சென்னையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞர் விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று, சென்னை புரசைவாக்கத்தில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் காவல்துறையால் வழிமறிக்கப்பட்டு தலைமைச் செயலக காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இதற்குப் பிறகு போலீஸ் காவலில் இருக்கும்போதே விக்னேஷ் மரணமடைந்தார். இந்த நிகழ்வில், விக்னேஷின் குடும்பத்தினர் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்த விவகாரம் குறித்து காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, விக்னேஷின் உறவினர்கள், இந்த நிகழ்வோடு சம்பந்தப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலங்களை வெளியிட்டது.

இந்த நிலையில், உயிரிழந்த விக்னேஷின் உடற்கூறி அறிக்கை தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அடித்ததால் தலையில் ஏற்பட்ட காயம், இடது கண்ணிற்கு மேல் காயம், இடது கண்ணத்தில் காயம், வீக்கம், வலது கையின் முன் புறமும் பின் புறமும் பலத்த காயம், இடது தோள்பட்டையில் வீக்கம், இடது தோள்பட்டையில் காயம், பின்புறத்தில் பெரிய அளவில் தோல் உரிந்திருந்தது உள்ளிட்ட காயங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இது தவிர, வலது தொடையில் பெரிய அளவில் வீக்கம் இருந்தது. அதனை எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தபோது, எலும்பு உடைந்திருப்பது தெரியவந்தது.

இடது காலிலும் கடுமையாக அடிபட்டிருந்தோடு, வீக்கமும் தோல் சிவந்தும் காணப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.

இதற்கிடையில், இன்று உயிரிழந்த விக்னேசை ஏற்றிவந்த ஆட்டோவின் ஓட்டுனர் பிரபு, தலைமைச் செயலக காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தியது.

Share.
Leave A Reply