முன்னாள்  ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ  மலே­ஷி­யாவுக்குச்   சென்­றி­ருந்த போது, அவ­ருக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஆர்ப்பாட்டங்களும், மலே­ஷி­யா­வுக்­கான இலங்கைத் தூதுவர் இப்­ராகிம் அன்சார் கோலா­லம்பூர் விமான நிலை­யத்தில் தாக்­கப்­பட்ட சம்­ப­வமும், பல்­வேறு தரப்­பிலும் சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருக்­கின்­ற­ன.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மாநாட்டைப் புறக்­க­ணித்துக் கொண்டு, மலே­ஷி­யாவுக்கு மஹிந்த ராஜபக் ஷ மேற்­கொண்­டி­ருந்த பயணத்தில் தொடங்­கிய சர்ச்­சைக்­கு­ரிய சம்­ப­வங்கள், மலே­ஷி­யாவுக்­கான இலங்கைத் தூதுவர் தாக்­கப்­பட்­டது வரை நீண்­டி­ருந்­தது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின்  65 ஆவது தேசிய மாநாட்டில் பங்­கேற்பதை   தவிர்ப்­ப­தற்­கா­கவே மஹிந்த  ராஜபக் ஷமலேஷியாவுக்கான பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

கோலா­லம்­பூரில் ஆசிய அர­சியல் கட்­சி­களின் ஒன்­ப­தா­வது மாநாட்டில் பங்­கேற்­கு­மாறு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் அதற்­கான வாய்ப்­பாகப் பயன்­ப­டுத்திக் கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட்டு தான் விலகி நிற்­கிறேன் என்று, தனது ஆத­ர­வா­ளர்­க­ளுக்குக் காட்டிக் கொள்­வதில் மஹிந்த ராஜபக் ஷ இது­வ­ரையில் வெற்­றியைப் பெற்­றி­ருக்­கிறார். மலே­ஷியப் பய­ணத்­தையும் அதற்­கா­கவே அவர் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார்.

மலே­ஷி­யாவுக்கு அவர் சென்­றி­ருந்த போது, கோலா­லம்­பூரில் அவ­ருக்கெதி­ரான ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன.

இலங்­கையில் போர்க்­குற்­றங்­களை இழைத்த மஹிந்த ராஜபக் ஷவை வெளி­யேற்ற வேண்டுமென்று கோரி, அங்­குள்ள தமிழ் அமைப்­பு­களைச் சேர்ந்தவர்கள் போராட்­டங்­களில் ஈடு­பட்­டனர்.

தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தப் போராட்­டங்கள் நீடித்­தி­ருந்­தன. மஹிந்த ராஜபக் ஷ செல்லக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட இடங்­களில் அவ­ருக்­கெ­தி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­ட­துடன், அவ­ரது உரு­வ­பொம்­மை­களும் எரிக்­கப்­பட்­டன.

இந்த நிலையில், ஆசிய அர­சியல் கட்­சி­களின் மாநாட்டில் பங்­கேற்கச் சென்­றி­ருந்த அமைச்­சர்கள் தயா கமகே மற்றும் அனோமா கமகே ஆகி­யோரை வழி­ய­னுப்­பு­வ­தற்­காக கோலா­லம்பூர் விமான நிலை­யத்­துக்குச் சென்­றி­ருந்த இலங்கைத் தூது­வரை சிலர் தாக்கியிருந்தனர்.

மஹிந்த அணியைச் சேர்ந்த தினேஷ் குண­வர்­தன மற்றும் சமன்­மலி சக­ல­சூ­ரிய ஆகி­யோரும் அமைச்சர் தயா கமகே தம்­ப­தி­க­ளுடன் ஒரே விமா­னத்தில் தான் பய­ணித்­தனர் என்­பதால், அவர்­களை பாது­காப்­பாக உள்ளே அனுப்­பி­விட்டு திரும்பிக் கொண்­டி­ருந்த போதே, இலங்கைத் தூதுவர் இப்­ராகிம் அன்சார் மீது விமான நிலை­யத்தின் மூன்­றா­வது மாடியில் இந்த தாக்­குதல் இடம்­பெற்­றது.

இலங்கைத் தூத­ரக இரண்­டா­வது செய­லா­ளரும், தூது­வரும் சர­மா­ரி­யாக முகத்தில் குத்­தப்­பட்­டனர். காலால் எட்டி மிதிக்­கப்­பட்­டனர்.

