டெல்லி: “எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும். அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்’ .. இதுதான் சுனந்தா புஷ்கரின் கடைசி டிவிட். அதன் பின்னர் அவர் மரணித்த நிலையில் பிணமாகத் தான் கண்டெடுக்கப்பட்டார். தற்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸார் அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர் கடந்தாண்டு டெல்லியில் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது சுனந்தா மரணம்.

காரணம் பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரர் என்பவருடன் சசிதரூருக்கு காதல் ஏற்பட்டதாக டுவிட்டர் வாயிலாக சுனந்தா குற்றம் சாட்டிய சில தினங்களிலேயே மர்மமான முறையில் மரணத்தைத் தழுவினார் சுனந்தா.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சுனந்தா மரணம் தொடர்பான வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்ய டெல்லி போலீஸ் முடிவெடுத்துள்ளது. இந்த நேரத்தில் சுனந்தாவின் வாழ்க்கைப் பாதையையும், அவரது மரணத்தால் ஏற்பட்டுள்ள மர்ம முடிச்சுகள் குறித்தும் சற்று திரும்பிப் பார்க்கலாம்.

06-1420540183-sunanda-shashi-tharoor-600-jpg3வது திருமணம்…
ஏற்கனவே இரண்டு முறை தனித்தனியாக திருமண வாழ்க்கையில் தோல்வி கண்ட சசிதரூர் மற்றும் சுனந்தா, கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர். ஆடம்பரமாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

குடும்பத்தில் குழப்பம்
காதல் தம்பதிகளாக வலம் வந்த சசிதரூர் – சுனந்தா தம்பதியின் வாழ்க்கையில் பாகிஸ்தான் செய்தியாளர் மெஹர் மூலம் சுனாமி வீசியது. கடந்தாண்டு ஜனவரி மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் சசிதரூருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹருக்கும் தொடர்பு இருப்பதாக சுனந்தா குற்றம் சாட்டினார். ஆனால், இதற்கு சசிதரூர் மறுப்புத் தெரிவித்தார்.

சடலமாக மீட்பு…
இந்தப் பிரச்சினை இப்படியாக போய்க் கொண்டிருந்த போதே, கடந்தாண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஹோட்டலில், தனது அறையில் சடலமாக மீட்கப் பட்டார் சுனந்தா.

உடலில் காயங்கள்…
சுனந்தாவின் உடலில் ஊசி போட்டதற்கான காயங்களும், கடித்ததற்கான தடமும் இருந்தது சந்தேகத்தை உண்டாக்கியது. மேலும், அவரது அறையில் இருந்து மாத்திரை அட்டைகள் சிலவும் கைப்பற்றப் பட்டன.

.

முதற்கட்ட விசாரணையில்,
அவர், அதிகப்படியான மாத்திரைகளை சாப்பிட்டதே மரணத்துக்கு காரணம் என, கூறப்பட்டது.இதற்குபின், தடயவியல் துறையினர் நடத்திய பரிசோதனையில், சுனந்தாவின் இரைப்பையில், விஷம் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.இதனால், சுனந்தா விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா அல்லது விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்தாரா என்ற சர்ச்சை எழுந்தது.

தடயவியல் ஆய்வு…
அந்த அறையில் இருந்த போர்வை, திரவ பொருட்களின் தடம் காணப்பட்ட தரை விரிப்புகள், உடைந்த கண்ணாடி பொருட்கள் ஆகியவை அனைத்தும் தடயவியல் ஆய்வுக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 3 செல்போன்கள், லேப்டாப் ஆகியவையும் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விமானத்திலும் சண்டை…
இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஜனவரி 15ம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு வந்தபோது விமானத்தில் வைத்தே தரூரும், சுனந்தாவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்த மற்ற பயணிகள் கூறினார்கள்.

லூபஸ் நோய்…
‘தரூர் சுனந்தா மீது பைத்தியமாக இருந்தார். அனைத்து திருமணங்களிலும் சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் அவர்கள் சந்தோஷமாகத் தான் இருந்தார்கள். சுனந்தாவின் உடல்நிலை தான் பிரச்சனையாக இருந்தது. நான் சுனந்தாவை கடைசியாக துபாயில் சந்தித்தபோது லூபஸ் நோயால் அவதிப்பட்ட அவர் மெலிந்து காணப்பட்டார். அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார்’ என சுனந்தாவின் தோழிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

முன்கூட்டியே உயில்…
சுனந்தா தனது நண்பரும், வழக்கறிஞருமான ரோஹித் கொச்சார் உதவியுடன் தனது மரணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பே உயில் எழுதி வைத்து விட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து அவர் மன உளைச்சலால் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதற்குத் தகுந்தாற்போல், சுனந்தாவின் மகன் சிவ்மேனனும் தனது தாயாரை சசி தரூர் கொன்றிருக்க மாட்டார் எனத் தெரிவித்தார்.

விஷம் தான் காரணம்
சுனந்தாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற குழப்பம் நீடித்த நிலையில், சுனந்தா புஷ்கர் விஷம் மூலமாகவே உயிரிழந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை ஒன்றை அளித்தது. சுனந்தாவே விஷம் அருந்தினாரா அல்லது கட்டாயப் படுத்தப் பட்டு விஷம் அருந்த வைக்கப் பட்டாரா என்ற குழப்பம் உண்டானது.


போலி மருத்துவ அறிக்கை புகார்…
இதற்கிடையே போலியான மருத்துவ அறிக்கை தரக் கூறி வற்புறுத்தியதாக சுனந்தா உடலை பிரேத பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவக் குழுவில் இருந்த டாக்டர் சுதிர் குப்தா பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்தார். மேலும், சுனந்தாவின் மரணம் இயற்கையாக நடந்ததாக அறிக்கைத் தர தன்னை நிர்பந்தித்ததாகவும் அவர் கூறினார்.

கொலை வழக்காக…
இத்தனைக் குழப்பங்கள், பரபரப்புகளுக்குப் பிறகு தற்போது சுனந்தா வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளது டெல்லி போலீஸ். “எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும். அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்’ என கடைசியாக ட்வீட் செய்துவிட்டு மரணத்தைத் தழுவிய சுனந்தாவின் கொலையாளிகள் யார் என்ற புதிய பரபரப்பு தொடங்கியுள்ளது. சிக்கப் போவது யாரோ!

Share.
Leave A Reply

Exit mobile version