பேஸ்புக் காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் ஒருவரை, தம்மை பொலிஸார் என கூறிய இளைஞர் குழுவினர் கடத்தி சென்று, தாக்கி இளைஞரின் கைத்தொலைபேசி மற்றும் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் கொக்குவில் பொற்பதி பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் இன்று (29) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆவரங்கால் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருடன் பேஸ்புக் ஊடாக பழகியுள்ளார்.

அந்த பழக்கம் சிறிது காலத்தில் காதலாக மாறி இருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் , இருவரும் இன்றைய தினம் கலட்டி சந்திக்கு அருகில் உள்ள குளிர்பான நிலையத்தில் நேரில் சந்தித்துப் பேசுவாதாக தீர்மானித்துள்ளனர்.

இருவரும் தீர்மானித்த நேரத்தின்படி குறித்த இளைஞர் அப்பகுதியில் யுவதிக்காக காத்திருந்துள்ளார். அதன்போது மூன்று மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று , தம்மை பொலிஸார் என கூறி, சந்தேகத்துக்கு இடமான முறையில் இவ்விடத்தில் நிற்பதனால் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என கூறி இளைஞரை மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக இழுத்து ஏற்றி அங்கிருந்து பொற்பதி பிள்ளையார் ஆலயத்துக்குப் பின்புறமாக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு வைத்து இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரது தொலைபேசியையும் பணத்தையும் பறித்துள்ளனர். அதன் போது குறித்த இளைஞன் எதிர்ப்பு காட்டவே அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பின்னர் அவ்விடத்தில் இருந்து குறித்த குழுவினர் தப்பி சென்ற பின்னர் காமடைந்த நிலையில் இரத்தம் வழிந்தவாறு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஆலயத்தின் முன்புறமாக வீதிக்கு வந்த போதே வீதியால் சென்றவர்கள் இளைஞரை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version