கொரோனா ஊரடங்கால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் தங்கியிருப்பவர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு
வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகள் சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாமல் தங்கியுள்ளன.
எங்கே இருக்கிறது தேர்த்தங்கல்
ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தேர்த்தங்கல் கிராமம். அங்குள்ள கண்மாயை சுற்றி 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயம் 2010ஆம் ஆண்டு தமிழ் நாடு வனத்துறையினரால் துவங்கப்பட்டது. கண்மாய்க்கு நடுவே மரங்கள் அதிக அளவில் உள்ளதால் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கவும், கூடு கட்டி வாழவும் பறவைகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது.
கண்மாயின் நடுவில் வனத்துறையினர் நீர்த் தேக்கம் வெட்டி தண்ணீரை தேக்கியுள்ளனர். இதனால் நீர்ப் பறவைகள் அதிக அளவில் அங்கு வாழ்ந்து வருகின்றன. அதேபோல் பறவைகளின் உணவுத் தேவைக்காக ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் 5 ஆயிரம் மீன் குஞ்சுகள் கண்மாயில் விடப்படும் இதனால் பறவைகளுக்கு தாராளமாக இரை கிடைக்கிறது.

வானம் பார்த்த பூமியில் வெளிநாட்டு பறவைகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரக்கோட்டை, சித்திரங்குடி, தேர்த்தங்கல், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், ஆகிய இடங்களில் பறவைகள் சராணலயங்கள் உள்ளன. ஆனால் இந்தாண்டு மற்ற சரணாலயங்களை காட்டிலும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு அதிக அளவில் பறவைகள் வந்துள்ளன. இந்த ஆண்டு இங்கு 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன என்பது அன்மையில் எடுத்த பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
தேர்த்தங்கல் சரணாயத்துக்கு இந்தாண்டு சைபீரியா உள்ளிட்ட இடங்களில் இருந்து வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, முக்குளிப்பான், மஞ்சள் மூக்குநாரை, நாமக்கோழி, சோலைக்குருவிக் கூட்டம், சாம்பல் நாரை, கரண்டிவாயன் நாரை, கருநீலஅரிவாள் மூக்கன், புள்ளி அலகு கூழைக்கடா, உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் வந்தன.
அப்படி என்ன இருக்கிறது தேர்த்தங்கல் சரணாலயத்தில்?
ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கால் வாகன இரைச்சல், காற்று மாசின்றி நிசப்தமாக இருப்பதால் தேர்த்தங்கலில் உள்ள ஆயிரக்கணக்கான பறவைகள் தினமும் பகலில் உல்லாசமாக கண்மாய் நீரில் நீந்திக் கொண்டு அப்பகுதியில் உள்ள மீன்களை உணவாக உட்கொள்கின்றன. மாலை சூரியன் மறைந்ததும் பறவைகள் அனைத்தும் கண்மாயில் உள்ள மரங்களில் அடைகின்றன.
இது குறித்து தேர்த்தங்கல் கிராமத்தை சேர்ந்த பஞ்சரத்தினம் பிபிசி தமிழிடம் பேசுகையில் ‘நான் கடந்த 65 ஆண்டுகளாக இங்கே வசித்து வருகிறேன். எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்தாண்டு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் இந்த பகுதிக்கு வந்துள்ளன.’ ‘வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை என என் வயதுக்கு நான் பார்க்காத பல பறவைகள் இந்தாண்டு இங்கு வந்துள்ளன’. ‘எங்கள் ஊர் பொதுமக்கள் இந்த பறவைகளை பாதுகாப்பதற்காக பட்டாசுகள் வெடிப்பதில்லை. இந்த மாதம் எப்போதும் இல்லாத அளவில் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளன என்றார்.’
தேர்தங்கல் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய உள்ளுர்வாசி குமரேசன் ‘எங்கள் ஊரில் உள்ளவர்கள் வேலைக்காக பக்கத்து ஊர்களுக்கு செல்வார்கள் ஆனால், ஊரடங்கு காரணமாக யாரும் வெளியில் வருவதில்லை. சிலர் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வருகின்றனர். ”காற்று மாசுபடாமல் இருப்பதால் எங்கள் ஊர் கண்மாயில் மான்கள்,மயில்கள் பறவைகள் என அனைத்தும் சுதந்திர மாகசுற்றித் திரிகின்றன.’
பறவைகள் நீண்ட நாட்கள் தங்க என்ன காரணம் என்பது குறித்து ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில் ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இருப்பினும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு மஞ்சள் மூக்குநாரை, புள்ளி அலகு கூழைக்கடா, சாம்பல் நாரை போன்ற வலசைப் பறவைகள் அதிகமாக வருவது வழக்கம்.’
ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்
‘பறவைகள் அக்டோபர் மாதத்தில் இந்த பகுதிக்கு வரும் மார்ச் இறுதியில் குஞ்சு பொரித்து இங்கிருந்து புறப்பட்டு செல்லும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் எவ்வித தொந்தரவும் இல்லாமல் தற்போது வரை இங்கையே தங்கியுள்ளன.’
‘தொண்டி மற்றும் திருப்பாலைக்குடி பகுதியில் கண்மாய்களை சுற்றி அதிகளவு மான்களை பார்க்க முடிகிறது. அந்தப் பகுதிகளில் நாங்கள் (வனத்துறையினர்) இதுவரை இவ்வளவு மான்களை பார்த்ததில்லை. ”அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மான்கள் ஊருக்குள் சுற்றி திரிவது ஆச்சரியமாக உள்ளது. ஒருபக்கம் கொரோனா ஊரடங்கு பொதுமக்களுக்கு பாதிப்பை தந்தாலும் வன உயிரினங்களுக்கு அது சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதாகவே வனத்துறையினரால் நம்பப்படுகிறது’ . என்கிறார் வனசரகர் சதீஷ்.