இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்புள்ளமை குறித்து தகவல் உள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும், இலங்கையர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தம்மிடம் தகவல் உள்ளதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதா எனவும் ஹரின் பெர்ணான்டோ சபையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் வழங்கிய சரத் வீரசேகர, ஆம் என பதில் கூறினார்.

எனினும், ரகசியங்களை தற்போதைக்கு கூற முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சில சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திலுள்ள சிலரும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமை உறுதிப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 257 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சரத் வீரசேகர தெரிவிக்கிறார்.

அவர்களில் 86 பேர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அது தொடர்பிலான தகவல்களுடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துகின்றமை குறித்து தான் சட்ட மாஅதிபரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டதுடன், 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 40 வெளிநாட்டவர்களும், 45 சிறார்களும் அடங்குவதாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே. நாடாளுமன்றத்தில் தற்போது புதிய தகவல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version