போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை இராணுவத்தை, சர்வதேச தரம் வாய்ந்த ஒன்றாக சர்வதேச நியமங்களுக்கேற்ப செயற்படும் ஒன்றாக மாற்றுகின்ற முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த மாதம் 25ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்காக மேஜர் ஜெனரல் மைத்ரி டயஸ் தலைமையில், இரண்டு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்ட 141 படையினர், கடந்தவாரம் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர்.
இது வெளிநாடு ஒன்றுக்கு இலங்கை படையினரை உதவிப் பணிகளுக்கு அனுப்பிய முதலாவது சந்தர்ப்பமாகும்.
இதற்கு முன்னர் ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அடுத்து, உதவிப்பணிக்கு இலங்கைப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதும், அதுபற்றிய தெளிவான தரவுகள் இல்லை.
ஆனால், இலங்கை படையினர், வெளிநாடொன்றில் மேற்கொண்ட மிகப் பெரியதும், காத்திரமானதுமான மீட்பு, உதவிப் பணி என்று நேபாளத்தில் மேற்கொண்டதை குறிப்பிட்டுக் கூறலாம்.
விமானப்படையின் சி-130 விமானத்தின் மூலமும், சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலமும், படையினரும், பொருட்களும் காத்மண்டுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
படையினரையும், பொருட்களையும், ஏற்றிச் சென்ற விமானப்படையின் சி-130 போக்குவரத்து விமானம், காத்மண்டுவில் பழுதடைந்து போய் நின்றதால், உதவிக் குழுவினரை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இலங்கைப் படையினர், சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மனிதாபிமானப் பணி ஒன்றில் ஈடுபட்டதான பாராட்டைப் பெற்றிருக்கிறார்கள்.
எனினும், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், மனிதாபிமானப் போர் என்ற பெயரில், வன்னியில் மேற்கொள்ளப்பட்ட போரின் போது, படையினரால் பாரியளவில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து, காப்பாற்ற, இதுபோன்ற மனிதாபிமானப் பணிகள் உதவப் போவதில்லை.
சர்வதேச அளவில் இலங்கை இராணுவத்தை ஒரு தொழில்சார் இராணுவமாக தரமுயர்த்திக் கொள்வதற்கான முயற்சிகளில் ஒன்றாகவும், நேபாள மீட்பு நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இலங்கை இராணுவத்துக்கும், அரசாங்கத்துக்கும், போர்க்குற்றச்சாட்டுகள் ஏற்படுத்திய அசெளகரியங்களில் இருந்து மீள வேண்டிய அவசியம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
அதற்காக, வெளியுலகின் பாராட்டைப் பெற்றுக் கொள்வதற்கான மனிதாபிமானப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது அரசாங்கம்.
இப்போதைய நிலையில், ஐ.நா. அமைதிப்படையில் இலங்கைப் படையினருக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவதே, அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் ஒரே குறியாக இருக்கிறது.
ஐ.நா. அமைதிப்படையில் தற்போது, இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த 1286 படையினர் பணியாற்றுகின்றனர்.
விமானப்படையின் ஹெலிகொப்டர் அணியொன்றும், இராணுவத்தின் துருப்புக்காவி கவச வாகனங்களும் கூட, ஐ.நா. அமைதிப்படையில் இயங்கி வருகின்றன.
ஐ.நா. அமைதிப்படையில் துருப்புக்களை இணைத்துக் கொள்வதன் மூலம், பல்வேறு நன்மைகளை அடைய முடியும்.
படையினருக்கு வெளிநாட்டு கள அனுபவத்தையும், ஐ.நாவின் கீழ் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப எவ்வாறு பணியாற்றுவதென்ற பயிற்சியையும் படையினருக்கு பெற்றுக் கொடுக்க முடியும்.
சுமார் ஆயிரம் டொலர் வரை மாத ஊதியம் வழங்கப்படுவதால், படையினருக்கு குறிப்பிட்ட காலத்துக்கு கணிசமான வருமானத்தை ஈட்டிக் கொடுக்க முடியும்.
போர்க்குற்றச்சாட்டுகளினால் இழந்து போயிருக்கும் இலங்கை இராணுவத்தின் பெயரை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.
போருக்காக திரட்டப்பட்ட பெருமளவு படையினரில் ஒரு பகுதியினரை, பராமரிக்கும் அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும்.
மேலும் நாட்டுக்கு அந்நியச் செலாவணி வருவாயும் கிடைக்கிறது. இது போன்ற பல்வேறு காரணங்களுக்காகவே, ஐ.நா. அமைதிப்படையில் இலங்கைப் படையினரை இணைத்துக் கொள்வதை அதிகரிப்பதில் அரசாங்கம் நாட்டம் காட்டி வருகிறது.
இலங்கைப் படையினரை, ஐ.நா. அமைதிப்படையில் சேர்த்துக் கொள்வதற்கு ஐ.தே.க அரசாங்கமே முக்கியமான காரணியாகும்.
1960ஆம் ஆண்டு ஐ.நா. அமைதிப்படையில், கொங்கோவில் பணியாற்றுவதற்காக ஆறு கண்காணிப்பாளர்களை இலங்கை முதன்முறையாக அனுப்பியிருந்தது.
அதற்குப் பின்னர், 2002இல் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் முயற்சியால், ஐ.நா. அமைதிப்படையில் அதிகளவு படையினரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பெறுபேறாகவே, ஹெய்ட்டிக்கு 2004ஆம் ஆண்டில் 950 பேர் கொண்ட இலங்கை இராணுவப் படைப்பிரிவு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இப்போது, ஹெய்டி, லெபனான், மேற்கு சஹாரா, தென்சூடான், கொங்கோ உள்ளிட்ட இடங்களில் இலங்கைப் படையினர் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றி வருகின்றனர். போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைப் படையினரை அதிகளவில் ஐ.நா. அமைதிப்படையில் இணைத்துக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் பெரியளவிலான முயற்சிகளை மேற்கொண்டது.
ஐ.நா. அமைதிப்படைக்கு 5000 படையினரை அனுப்பப் போவதாக, படையினருக்கு வாக்குறுதிகளையும் கொடுத்திருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.
ஆனால், அவரது காலத்தில் அது எட்டாக்கனியாகவே இருந்தது. இப்போதும் கூட, ஐ.நா. அமைதிப்படைக்கு அதிகளவில் இலங்கைப் படையினரை சேர்த்துக் கொள்ள வைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போதும், அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போதும், ஐ.நா. அமைதிப்படைக்கு கூடுதல் படையினரைச் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கோரிக்கையை வெளிப்படையாகவே முன்வைத்திருந்தார்.
எப்படியாவது 5000 இலங்கைப் படையினரை ஐ.நா. அமைதிப்படையில் இணைத்துக் கொள்வதன் மூலம், படையினரினதும் நாட்டினதும் வருவாயை உயர்த்திக் கொள்ளலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
அதைவிட, படைவிலக்க, படைக்குறைப்பு சர்ச்சைகளில் இருந்து மீள்வதற்கும் இது உதவும் என்று அரசாங்கம் கருதுகிறது.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு படைக்குறைப்பு மற்றும் படைவிலக்கம் முக்கியமானது என்றும், அதற்கு அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் உதவ முடியும் என்றும் அண்மையில் இந்திய ஊடகம் ஒன்று ஆலோசனை கூறியிருந்தது.
இலங்கைப் படையினருக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகளைத் தேடிக் கொடுப்பதன் மூலம், இலங்கைக்கு உதவ முடியும் என்றும், இந்திய ஊடகம் குறிப்பிட்டிருந்தது.
