இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய நிலையைக் கண்காணிப்பதிலும், இலங்கை தொடர்பான தனது நிலைப்பாடு நடுநிலையானது என்பதை வெளிப்படுத்துவதிலும் அமெரிக்கா இப் போது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது.
அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரம் தொடர்பான உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவர், கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்குச் சென்று நிலைமைகளை மதிப்பீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அதுபோலவே, வரும் ஜூன் மாதம், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை இலங்கை மீதான அமெரிக்காவின் ஆர்வத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை.
உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, தனது இலங்கைப் பயணத்தின் போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்கள் தொடர்பாக, பரந்துபட்டளவு கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
அதன் ஒரு கட்டமாக அவர், போரில் உயிரிழந்த இரண்டு தரப்பினருக்காகவும், முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலியும் செலுத்தினார்.
போர் முடிந்து, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகப் போகின்ற நிலையில், இதுவரை இலங்கை வந்த அமெரிக்க உயர் அதிகாரிகள் எவரும், போரில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்த முனையவில்லை.
ஆனால், இப்போது அமெரிக்கா சார்பில் ரொம் மாலினோவ்ஸ்கி அஞ்சலி செலுத்தியிருக்கிறார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், அவ்வாறு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்படும் வாய்ப்பு இல்லாதது ஒரு காரணமாகக் கூறப்படலாம்.
என்றாலும், தற்போதைய நிலையில், அமெரிக்கா சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டதற்கு, முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் செய்ய முடியாமல் போனதை, மட்டும் ஒரு காரணமாக குறிப்பிட முடியாது.
அதற்கும் அப்பால், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையைப் பிற்போட்ட விவகாரத்தில், தமிழர்களுக்கு அநீதி இழைத்து விட்டதான உறுத்தல் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
(சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.)
அல்லது, இந்த விவகாரத்தினால், அமெரிக்கா மீதான நம்பிக்கையை தமிழர் தரப்பு இழந்து போயிருப்பதை, உணர்ந்து கொண்டு தமிழர் மத்தியில் தன் மீதான நம்பகத்தன்மையை மீள்சமநிலைப்படுத்த முயன்றிருக்கலாம்.
முள்ளிவாய்க்காலை இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்கா தெரிவு செய்தது, தமிழர்களின் இதயங்களைத் தொடுவதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், கடந்த மார்ச் மாத அமர்வில், இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அதனைத் தனது அதிகாரம், செல்வாக்கு என்பவற்றைப் பயன்படுத்தி, ஆறு மாதங்களுக்குப் பிற்போடச் செய்தது அமெரிக்கா.
ஐ.நாவினதும், அமெரிக்காவினதும் இந்த நகர்வு உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் விசனத்தையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியது.
எதிர்காலத்தில், போர்க்குற்ற விசாரணைகள், பொறுப்புக்கூறல் முயற்சிகள், பழைய உத்வேகத்துடன் தொடருமா என்ற கேள்வியையும் எழுப்ப வைத்தது.
அமெரிக்காவும், மேற்கு நாடுகளும், இலங்கைத் தீவில் தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்தின.
இந்த மேற்குலக நலன்சார் நகர்வுக்குள் தமிழர்களின் நலன் நசிபட்டுப் போனது உண்மை. இதனை அமெரிக்கா உணர்ந்திருக்கக் கூடும்.
ரொம் மாலினோவ்ஸ்கி போன்ற அமெரிக்க இராஜதந்திரிகள் தமது பயணங்களின் போதும், கலந்துரையாடல்களின் போதும், இதனை அறிந்து கொண்டிருக்கவும் கூடும்.
இத்தகைய நிலையில், தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வையும், அவநம்பிக்கையையும் களையும் நோக்குடன் அமெரிக்கா செயற்பட எத்தனித்திருக்கலாம்.
ஆனால், முள்ளிவாய்க்காலில் அமெரிக்கா சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்ட விவகாரம் முக்கியமானதொன்றாகவே இருந்தாலும், இது தமிழ்மக்களால் பெரியதொரு விவகாரமாகப் பார்க்கப்பட்டது என்று கருத முடியாது.
