ஜம்மு காஷ்மீரின் குப்லாரா மாவட்டத்தில் உள்ள ஹன்ட்வாராவில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரு இந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கர்னல், மேஜர் ஜெனரல், இரு ராணுவ வீரர்கள், மற்றும் ஒரு காவல்துறை ஆய்வாளர் உயிரிழந்ததாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் இரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வால் அப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் சுமார் 8 மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.
ஹன்ட்வாராவின் சங்கிமுலில் இருந்த ஒரு வீட்டில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாகவும், இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தீவிரவாதிகள் குறித்து சோதனை செய்ததாகவும் பாதுகாப்புப்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாக பிபிசிக்காக காஷ்மீரிலிருந்து செய்தி வழங்கும் மஜித் ஜஹாங்கிர் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் குறித்த தகவல் புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து வந்ததாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த கமான்டிங் அதிகாரியான கர்னல் அஷுடோஷ் ஷர்மா, இதற்கு முன்பு பல வெற்றிகரமான தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காகவும், பல பொது மக்களின் உயிரைக் காப்பாற்றியதற்காகவும் அவர் இரு கேலண்டரி விருதுகளைப் பெற்றவர்.
We salute Col Ashutosh Sharma, SM*, Maj Anuj Sood, Nk Rakesh Kumar, L/Nk Dinesh Singh & SI Shakeel Qazi and express our deep felt condolences to the bereaved families.
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 3, 2020
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களின் உயிரிழப்பு தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களின் தைரியம் மற்றும் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The loss of our soldiers and security personnel in Handwara(J&K) is deeply disturbing and painful. They showed exemplary courage in their fight against the terrorists and made supreme sacrifice while serving the country. We will never forget their bravery and sacrifice.
— Rajnath Singh (@rajnathsingh) May 3, 2020

