பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு, முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ளனர்.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அரியாலையைச் சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பும் அவர்களை வெலிகந்தையிலிருந்து அம்புலன்ஸில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் வீடுகளுக்கு திரும்பினாலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு வீட்டிலேயே இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் சுவிட்ஸர்லாந்திலிருந்து வருகை தந்த போதகரால் கடந்த மார்ச் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஆராதனையில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

சுவிஸ் போதகருடன் நெருக்கமாகப் பழகிய மானிப்பாயைச் சேர்ந்த போதகர், சுவிஸ் போதகரின் சாரதி உள்ளிட்ட அரியாலை மற்றும் மானிப்பாய், வவுனியாவைச் சேர்ந்த 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த மார்ச் 23ஆம் திகதி நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

அவர்கள் 20 பேரிடமும் ஏப்ரல் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மாதிரிகள் பெறப்பட்டு முதல்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மானிப்பாயைச் சேர்ந்த மதபோதகர் உள்பட 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் 6 பேரும் வெலிகந்தை வைத்தியசாலை கோரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் நால்வரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version