ஏனென்றால், அதற்கும் அப்பாற்பட்ட நடவடிக்கையைத் தான் தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதாவது, ஐ.நா. வின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு, அதன் மீதான நியாயமான சர்வதேச பொறுப்புக்கூறும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அத்தகையதொரு முயற்சியை ஆரம்பத்தில் முடக்கி விட்டது அமெரிக்கா. வரும் செப்டெம்பரிலாவது அந்த முயற்சிகள் தொடர்வதை உறுதிப்படுத்திக் கொள்வதைத் தான் தமிழர் தரப்பு எதிர்பார்க்கிறது.
இந்தநிலையில், தனது இலங்கைப் பயணத்தின் முடிவில், ரொம் மாலினோவ்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்த போது அவரிடம், ஜெனீவாவில் வரும் செப்டெம்பர் மாதம் இலங்கை குறித்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு, அவர், செப்டெம்பருக்குப் பின்னர் என்னவென்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐ.நா. அறிக்கையில் என்ன கூறப்படும் என்று தம்மால் எதிர்வு கூற முடியாது என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் ரொம் மாலினோவ்ஸ்கி கூறியிருந்தார்.
இருந்தாலும், செப்டெம்பருக்குப் பின்னர் கூட, இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா நடந்து கொள்ளுமா என்ற சந்தேகம் உள்ளது.
ஏனென்றால், அமெரிக்க நலன்களை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டிய தேவை வாஷிங்டனுக்கு உள்ளது.
எனவே, சர்வதேச அரங்கில், இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து, அதனுடனான உறவுகளை அந்நியப்படுத்த அமெரிக்கா முனையாது.
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இலங்கை முக்கியமானதொரு கேந்திரமாக உள்ளது,
இந்தியப் பெருங்கடலில், சீன ஆதிக்கத்தை முறியடிக்க, இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவுக்கு, இலங்கை சவாலானதொன்றாகவே இருந்து வந்தது.
முன்னைய அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து வந்த நெருக்கத்தினால், அமெரிக்க, இந்திய நலன்கள் பாதிக்கப்பட்டன.
அந்த நிலையை கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தல் மாற்றியமைத்து விட்டது.
அந்த ஆட்சி மாற்றத்தில் கூட அமெரிக்காவின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது.
மாறியுள்ள இந்தச் சூழலில், தமக்குச் சாதகமான ஒரு அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில், அழுத்தம் கொடுத்தோ நெருக்கடி கொடுத்தோ அந்நியப்படுத்த அமெரிக்கா விரும்பாது.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், மீண்டும், சீனா, ரஷ்யாவை நோக்கி இலங்கை ஓடிவிடும் என்பது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும்.
இதனால், வரும் செப்டெம்பருக்குப் பின்னர் கூட, இலங்கைக்கு எதிரான பாரிய நகர்வுகள் எதையும், அமெரிக்காவிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு, ஐ.நா வெளியிடப் போகும் அறிக்கையின் உள்ளடக்கம் தெரிந்திருக்கலாம். தெரியாமல் போயிருக்கலாம்.
அதன் உள்ளடக்கம் அமெரிக்காவுக்கு இப்போது தேவையில்லை.
அதாவது, அடுத்த நகர்வு குறித்து தீர்மானிப்பதற்கு ஐ.நா. விசாரணை அறிக்கை அமெரிக்காவுக்குத் தேவையில்லை.
ஏனென்றால், அமெரிக்கா எடுக்கப்போகும் தீர்மானம் அதனைச் சார்ந்த ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும், இலங்கையில் எல்லா மக்களையும் திருப்திப்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா ஆர்வம் காட்டுகிறது.
அதற்காகவே, மலர் அஞ்சலி செலுத்தி தான் உங்களின் பக்கம் நிற்கிறேன் என்று காண்பிக்க முயன்றிருக்கிறது.
எவ்வாறாயினும், இதன் உள்நோக்கம் என்ன என்பதை, வரும் செப்டெம்பர் மாதம், வெளியாகப் போகும் போர்க்குற்ற விசாரணை அறிக்கை மீதான அமெரிக்காவின் நகர்வில் தெளிவாகவே புரிந்து கொள்ளலாம்.
-ஹரிகரன்-