முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009ம் ஆண்டு போரின் போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவிடம் அமைக்க, வட மாகாணசபை ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபையின் 25வது அமர்வு நேற்றய தினம் மாகாண சபையின் பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த நினைவிடம் அமைப்பது தொர்பிலான தீர்மானம், கடந்த 2014.01.27ம் திகதி மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதன்போது பொருத்தமான காலம் வரும்போது அது குறித்து நாம் பேசுகின்றோம். என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது அதற்குப் பொருத்தமான காலம் வந்துள்ளதாக கருதப்படும் நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும். என சபையில் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் குறித்த நினைவிடத்தை அமைப்பதற்கு மாகாணசபையிடம் விஷேடமான நிதி ஒழுங்குகள் எவையுமில்லை, எனவே பொதுமக்கள் இணைந்து குறித்த நினைவிடத்தை அமைக்க விரும்பினால் அதற்காக மக்கள் ஒரு நிதியத்தை ஒழுங்கமைத்து, அதன் ஊடாக மேற்கொள்ளலாம்.
அதற்கு வடமாகாண சபை தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும், மேலும் நினைவிடம் அமைப்பதற்கான அனுமதி சிக்கல்கள் எவையும் இருப்பின் அது தொடர்பிலும் நாம் நடவடிக்கை எடுப்போம். இதற்கு மேலதிகமாக முன்னைய அரசாங்கம் இதற்கு அனுமதி மறுத்துவந்தது.
ஆனால் தற்போதைய அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கலாம். எனவே நாங்கள் குறித்த நினைவிடத்தை அமைக்கும் திட்டத்தை வரவேற்கிறோம், என முதலமைச்சர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சட்டத்திட்டப்படி வீதிகளுக்குப் பெயரிடுதல் மற்றும் நினைவிடம் அமைத்தல் போன்றனவற்றுக்கு, அனுமதி பெறப்படவேண்டும்.
எனவே உள்ளுராட்சி அமைச்சர் என்றவகையில் முதலமைச்சருக்கு நினைவிடத்தை அமைக்கவிருக்கும் மக்கள் அது குறித்து கோரிக்கை ஒன்றினை அனுப்பினால், அவர் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார், என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள் கோரிக்கையினை முதலமைச்சருக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்தனர்.