மஹிந்த ராஜபக் ஷ எங்கே என்று கேட்டே இலங்கைத் தூதுவர் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. அதற்­கான பதில் தூதுவர் இப்­ராகிம் அன்­சா­ரிடம் இருந்து கிடைக்­காத நிலையில் தான் அவர் தாக்­கப்­பட்­டி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும், இலங்கைத் தூதுவர் மீதான தாக்­குதல் மலே­ஷி­யாவுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வு­களில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவின் வரு­கைக்கு எதி­ராக மலே­ஷி­யாவில் திடீ­ரென தொடங்­கிய போராட்­டங்­களும், இலங்கைத் தூதுவர்தாக்கப்பட்ட பின்­ன­ணியும், பல்­வேறு தரப்­பிலும் சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருக்­கி­றது.

இவை­யெல்லாம் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சியல் நிகழ்ச்சித் திட்ட ஒழுங்­கிற்கு உட்­பட்­ட­வையா என்­பதே அந்தச் சந்­தே­க­மாகும்.

மலே­ஷி­யாவில் தனக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்ட போது, இது விடு­தலைப் புலி­களின் வேலை என்றும், புலி­களை அழித்ததால் தான் அவர்கள் தன் மீது கோபத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும்   மஹிந்த ராஜபக் ஷ மலே­ஷி­யாவில் இருந்து கூறியிருந்தார்.

அது­மாத்­தி­ர­மன்றி, தனக்கு எதி­ராக போராட்­டங்கள் நடத்­தப்­படும் என்­பது மலே­ஷி­யா வரு­வ­தற்கு முன்­னரே தமக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இது­போன்ற ஒரு சம்­ப­வத்தை எதிர்­பார்த்தே- அதனைத் தனது அர­சியல் நல­னுக்குப் பயன்­ப­டுத்தும் திட்­டத்­து­ட­னேயே மலே­ஷியப் பய­ணத்தை மஹிந்த ராஜபக் ஷ ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மாநாடு பற்­றிய செய்­தி­களை புறந்­தள்ளிக் கொண்டு, தன்னைப் பற்­றிய செய்­திகள் ஊட­கங்­களில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்றும், தன்னைப் பற்­றியே சிங்­கள மக்கள் பேச வேண்டும் என்றும் அவர் தனது பய­ணத்தைக் கவனமாகத் திட்­ட­மிட்­டி­ருக்­கிறார் என்­பதை தான் இதி­லி­ருந்து ஊகிக்க முடி­கி­றது.

மலே­ஷி­யாவில் தனக்கு எதி­ராக விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வா­ளர்­களே எதிர்ப்புத் தெரி­வித்து ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டு­வ­தாக வெளிப்­ப­டுத்­து­வதன் மூலம், விடு­தலைப் புலி­களின் எதி­ரி­யாக இன்­னமும் தான் இருக்­கிறேன் என்­பதை சிங்­கள மக்­க­ளுக்கு கூறு­வ­தற்கு மஹிந்த ராஜபக் ஷ விரும்­பி­யி­ருக்­கலாம்.

தனது அர­சியல் பலம் குறை­வ­டை­யாமல் பார்த்துக் கொள்­வ­தற்கு அவர் இதனை ஒரு கரு­வி­யாகப் பயன்­ப­டுத்த எண்­ணி­யி­ருக்­கலாம்.

ஆனால், விடு­தலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்­புடன் இருந்த போதும், அதற்குப் பின்­னரும், மலே­ஷி­யாவில் இத்­த­கைய ஆர்ப்பாட்டங்கள், மஹிந்­த­வுக்கு எதி­ராக நடத்­தப்­பட்­ட­தில்லை.

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை 1990களின் தொடக்­கத்­தி­லேயே மலே­ஷி­யா தடை செய்து விட்­டது. அதை­விட, தென்­கி­ழக்­கா­சி­யாவில் இருந்த புலி­களின் வலைப்­பின்­னலை அழிப்­ப­தற்­கான கேந்­தி­ர­மா­கவும், மலே­ஷி­யாவையே இலங்கை அர­சாங்கம் பயன்­ப­டுத்­தி­யது.

அத்­த­கைய வழி­மு­றை­களின் ஊடாகத் தான், பிர­பா­க­ர­னுக்குப் பின்னர் புலிகள் இயக்­கத்­துக்குத் தலை­மை­யேற்க முனைந்த கே.பியை இலங்கை அர­சாங்கம் மலே­ஷி­யாவில் கைது செய்து கொழும்­புக்கு கொண்டு வந்­தது.

எனவே, மலே­ஷி­யா ஒரு­போ­துமே, புலி­களின் புக­லி­ட­மாக இருந்­த­தில்லை. ஆனால், புலி­களின் ஆத­ர­வா­ளர்கள் அங்­கேயும் இருந்­தனர் என்­பதை மறுக்க முடி­யாது.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக மலே­ஷி­யாவில் திடீ­ரெனக் கிளம்­பிய போராட்­டங்கள், சாதா­ர­ண­மான ஒன்­றாக பார்க்­கப்­ப­ட­வில்லை. இதனை ஒரு அசா­தா­ரண விட­ய­மா­கவே பலரும் பார்க்­கின்­றனர்.

