கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத்தெரிவித்தால், தன்னுடைய பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை அதற்காக எடுத்துக்கொள்ளலாம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தது குறித்து வேதனை அடைந்திருப்பதாகவும் மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது வேதனை அளிக்கிறது என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத்தெரிவித்தால், தன்னுடைய பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை அதற்காக எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதனிடையே, மே மூன்றாம் தேதிவரை தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு சில தளர்வுகளை அளிக்க விருப்பதாக மத்திய அரசு கடந்த 15ஆம் தேதியன்று தெரிவித்திருந்தது. எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஆராய்வதற்கு மாநில நிதித் துறைச் செயலர் கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. அந்தக் குழு தன் முதற்கட்ட ஆலோசனைகளை இன்று முதலமைச்சரிடம் வழங்கியது.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தொடர்வதென இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தையும் மே 3ஆம் தேதிவரை கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விலக்குகள் தொடரும்” எனக் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று தமிழ்நாட்டில் குறைந்தால், வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெற்று, அதற்கேற்றபடி முடிவுசெய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றால் இந்தியாவில் புதிதாக 1553 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17, 265 ஆக உயர்ந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version