பொலிவூட் சுப்பர் ஸ்டாரான சல்மான் கானுக்கு மும்பை நீதிமன்றமொன்றினால் 5 வருட கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திச் சென்று, வீதியோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலேயே நேற்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சல்மான் கான் மேன்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு மும்பை மேல் நீதிமன்றத்தால் இரு நாட்கள் இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு சிறைத்தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பானது பொலிவூட் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2002 செப்டெம்பர் 28 ஆம் திகதி மும்பையில் விருந்தொன்றில் கலந்துகொண்ட பின்னர், சல்மான் கான் பயணம் செய்த வாகனம் மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள பேக்கரியொன்றுக்கு அருகில் வீதியோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் மீது ஏறியது.
இதனால் வீதியில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் நால்வர் காயமடைந்தனர்.
நூருல்லா மெஹ்பூப் ஷெரீப் என்பவரே உயிரிழந்தாகவும் கலீம் மொஹமட் பதான், முன்னா மலை கான், அப்துல்லா ரவூப் ஷேக், முஜ்லிம் ஷேக் ஆகியோர் காயமடைந்தனர் எனவும் தெரிவித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு நீண்டகாலமாக இழுபட்டது.
விருந்து நிகழ்வில் சல்மான் கான் மதுபானம் அருந்திவிட்டு போதையில் வாகனம் செலுத்தியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் கூறினர்.
அதேவேளை, இவ்விபத்தின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் சல்மான் கான் தப்பிச் சென்றதாகவும் கூறப்பட்டது.
ஆனால், சல்மான் கான் இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார். சல்மான் கான் மதுபானம் அருந்தியிருக்கவில்லை தண்ணீரையே அருந்தினார் என அவரின் வழக்குரைஞர்கள் வாதாடினர்.
மேற்படி விபத்தின்போது தான் வாகனத்தை செலுத்தவே இல்லை எனவும் தனது சாரதியான அஷோக் சிங் என்பவரே இவ்வாகனத்தை செலுத்திவந்ததாகவும் சல்மான் கான் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் இவ்வழக்கில் சல்மான் கான் நேரடி யாக நீதிமன்றில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்த வேளையிலும் தான் வாகனத்தை செலுத்தவில்லை எனக் கூறினார்.
சல்மான் கானின் சாரதியான அஷோக் சிங், நீதிமன்றில் வாக்குமூலம் அளிக்கையில், சல்மான் கான் வாகனத்தை செலுத்தவில்லை எனவும் தானே அதை செலுத்தியதாகவும் கூறினார்.
விபத்தின் பின்னர் சல்மான் கான் தப்பியோடவில்லை எனவும் வாகனத்திலிருந்து இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இதை மறுத்த அரச வழக்குரைஞர்கள், இவ்வளவு காலமும் அஷோக் சிங் ஏன்குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினர்.
வாகனத்தில் சாரதியின் ஆசனப்பக்கமாகவுள்ள கதவுக்கூடாக சல்மான் கான் இறங்குவதை சாட்சிகள் கண்டதாக அரச வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டினர்.
இக்கூற்றை அரச வழக்குரைஞர்கள் ஏற்க மறுத்தனர். வாகனத்திலிருந்த கோளாறு ஒன்றே இவ்விபத்துக்கு காரணமாகியது எனக் கூறப்பட்டதையும் அரச வழக்குரைஞர்கள் நிராகரித்தனர்.
இத்தகைய கோளாறு இருந்திருந்தால் அந்த ஆடம்பர வாகனத்தின் சமிக்ஞைகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கும் என அவர்கள் கூறினர்.
இவ்வாகனத்தின் பின் ஆசனத்தில் பயணம் செய்த பொலிஸ் மெய்க்காவலரான ரவீந்திர பட்டேல் முக்கிய சாட்சிகளில் ஒருவராக விளங்கினார்.
சல்மான் கான் போதையுடன் இருந்ததாகவும் மணித்தியாலத்துக்கு 95 கிலோமீற்றர் வேகத்தில் அவர் வாகனத்தை செலுத்திச் சென்றதாகவும் அப்பொலிஸ் உத்தியோகஸ்தர் கூறினார்.
இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் அவர் காலமானார். அதனால் அவரை குறுக்கு விசாரணை செய்ய முடியாதென்பதால் அவரின் சாட்சியத்தை கருத்திற்கொள்ளக்கூடாது என சல்மான் கானின் வழக்குரைஞர்கள் வாதாடினர்.
அதேவேளை மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவரின் உடலில் விபத்தின் காரணமாக காயம் ஏற்பட்டிருந்ததாகவும்….
சல்மானின் வாகனத்தை தூக்குவதற்கு, பாரம் தூக்கி (கிரேன்) ஒன்றை பொலிஸார் அழைப்பித்தபின், சல்மானின் வாகனத்தை கிரேனினால் ஒரே தடவையில் தூக்க முடியாமல் அவ்வாகனம் வீழ்த்தப்பட்ட வேளையிலேயே மேற்படி நபர் நசுங்கி உயிரிழந்தார் எனவும் சல்மானின் வழக்குரைஞர்கள் வாதாடினர்.
எவ்வாறெனினும் சல்மான் கான் தரப்பு வாதங்கள் பலவற்றை மும்பை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. சல்மான் கானே மேற்படி வாகனத்தை செலுத்தியதாக நீதிபதி டி.டபிள்யூ.தேஷ்பாண்டே கூறினார்.
இவ்வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பபட்டது.
மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு 10 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தீர்ப்பு தொடர்பாக சல்மான் கான் மேன்முறையீடு செய்யவுள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்குமாறு அவரின் சட்டத்தரணிகள் மும்பை மேல் நீதிமன்றத்தில் கோரினர்.
அதையடுத்து சல்மான்கானுக்கு மும்பை மேல் நீதிமன்றம் இரு நாட்கள் இடைக்கால பிணை வழங்கியுள்ளது. இப்பிணை மனு தொடர்பான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
>
சல்மான் கானுக்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பரிதாப இறப்பு
08-05-2015
கடைசிவரை தனது முறைப்பாடு குறித்து திடமான மனதுடன் இருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் காசநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சல்மான் கானுக்கு மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டது.
இதன் காரணமாக அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கடந்த 1998 ஆம் ஆண்டு ரவீந்திர பாட்டீல் எனும் பொலிஸ் கான்ஸ்டபிளை சல்மான் கானுக்கு பாதுகாப்பிற்காக பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு, அதிக மது குடித்து விட்டு காரைத் தானே ஓட்டியுள்ளார் சல்மான் கான்.
அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்துள்ளார். காரை மெதுவாக ஓட்டுமாறு கூறியுள்ளார். அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினார்.
இந்த விபத்தில் பாட்டீலுக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன் காரணமாக அவர் பல மிரட்டல்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துள்ளார்.
நீதிமன்றத்திலும் துணிச்சலாக சல்மான் கானுக்கு எதிராக சாட்சியமளித்துள்ளார்.
இதனால் அவருக்கு பல தரப்பிலும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியைத் தாங்க முடியாமல் அவர் தலைமறைவானதாக அப்போது கூறப்பட்டது.
அதன்பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பொலிஸ் கான்ஸ்டபிள் பணியில் இருந்தும் அவரை நீக்கினர்.
அதன்பிறகு, கடந்த 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீவ்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அநாதையாக பாட்டீல் கிடந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த பாட்டீல், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2007 ஒக்டோபர் மாதம் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாட்டீலை மருத்துவமனையில் சேர்த்தது அவரது நண்பர் சுஷாந்த் சாவந்த் என்பவர் தான்.
அவர் கூறும்போது, இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், பாட்டீல் என்னிடம் மனம் திறந்து பேசினார். ‘சல்மான் கான் மீது தான் கூறிய புகாரில் கடைசி வரை உறுதியாக இருந்தேன். ஆனால், என்னுடைய பொலிஸ் துறையினரே எனக்கு ஆதரவாக இல்லை.
எனக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலை வேண்டும். நான் வாழ வேண்டும். ஒரு முறை பொலிஸ் ஆணையாளரைச் சந்தித்துவிட வேண்டும்’ என்று கூறினார். ஆனால், பரிதாபமாக உயிரிழந்து விட்டார்,’ என்றார்.
