திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சுதந்திர இந்தியாவில் இணைக்க வேண்டுமானால் அரண்மனை மற்றும் கட்டடங்கள், பத்மநாபசுவாமி கோயில் ஆகியவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் தனக்கு வேண்டும் என சர்தார் வல்லபபாய் படேலிடம் கேட்டு ஒப்பந்தம் போட்டார் சித்திரை திருநாள் மகராஜா. https://plaza-escorts.com

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் யாருக்கு எனத் தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

“திருவிதாங்கூர் மன்னரின் இறப்பு அரச குடும்பத்தின் சொத்துகள் மற்றும் உரிமைகளைப் பாதிக்காது. எனவே, கேரள பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தின் மீது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது.

அந்தக் கோயிலின் நிர்வாகத்தை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு இடைக்கால குழுவை அமைக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.

மேலும், அந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறைகள் திறக்கப்படுவது தொடர்பாக இடைக்கால குழு முடிவு செய்யும்.

இடைக்கால குழுவில் இந்து அல்லாதவர்கள் இடம்பெறக் கூடாது. இடைக்கால குழுவின் முடிவே இறுதியானது” என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.

தீர்ப்பின் முழு விபரங்களும் இன்னும் கிடைக்கவில்லை. முழு விபரங்களையும் பெற்ற பிறகு அதில் கூறியுள்ளபடி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவோம்” என்றார். இந்தத் தீர்ப்பை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக மன்னர் குடும்பமும் கேரள மக்களும் பார்க்கிறார்கள்.

பத்மநாபபுரம் அரண்மனை

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆரம்பகால தலைமையிடமாக விளங்கியது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை. ஸ்ரீபத்மநாப சுவாமிக்கு சொந்தமான நாடு இது.

கடவுளின் பிரதிநிதியாக சமஸ்தானத்தை மன்னர் ஆளுகிறார் என்பதை மனதில் நிறுத்தியே திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி நடத்திவந்தனர்.

பத்மநாபபுரம் அரண்மனையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தபோது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலை பிரதானமாகக் கொண்டிருந்தது மன்னர் குடும்பம்.

பின்னர், பாதுகாப்பு போன்ற சில காரணங்களுக்காகத் திருவிதாங்கூர் சமஸ்தான தலைமையகம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.

புதிய அரண்மனை மட்டுமல்லாது திருவட்டாறு கோயிலில் இருப்பதுபோன்று அனந்த சயன மூலவருடன் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலும் திருவனந்தபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டது.

நம் நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் ஒவ்வொரு சமஸ்தானங்களையும் இணைக்கும் பணியை சர்தார் வல்லபபாய் படேல் மேற்கொண்டார்.

அந்தச் சமயத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க மாட்டோம், தனியாகச் செயல்படுவோம் என அன்றைய மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா அறிவித்தார்.

இதையடுத்து சர்தார் வல்லபபாய் படேல் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு நேரில் சென்று சித்திரைத் திருநாள் மகாராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்தப் பேச்சுவார்த்தையின்போது மன்னர் தனது அரண்மனை மற்றும் கட்டடங்கள், பத்மநாபசுவாமி கோயில் ஆகியவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் தனக்கு வேண்டும் எனக் கேட்டார்.

அதற்கு சம்மதித்து ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னரே திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சுதந்திர இந்தியாவில் இணைக்க மன்னர் சம்மதித்தார்.

சர்தார் வல்லபபாய் படேல்

சித்திரைத் திருநாள் மகராஜா மறைந்த பிறகு, அவரது வாரிசுகள் அரண்மனை மற்றும் பத்மநாப சுவாமி கோயில் ஆகியவற்றை நிர்வகித்து வந்தனர்.

இந்த நிலையில் சர்தார் வல்லபபாய் படேல் போட்ட ஒப்பந்தம் சித்திரைத் திருநாள் மகாராஜா காலத்தோடு முடிந்துவிட்டது.

அந்த ஒப்பந்தம் மன்னர்களின் வாரிசுகளுக்கு பொருந்தாது என்பதால் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு மன்னர் குடும்பத்துக்கு கிடையாது என கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றம், `மன்னர் குடும்பத்துக்கு கோயிலை நிர்வகிக்கும் அதிகாரம் இல்லை.

கேரள அரசுதான் கோயிலை நிர்வகிக்க வேண்டும்’ எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில்தான் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் அதிகாரம் மன்னர் குடும்பத்துக்கு உண்டு என இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பில் மற்றொரு முக்கிய அம்சமாகக் கோயில் பி நிலவறையைத் திறப்பது குறித்து இடைக்கால கமிட்டி தீர்மானிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ஐந்து நிலவறைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதில், சுவாமிக்கு சார்த்தும் 18 அடி நீளமுள்ள தங்க மாலை, தங்க கிரீடம், ரத்தினம் பொறிக்கப்பட்ட ஆதிசேஷ கிரீடம் குடங்களில் நிறைந்துகிடந்த தங்கம் என ஒரு லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடி ரூபாய் வரை மதிப்புள்ளதாகக் கருதப்படும் பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்தச் சமயத்தில் பி நிலவறையை திறக்கக் கூடாது என மன்னர் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்தது. பி நிலவறை மட்டும்தான் திறக்கப்படாமல் உள்ளது.

பத்மநாபசுவாமி திருக்கோயில்

பி நிலவறை என்பது கல்லால் ஆன கதவு, மரத்தால் ஆன கதவு, பித்தளையால் ஆன கதவு என மூன்று கதவுகளைக் கொண்டது.

கதவின் சாவி துவாரம் பாம்பின் வாய் பகுதிபோன்று அமைந்துள்ளது. அதில், சாவியை சொருகிதான் திறக்க வேண்டும் என்கிறார்கள் கோயிலைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.

மேலும் பி நிலவறையில் பொக்கிஷங்கள் இல்லை எனவும். அது அகஸ்தியர் முனிவர் முக்தி அடைந்த பகுதி எனவும் கூறப்படுகிறது.

பி நிலவறை குறித்து இடைக்கால கமிட்டி என்ன முடிவு எடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share.

Comments are closed.

Exit mobile version