திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்று விட்டு சிறார் ஆன மகனை போலீஸில் சரண் அடைய வைத்த மனைவி கைதான வழக்கில், அலட்சியமாக விசாரணை நடத்தியதாக போலீஸ் ஆய்வாளர் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது?

பழனி அருகே சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஓமந்தூரார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு பாண்டீஸ்வரி என்கிற மனைவியும் 15 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
தன் பெயரில் சொத்தை எழுதிக் கொடுக்கும்படி தகராறு

ஓமந்தூரார் தான் செய்யும் பைனான்ஸ் தொழிலை அண்டை மாநிலமான கேரளாவில் விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஓமந்தூராருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே பிரச்னை பெரிதாகும் போதெல்லாம் உறவினர்கள் வந்து சமாதானம் செய்து வைத்துள்ளனர். நாளடைவில் மது போதைக்கு அடிமையான ஓமந்தூரார் தினமும் தன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இரவு வழக்கம் போல் மது போதையில் மனைவி பாண்டீஸ்வரியிடம் அவர் சண்டை போட்டுள்ளார்.

அவரையும் அவரது மகளையும் அடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தனது தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாகவும் அதில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் கூறி அந்த சிறுவன் கிரிக்கெட் மட்டையோடு சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் சம்பவ நாள் இரவிலேயே சரணடைந்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மறு விசாரணை வேண்டி மனு

இந்த நிலையில், தனது மகனின் சாவுக்கு அவரது மனைவி பாண்டீஸ்வரியும் அவரது உறவினர்களுமே காரணம் என்று கூறி ஓமந்தூராரின் தந்தை ரெங்கசாமி சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

நான்கு மாதங்களாக நடந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட நாளில் ஓமத்தூராரின் வீட்டில் பாண்டீஸ்வரியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் இருந்துள்ளதாக போலீஸாருக்கு தெரிய வந்தது.

அப்போது பாண்டீஸ்வரி மற்றும் அவரது இளைய மகளை ஓமந்தூரார் தாக்கியதாகவும் அதன் பிறகு வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி போது கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகியோருடன் சேர்ந்து பாண்டீஸ்வரி மற்றும் அவரது 15 வயது மகன் ஓமந்தூராரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாகவும் போலீஸாருக்கு விசாரணையில் தெரிய வந்தது.

 

சிறுவனை மாட்டி விட்ட குடும்பத்தினர்

இதையடுத்து கொலை வழக்கில் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சிறைக்கு போனால் தங்கையின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று 15 வயதான தனது மகனிடம் பாண்டீஸ்வரியும் அவரது உறவினர்களும் கூறியுள்ளனர்.

மேலும், சிறார் என்பதால் குறைவான தண்டனையே கிடைக்கும் என்று கூறி போலீஸ் நிலையத்தில் அந்த சிறுவனை சரண் அடைய வைத்துள்ளனர்.

இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு பாண்டீஸ்வரியின் உறவினர்களான கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகியோரை சத்திரப்பட்டி போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் தற்போது சிறையில் உள்ளனர்.

 

 

 

உள்நோக்குடன் செயல்பட்ட காவல் ஆய்வாளர்

இந்த விவகாரத்தை முதலில் விசாரித்த சத்திரப்பட்டி ஆய்வாளர் லட்சுமி பிரபா முறையாக விசாரிக்காமல் சிறுவன் அளித்த வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து சிறுவனை கைது செய்துள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் கருதினர். மேலும், சிறுவனின் தாயார் பாண்டீஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் அனைவரையும் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் செயல்பட்டதாகவும் சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ் குமார் மீனா முறையற்ற விசாரணை நடத்தியதாகக் கூறி சத்திரப்பட்டி ஆய்வாளர் லட்சுமி பிரபாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பாண்டீஸ்வரி மற்றும் அவர் உறவினர்களை வழக்கில் இருந்து காப்பாற்ற லஞ்சம் ஏதும் லட்சுமி பிரபா வாங்கினாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply