ஹெங்கேரியில் முகாம்களில் தங்களை அடைக்கக்கூடாது எனக்கூறி ஏராளமான அகதிகள் திடீரென இரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சிரியாவில் இருந்து ஏராளமான அகதிகள் ஹங்கேரி வந்துள்ளனர்.
ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவுக்கு செல்ல அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கானோர் ஹங்கேரியின் புத்தபிஸ்ட் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று அவர்கள் இரயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்
தாங்கள் ஆஸ்திரியாவுக்கு தான் செல்கின்றோம் என்று அவர்களும் மகிழ்ச்சியுடன் சென்றனர். ஆனால் புறப்பட்ட சில நேரங்களில் திடீரென பைக்ஸ்கி(Bicske) இரயில் நிலையத்தில் இரயில் நிறுத்தப்பட்டதால் அகதிகள் குழப்பமடைந்தனர்.
பின்னர் அங்குள்ள அகதிகள் முகாமில் அவர்களை அடைக்க பொலிசார் முயன்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஏராளமான அகதிகள் தங்களை முகாம்களில் அடைக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் இரு தம்பதியினர் கைக்குழந்தையுடன் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பொலிசார் அவர்களை அப்புறப்படுத்தினர். தற்போது ஏராளமானோர் அகதிகள் முகாமுக்கு செல்ல மறுத்து இரயிலிலேயே இருப்பதாக கூறப்பட்டுள்ளது.