அவருக்கு தெரிந்திருந்தது. கடந்த காலத்தில், அந்த வீட்டில் பிரபாகரன், மற்றும் அவரது குடும்பத்தினரை, இவரும் இவரது மனைவியும் சில தடவைகள் சந்தித்துள்ளனர்.

விசுவமடு டவுன் முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்துவிட்ட நிலையில், அந்த வீட்டை அடையாளம் காட்டுவதற்கு இந்த முதியவரை அழைத்துச் சென்றது ராணுவம்.
charles-antony-20140823-6

இந்த போட்டோவில் உள்ள யாரும் தற்போது உயிருடன் இல்லை

யுத்தத்தால் சேதமடையாத நிலையில் இருந்தது அந்த வீடு. ராணுவம் விசுவமடு டவுனை நெருங்கி வருவது தெரிந்தவுடன், அந்த வீட்டில் இருந்து சில பொருட்கள் அகற்றப்பட்டதுடன் சரி, மீதி அனைத்தும் அங்கேயே இருந்தன.

இந்த வீட்டில் இருந்துதான், பிரபாகரனின் குடும்ப போட்டோ ஆல்பங்கள் சில ராணுவத்துக்கு கிடைத்தன. அவற்றில் இருந்துதான், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் ஆன்டனியின் வெவ்வேறு போட்டோக்கள் ராணுவத்துக்கு கிடைத்தன. சார்ள்ஸ் ஆன்டனியின் உருவத் தோற்றத்தை ராணுவம் தெரிந்துகொண்டது அல்லது உறுதி செய்துகொண்டது, அந்த போட்டோக்களை வைத்துதான்.

அதுவரை விடுதலைப் புலிகளின் மீடியாக்களில்கூட வெளியாகாத போட்டோக்கள் அவை.

விசுவமடு வீட்டில் கிடைத்த மற்றொரு முக்கிய ஆவணம், வெளிநாடுகளில் இருந்த சில (விடுதலைப் புலிகளின்) சொத்துக்கள், சார்ள்ஸ் ஆன்டனியின் பெயருக்கு மாற்றப்பட்ட டாக்குமென்ட்கள். சார்ள் ஆன்டனி கையொப்பமிட்டு வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பிய சில ஆவணங்களின் பிரதிகள், இந்த வீட்டில் கிடைத்தன.

இந்த சொத்து விவகாரம் கொஞ்சம் குழப்பமானது. இதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்.

charles-antony-20140823-2

சார்ள்ஸ் ஆன்டனி

யுத்தம் நடந்துகொண்டிருந்த நிலையில், ராணுவத்துக்கு சார்ள்ஸ் ஆன்டனியின் போட்டோக்கள் புதையல் போல கிடைத்தன. சார்ள்ஸ் ஆன்டனியின் உருவத் தோற்றம், பலர் மத்தியில் அவர் நின்றிருந்தாலும் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளும் விதத்திலும் இருந்தது அவர்களுக்கு வசதியாகப் போனது.

அத்துடன், சார்ள் ஆன்டனியும் வன்னியில் ராணுவம் சுற்றிவளைத்த பகுதிக்குள்தான் உள்ளார் என்பதையும் ராணுவம் உறுதியாக தெரிந்து கொண்டது.

காரணம், இவர்களுக்கு தகவல் கொடுத்த முதியவர், பிரபாகரன் குடும்ப உறுப்பினர்களில் கடைசியாக சார்ள்ஸ் ஆன்டனியையே சந்தித்திருந்தார். அதுவும் அவர் சரணடைவதற்கு இரு தினங்களுக்கு முன்பு, விசுவமடுவில் சந்தித்திருந்தார்.

அதன்பின், 2009-ம் ஆண்டு ஜனவரி இறுதி வரையில் ராணுவ முற்றுகையை ஊடுருவி விடுதலைப் புலிகளின் எந்தவொரு அணியும் வெளியே சென்றிருக்கவில்லை என்பது ராணுவத்துக்கு தெரிந்திருந்தது.

இதனால், சாள்ஸ் ஆன்டனி எந்த வட்டத்துக்குள் இருப்பார் என்பதை ராணுவத்தால் ஊகிக்கவும் முடிந்தது.

charles-antony-20140823-3

கொல்லப்பட்ட நிலையில் சார்ள்ஸ் ஆன்டனி

யுத்தத்தின் இறுதி நாட்களின்போது, மே 17-ம் தேதி இரவு 53-வது படைப்பிரிவு முற்றுகை லைனை உடைக்க வந்த விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவினர், முற்றுகை லைனை உடைத்துக்கொண்டு, ஏற்கனவே 58-வது படைப்பிரிவால் கிளியர் செய்யப்பட்ட யாருமற்ற பகுதிக்குள் (No man’s land) சுமார் 1 கி.மீ. வரை இருளில் சென்று விட்டது தெரியவந்தது.

உடனடியாக, ராணுவ வாகனங்களில் துரத்திச் சென்று அவர்களை தாக்கினர், ராணுவத்தினர். சிலர் கொல்லப்பட்டனர், சிலர் காயமடைந்து வீழ்ந்த நிலையில் கைப்பற்றப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் ஆன்டனி.

சார்ள்ஸ் ஆன்டனி கொல்லப்பட்டபோது, கையில் ஒரு துப்பாக்கியுடன் இருளில் ஓடிக்கொண்டு இருந்தார்.

அவர் கொல்லப்படுவதற்கு முன் அவரது போட்டோ ராணுவத்துக்கு கிடைத்திருந்த காரணத்தால், அவர்தான் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் ஆன்டனி என்பதை ராணுவம் உறுதி செய்துகொண்டது. (தொடரும்)

நன்றி
-ரஷி-

விறுவிறுப்பு.கொம்

 

விடுதலைப் புலிகள் VS இலங்கை ராணுவம்: வெளியே சொல்லப்படாத சில ரகசியங்கள்-4

விடுதலைப் புலிகள் VS இலங்கை ராணுவம்: வெளியே சொல்லப்படாத சில ரகசியங்கள் – 3

விடுதலைப் புலிகள் VS இலங்கை ராணுவம்: வெளியே சொல்லப்படாத சில ரகசியங்கள்-2

விடுதலைப் புலிகள் VS இலங்கை ராணுவம்: வெளியே சொல்லப்படாத சில ரகசியங்கள்-1

 

Share.
Leave A Reply