யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனோ வைரஸ் தொற்றில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் ஒருவரும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களில் 16 பேருமாக இதுவரையில் 17 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனைகளில் இனங்காணப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதிப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தவர்களில் 4 பேர் குணமடைந்த நிலையில் தற்போது தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.


இவர்கள் நால்வரும் அரியாலையப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களது விடுகளுக்கே நேற்று அனுப்பி வைக்கப்பட்டு தொடர்ந்து 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதே போல யாழில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்ற மேலும் சிலரும் குணமடைந்து வருகின்ற நிலையில் அவர்களும் விரைவில் வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனோ ஆபத்து நீங்கிவிட்டதாக கருத முடியாது.

எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கின்ற நிலையில் சுகாதாரப் பரிவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொது மக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். அதனுாடாகவே தொற்று ஏற்படுவதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version