தாய்ப்பால் புரைக்கேறியதில் 4 தினங்களேயான ஆண் சிசுவொன்று மரணித்து விட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிரான் – சின்னவேம்பு கிராமத்தைச் சேர்ந்த கனகரெட்ணம் செல்வராணி தம்பதிகளின் பெயரிடப்படாத குழந்தையே மரணித்துள்ளது.
வழமைபோன்று குழந்தையின் தாய் குழந்தைக்கு தாய்ப்பால் அருந்தச் செய்த வேளையில் பால் புரைக்கேறிய நிலையில் குழந்தை மரணித்துள்ளது.
இதேவேளை வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வதியும் மற்றொரு தாய் குழந்தை பிரசவித்த நிலையில் அக்குழந்தை உடனே மரணித்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சமபவங்கள் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் நாகப்பிரியா (வயது 27) என்ற பட்டதாரி பயிலுனரான இரண்டு மாத ஆண் குழந்தையின் தாய், புற்றுநோய் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.
இவருக்கு ஏற்கெனவே புற்றுநோய்க்கான சிகிச்சையின் பிரகாரம் ஒரு கால் அகற்றப்பட்டிருந்தது இங்க குறிப்பிடத்தக்கது.
நாகப்பிரியா மரணித்த செய்தி கேட்டு அவரது வசிப்பிடமான ஆறுமுகத்தான்குடியிருப்பு ஊர் சோகத்தில் உறைந்து போனது.
சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைப்பட்டது.