திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த தன் மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனையும் 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் 2 ஆம் எதிரியான நண்பனுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 5 இலட்சம் நஷ்டஈடு வழங்குமாறும் 3 ஆம் எதிரிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5 இலட்சம் நஷ்டஈட்டை பாதிக்கப்பட பெண்ணுக்கு வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் நேற்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு 4 மாதம் 14 ஆம் திகதி மூதூர் பிரதேசத்தில் தனது மனைவிக்கு போதை ஊட்டிய நிலையில் கணவர் உட்பட இருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக வழக்கு இடம்பெற்று வந்தது.
இவ்வழக்கு தொடர்பில் 2019 ஆம் ஆண்டு நான்காம் மாதம் 30 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
திருமணம் ஆகிய கணவன் கூட தனது மனைவியின் விருப்பம் இல்லாது பலாத்காரமாக உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றம் என சட்டம் தெரிவிக்கின்ற நிலையில் தனது மனைவிக்கு போதையை ஊட்டி சக நண்பர்களுக்கு கூட்டு வன்புணர்வுக்கு உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இக் குற்றச்சாட்டுக்காக மூதூர் சிராஜியா நகர் பகுதியைச் சேர்ந்த கணவரான 28 வயதானவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை வழங்குமாறும் பாதிக்கப்பட்ட மனைவிக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனை விதிக்குமாறும் அரச செலவாக 5000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒருமாத கால கடூழிய சிறை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.
இதேவேளை மற்றைய எதிரியான மூதூர் சின்ன நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான குறித்த எதிரிக்கு சம்பவம் நடைபெறும் போது 18 வயது 24 நாட்கள் எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து இவருக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குமாறும் 5,000 ரூபாய் தண்டப் பணம் செலுத்துமாறும், செலுத்தத் தவறினால் ஒரு மாதம் கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறு நீதிபதி கட்டளையிட்டார்.
அத்துடன் மூன்றாம் எதிரியான மூதூர் ஆலிம் நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருடன் சேர்ந்து கூட்டு பாலியலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
இந்நிலையில்,பதினைந்து வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் 10 இலட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடாக செலுத்துமாறும் தவறும்பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குமாறும் அத்துடன் 5000 ரூபாய் தண்டம் செலுத்துமாறு செலுத்தத் தவறும் பட்சத்தில் குறித்த எதிரிக்கு ஒரு மாதகால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திறந்த நீதிமன்றில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டு தீர்ப்பளித்தார்