வடக்கிலிருந்து விலக்கப்படும் படையினரில் ஒரு பகுதியினரை, ஐ.நா. அமைதிப்படையில் இணைத்துக் கொள்வதன் மூலம், அவர்களை நிலை நிறுத்தும் பிரச்சினையில் இருந்தும், பராமரிக்கும் அழுத்தங்களில் இருந்தும் இலங்கை அரசாங்கத்தினால் விடுபட முடியும்.
இப்போதைய அரசாங்கம், அந்தக் காரணத்தை முன்வைத்தே அமெரிக்க ஆதரவைப் பெற முனைகிறது. ஐ.நா. அமைதிப்படைக்கு ஆளணியை அதிகரிப்பதில் அமெரிக்காவின் செல்வாக்கு அதிகம்.
ஆனால், ஐ.நா. அமைதிப்படையில் அமெரிக்கா வெறும் 95 பேரை மட்டும் தான் இணைத்திருக்கிறது.
120 நாடுகளைச் சேர்ந்த 97,175 பேர் இதில் பணியாற்றுகின்றனர். மற்றநாடுகள் ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பியிருந்தாலும், அமெரிக்கா தனது படையினரை இதில் ஈடுபடுத்துவதில்லை.
அதேவேளை, இலங்கைப் படையினரை அதிகளவில், ஐ.நா. அமைதிப்படையில் இணைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா தரப்பில் தயக்கம் காண்பிக்கப்படுகிறது. ஐ.நா. தரப்பிலும் அதே நிலைதான் உள்ளது.
இதற்குப் பிரதான காரணம், இலங்கைப் படையினர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள்தான்.
குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கைப் படையினரை, விடுவிக்கும் அல்லது குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூற வைக்கும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே இந்த நிலைக்கான காரணமாகும்.
ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிச்செயலர் அன்ரனி ஜே பிளிங்கன், கடந்த மார்ச் மாதம் நிகழ்த்திய உரையொன்றில், அமைதி நடவடிக்கையில் ஈடுபடும் நாடுகள் குறித்து பிரஸ்தாபித்திருந்தார்.
அத்துடன், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள், தமது படையினரின் பங்களிப்பை அதிகரிக்க முன்வந்துள்ளதாகவும், குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார்.
அந்த நீண்ட உரையில் இலங்கைப் படையினரின் பணிகள் தொடர்பாக பாராட்டுத் தெரிவிக்கப்படவோ அல்லது நீண்டகாலமாகவே, தமது படையினரை அதிகளவில் இணைத்துக் கொள்ளுமாறு இலங்கை விடுத்து வரும் வேண்டுகோள் குறித்தே சுட்டிக்காட்டப்படவில்லை.
இது, ஐ.நா. அமைதிப்படையில் இலங்கைப் படையினரை அதிகளவில் உள்ளீர்க்கும் உடனடித்திட்டம் ஏதும், அமெரிக்காவிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியது.
எனினும், அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் இலங்கை அரசாங் கம் இதனை மீளவும் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நிகழ்த்திய உரையின் போது, நாட்டைப் பாதுகாக்க இலங்கைப் படையினர் பெரும் பணியை ஆற்றியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ஐ.நா. அமைதிப்படையில் கூடு தல் படையினரை இணைக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியை மட்டும் அவர் அளிக்கவில்லை.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற் றத்தை சாதகமாக அமெரிக்கா கருதினாலும், இலங்கையுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு அது முயற்சித்தாலும், ஐ.நா. அமைதிப்படையில் கூடுதல் படையினரை இணைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா தரப்பில் அவ்வளவாக ஆர்வம் காண்பிக்கப்படவில்லை.
இது தற்போதைய அரசாங்கத்துக்கு நெருடலாகவே இருந்தாலும், நேபாள உதவிப் பணி போன்ற சர்வதேச சமூகத்தை ஈர்க்கும் செயற்பாடுகளின் மூலம் அந்த நிலையை மாற்றிக் கொள்ள எத்தனிக்கிறது.
இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்