பிரிட்டனின் தற்போதைய மகாராணியான இரண்டாம் எலிசபெத் பிரிட்டனின் அரச தலைவராக நீண்ட காலம் இருந்தவர் என்ற சாதனையை இன்று பிற்பகலில் படைக்கிறார்.
இதுவரை அவரது பாட்டியாரான விக்டோரியா மகாராணியாரே பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியாக இருந்தார்.
(இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் சாதனையை ஒட்டி, பக்கிங்கம் அரண்மனை வெளியிட்ட சிறப்புப் புகைப்படம்.)
பிரிட்டிஷ் நேரப்படி மாலை ஐந்து முப்பது மணியளவில் தற்போதைய மகாராணியார், 63 வருடங்கள், எழு மாதங்கள் ஆட்சிசெய்து முடித்திருப்பார். அதாவது, 23,226 நாட்களும் 16 மணி நேரமும் 30 நிமிடங்களும் அவர் ஆட்சி செய்திருப்பார்.
இதை ஒட்டி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எனப்படும் மக்களவையில், பிரதமர் டேவிட் கேமரன், மகாராணியாருக்குப் புகழாரம் சூட்டுகிறார்.
மகாராணியாரின் தந்தையான 6ஆம் ஜார்ஜ் மன்னர் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி அதிகாலையில் உயிரிழந்தார்.
அவர் இறந்த நேரம் சரியாகத் தெரியவில்லை என்பதால், எந்த நேரத்தில் மகாராணியார் இந்த சாதனையைப் படைக்கிறார் என்பது தெரியவில்லை.
தற்போது 89 வயதாகும் மகாராணி, இன்றைய தினம் ஸ்காட்லாந்தில் இருந்தபடி தனது அலுவலகப் பணிகளைக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மகாராணியாரின் இந்த சாதனையை ஒட்டி, லண்டனில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தேம்ஸ் நதியில் நாடாளுமன்றத்திற்கும் டவர் ப்ரிட்ஜிற்கும் இடையில் நடக்கும் ஊர்வலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கப்பல்கள், பொழுதுபோக்குக்குப் பயன்படும் கப்பல்கள், பயணிகள் படகுகள் ஆகியவை பங்கேற்கின்றன.
தேம்ஸ் நதியில் நிறுத்தப்பட்டிருக்கும் எச்எம்எஸ் பெல்பாஸ்ட் கப்பல் நான்கு முறை முழங்கி தன் மரியாதையை வெளிப்படுத்தும்.
(மத்திய லண்டனில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் டெலிகாம் கோபுரத்தில் மகாராணியாருக்கு மரியாதை செலுத்தும்விதமாக “Long may she reign” என்ற வாசகம் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.)
இந்தத் தருணத்தைக் குறிக்கும் வகையில் பக்கிங்கம் அரண்மனை, மேரி மெக்கார்ட்னி எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
பிரிட்டனின் பிரதமர்களையும் அரச தலைவர்களையும் சந்திக்கும் அறையில் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
மகாராணியாரைப் பொறுத்தவரை கொண்டாட்டம் ஏதுமின்றி, வழக்கமான ஒரு நாளாகவே இந்த தினம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஸ்காட்லாந்தில் இருக்கும் மகாராணியார், எடின்பரோ கோமகனுடன் இணைந்து அங்கு 294 மில்லியன் பவுண்டு செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்காட்டிஷ் பார்டர் ரயில்வேயைத் துவக்கிவைக்கிறார்.
ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜனுடன் இணைந்து நீராவி ரயிலில் பயணமும் மேற்கொள்கிறார்.
விக்டோரியா – இரண்டாம் எலிசபெத்
இரண்டாம் எலிசபெத் மகாராணியாருக்கு முன்பாக விக்டோரியா மகாராணியாரே நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியாக இருந்தார்.
விக்டோரியா மகாராணி 18 வயதில் முடிசூடினார். இரண்டாம் எலிசபெத் மகாராணி 25 வயதில் முடிசூட்டிக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் வருடாந்திர உரை நிகழ்த்துவதற்காக வரும்போது, விக்டோரியா மகாராணியார் பயன்படுத்திய அதே கோச் வண்டியையே எலிசபெத் மகாராணியாரும் பயன்படுத்துகிறார்.
விக்டோரியா மகாராணியார் பால்மோரலில் வாங்கிய பண்ணை, எலிசபெத் மகாராணியாருக்கு மிகவும் பிடித்த இடமாகும்.
40 கோடி மக்களைக் கொண்ட சாம்ராஜ்யத்திற்கு விக்டோரியா மகாராணியார் அரசியாக இருந்தார். எலிசபெத் 13.8 கோடி மக்களைக் கொண்ட அரசின் தலைவியாக இருக்கிறார்.
விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள், 7 மாதங்கள் 2 நாட்கள் அரசியாக இருந்தார். அந்த காலகட்டத்தில் 10 பேர் பிரிட்டனின் பிரதமர்களாகப் பதவிவகித்தனர்.
எலிசபெத்தின் ஆட்சிக்காலத்தில் 12 பேர் பிரதமர்களாக பதவிவகித்துள்ளனர்.
Queen Elizabeth II has surpassed the record previously held by her great-great-grandmother, Queen Victoria, who spent 23,226 days as monarch. She is pictured here at her Coronation on February 6, 1952.
The Queen becomes Britain’s longest-serving monarch