முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமைச்சின் அதிகாரங்களுக்கு அப்பால் சென்று வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளார் என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டின் பாதுகாப்பு படையினரிடம் இருந்த பெற்ற நவீன ஆயுதங்களை, கோத்தபாய ராஜபக்ச துணை இராணுவத்தை பயன்படுத்தி வெளிநாடுகளில் இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம், போக்கோ ஹராம், கடற்கொள்ளையர்களுக்கு விற்றுள்ளார்.
இதன்மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்துள்ள தகவல்களை கவனத்தில் கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இலங்கை படையினருக்கு இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்கள் மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு விற்பனை செய்து, 2009 ஆம் ஆண்டு முதல் கோத்தபாய பெரும் செல்வத்தை ஈட்டியுள்ளார்.
கோத்தபாயவின் தொடர்புடன் பல்வேறு நபர்களின் பெயர்களில் இந்த பணம் பல உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காலியில் கண்டுப்பிடிக்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியத்தில் இருந்து 20 கொள்கலன் பெட்டிகளுக்கு மேலதிகமாக மூன்று கொள்கலன் பெட்டிகள் காலி கடற்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டன.
அவற்றில் இருந்த ஆயுதங்கள் படைகளில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட ஆயுதங்கள் அல்ல.
இந்த ஆயுதங்களில் கனரக ஆயுதங்களும் இருந்துள்ளதுடன் அவை சிவில் பாதுகாப்புக்கு பயன்படாத, போர் களத்தில் மாத்திரம் பயன்படுத்தப்படக் கூடிய ஆயுதங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பில் ஒரு துணைப் படைக்குரிய களஞ்சியத்தில் இருந்து மாத்திரம் ஆயிரத்து 555 ரி.56 ரக துப்பாக்கிகளும் 14 லட்சம் தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில், பொலிஸார் மாத்திரம் பயன்படுத்தும் எஸ்.84 ரக துப்பாக்கிகளும் இருந்துள்ளன. பொலிஸார் பயன்படுத்தும் இந்த துப்பாக்கிகள் பொலிஸ்மா அதிபர் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு பாதுகாப்பு பிரிவுகளுக்கு வழங்கியதில்லை.
அப்படியானால், எந்த அனுமதியில் இந்த துப்பாக்கிகள் துணைப்படையின் களஞ்சியத்திற்கு வந்தது?. அனுமதி வழங்கியது யார்?,
இந்த ஆயுதங்கள் இலங்கையில் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு விற்பனை செய்யவே களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது என்பது உறுதியாகியுள்ளது.
இந்த மிகப் பெரிய ஆயுத பயன்பாடு மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அனுமதிப் பெறப்படவில்லை என கோத்தபாயவின் துணைப்படை குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கலில் சம்பாதித்த பணம் நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வாவின் பெயரில் உள்ள பல்வேறு வங்கிகளில் உள்ள 58 கணக்குகளில் வைப்ப்புச் செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
உலக பிரபல்யம் பெற்ற ஆபத்தான பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், போக்கோ ஹராம், அல்- கைதா, இஸ்லாமிக் ஜிகாத், ஹிஸ்புல்லா, ஹமாஸ், பட்டா அல் சலாம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு, பல்வேறு கடற்கொள்ளை குழுக்களுக்கும் இந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளனதுடன் பல கோடி ரூபா பணம் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது.
எவண் காட், ரக்னா லங்க போன்ற கோத்தபாயவின் துணைப்படைகள் குறித்து கண்டறியப்பட்டுள்ள தகவல்களின் படி அந்த இரண்டு துணைப்படைகளின் பணிப்பாளர்கள் மியன்மார், சோமாலியா, எரித்திரியா, சூடான், சீசெல்ஸ், மொசேம்பிக், கென்யா, தன்சானியா, நைஜீரியா, டோகோ, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கோத்தபாயவுக்கு 50 பேரின் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையில் அவர் உத்தியோகபூர்வமற்ற வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பில் இருந்து தகவல் தரும் நபர்கள் கூறுகின்றனர்.
கோத்தபாயவின் இந்த ஆயுத விற்பனை குறித்து சர்வதேச நாடுகளும் கண்காணித்து வந்ததுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட விசேட தரப்பினர் தற்போது இலங்கை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.