காதல் கல்யாணத்துக்கு மட்டுமே போலீஸ்நிலையம் திருமண மண்டபமாக மாறிய நிலையில், பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்காகவும் போலீஸ்நிலையம் திருமண மண்டபமாக மாறி இருக்கிறது.
காதலன் ஏமாற்றிவிட்டான், காதலி ஏமாற்றிவிட்டாள் என புகார் அளிக்கப்படும்போது, அவர்கள் காதலை சேர்த்து வைப்பதற்காக போலீஸ் நிலையம் சில நேரங்களில் திருமண மண்டபமாக மாறுவது வழக்கம். அப்போது அங்கேயே அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வார்கள். காதல் கல்யாணத்துக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்து வந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்காகவும் போலீஸ்நிலையம் திருமண மண்டபமாக மாறி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தை சேர்ந்தவர் அனில். இவர் கடந்த பிப்ரவரி மாதம் அங்குள்ள ஆற்றில் படகு கவிழ்ந்தபோது, அதில் இருந்தவர்களை காப்பாற்றி கரை சேர்ந்தார். இதனால் அவரை காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பாராட்டியது. இந்த நிலையில் அனிலுக்கும், அங்குள்ள காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணுக்கும் ஏப்ரல் 20-ந் தேதி திருமணம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் ஊரடங்கு காரணமாக தங்கள் திருமணம் தடைபடுமோ என்ற எண்ணத்தில், உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை அணுகி, தனது திருமணத்தை போலீஸ் நிலையத்திலேயே நடத்த அனில் அனுமதி கேட்டார். இதற்கு உயர் அதிகாரிகளின் ஒப்புதலும் கிடைத்ததை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தீனா போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில்
வைத்து அனில், ஜோதி கழுத்தில் தாலி கட்டினார்.
ஊரடங்கு காரணமாக சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு நடந்த இந்த திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் தரப்பில் தலா 5 உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.