அதனால் தான், இது மஹிந்த ராஜபக் ஷவின் தூண்­டு­தலின் பேரில் நிகழ்ந்­தி­ருக்­க­லாமோ என்ற சந்­தே­கத்தை பல்­வேறு அர­சி­யல்­வா­தி­களும் எழுப்­பி­யி­ருக்­கின்­றனர்.

மலே­ஷி­யாவில் நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு அப்பால், இலங்­கைக்­கான தூதுவர் தாக்­கப்­பட்­டதும் கூட, திட்­ட­மிட்ட ஒரு சம்­ப­வ­மாக இருக்­க­லாமோ என்ற கேள்­விகள் இருக்­கின்­றன.

மலே­ஷி­யாவில் மாத்­தி­ர­மன்றி, பல்­வேறு நாடு­க­ளிலும் இலங்கைத் தூது­வர்கள் உரிய பாது­காப்பை பெற்­றி­ருந்­தனர். போர் உச்­சத்தில் இருந்த போது கூட, இலங்கைத் தூது­வர்­களைத் தாக்­கு­கின்ற அள­வுக்கு யாரும் செல்­ல­வில்லை.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக பல்­வேறு நாடு­களில் போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தாலும், அவை எல்­லாமே அந்த நாட்டின் சட்டதிட்­டங்­க­ளுக்கு அமை­வாகத் தான் இடம்­பெற்­றி­ருந்­தன. எல்­லையை மீறாமல் தான் எதிர்ப்­புகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.

எனினும், இப்­போது மலே­ஷி­யாவில் அவ்­வா­றாக எதிர்ப்பு வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. தூது­வரைத் தாக்கும் அள­வுக்கு அங்கு நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அவ்­வா­றான தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­வர்கள் இலங்கைத் தமி­ழர்­களோ, புலி­களோ அல்ல.

தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று அடை­யாளம் காணப்­பட்ட இந்­திய வம்­சா­வ­ளி­யினர் ஐவரே கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். மேலும் நால்வர் தேடப்­ப­டு­கின்­றனர்.

இவர்கள் உணர்ச்சி வசப்­பட்டு இவ்­வாறு நடந்து கொண்­டார்­களா- அல்­லது யாரு­டைய தூண்­டு­தலின் பேரி­லேனும் இவ்­வாறு செயற்பட்டார்­களா என்று தெரி­ய­வில்லை.

எவ்­வா­றா­யினும் இந்த விவ­கா­ரத்தை மஹிந்த ராஜபக் ஷ தனது அர­சியல் நல­னுக்குப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு வச­தி­யான விடயமாக மாறி­யி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­தாக கிளம்­பி­ய­வர்கள், அவரின் அர­சியல் மீட்­சிக்குத் தான் கைகொ­டுத்­தி­ருக்­கி­றார்கள். புலிப் பீதியைக் கிளப்பி சிங்­கள மக்­களை உசுப்­பேற்­று­வ­தற்கு துணை போயி­ருக்­கி­றார்கள்.

தூது­வரைத் தாக்­கி­ய­வர்கள் போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க விரும்­பி­யி­ருக்­கலாம். அல்­லது புலி­களின் ஆத­ர­வா­ளர்­க­ளாகக் கூட இருக்­கலாம், எனினும், அவர்கள் தமது செயல், சர்­வ­தேச ரீதி­யாக தமி­ழர்­களின் கோரிக்கையைப் பலவீனப்படுத்தும் என்பதையிட்டுச் சிந்திக்கவில்லை.

தமிழர்களின் போராட்டத்தை வலுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அதனைப் பலவீனப்படுத்துவதற்கு துணைபோயிருக்கிறார்கள்.

இதனால் தான், இந்தச் செயலின் பின்னால் எவரேனும் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. குறிப்பாக, மஹிந்த ராஜபக் ஷ தனது அரசியல் மறுஎழுச்சிக்கு விடுதலைப் புலிகளையே பயன்படுத்திக் கொள்ள முனைகின்ற சூழலில், அவர்களைத் தொடர்புபடுத்தி நடந்துள்ள நிகழ்வுகள், இன்னமும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

மஹிந்த ராஜபக் ஷவின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்றும் வகையில் தான் தமிழர்கள்- அவர்கள் எங்கிருந்தாலும்- செயற்படப் போகிறார்கள் என்றால், அது அவரது மீள் எழுச்சிக்கு மாத்திரமே வழிகோலுமே தவிர, தமிழர்களின் நலன்களுக்கு ஒருபோதும் துணையாக இருக்கமாட்டாது. மலேஷிய சம்பவங்கள் மீண்டும் தமிழர்களுக்கு கற்றுத்தந்துள்ள பாடமும் இது தான்.

– சத்­ரியன்

Share.
Leave A Reply

Exit mobile version