அவர் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் என்று அழைக்கப்படுவார். அரசர் மூன்றாம் சார்ல்ஸ் தான், 1685 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரியணையில் அமர்ந்த முதல் சார்ல்ஸ். செப்டம்பர் 8 ஆம் தேதி மரணமடைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தான், பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி.
அரச குடும்பம் மற்றும் அரியணை வாரிசுகளின் வரிசை குறித்து மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
ராணி மற்றும் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப்
பிரிட்டனை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி, அதன் மிக நீண்ட கால ராணியாக இருந்தார். செப்டம்பர் 8, 2022 அன்று மரணமடைந்தபோது அவருக்கு வயது 96.
1926ஆம் ஆண்டு பிறந்த இளவரசி எலிசபெத், 1952ஆம் ஆண்டு தனது தந்தையான ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மரணத்திற்குப் பிறகு ராணியானார். அவர் 1947ஆம் ஆண்டு எடின்பரோ கோமகன் ஃபிலிப்பை திருமணம் செய்தார்.
டென்மார்க் மற்றும் கிரீஸின் முன்னாள் இளவரசர், இளவரசர் ஃபிலிப் 1921இல் பிறந்தார்.
இரண்டாம் உலகப் போரில் ராயல் கடற்படையில் பணியாற்றினார். அவர் ஒருவர் தான் பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியின் கணவர்.
22,000-க்கும் மேற்பட்ட தனிபட்ட செயல்பாடுகளை மேற்கொண்டவர், 2017ஆம் ஆண்டு அரச கடமைகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவர் ஏப்ரல் 9, 2021 அன்று மரணமடைந்தார்.
அரியணை வாரிசுகள் வரிசை
சார்ல்ஸ் அரசரானார்
பிறப்பு: 1948
ராணியின் மூத்த மகன் மூன்றாம் சார்ல்ஸ் அரசரானார்.
முன்னாள் வேல்ஸ் இளவரசர் லேடி டயானா ஸ்பென்சரை மணந்தார். ஜூலை 29, 1981 டயானா வேல்ஸ் இளவரசி ஆனார்.
அவர்களுக்கு வில்லியம், ஹாரி என்று இரண்டு மகன்கள் பிறந்தனர். பிறகு, அவர்களுக்கு இடையே 1996-இல் திருமண முறிவு ஏற்பட்டது. ஆகஸ்ட் 31, 1997 அன்று, இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.
அவர் ஏப்ரல் 9, 2005 அன்று கமில்லா பார்க்கர் பவுல்ஸை மணந்தார்.
1. இளவரசர் வில்லியம், கார்ன்வால் மற்றும் கேம்ப்ரிட்ஜின் கோமகன்
பிறப்பு: 1982
இளவரசர் வில்லியம் தற்போதைய அரசர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் வேல்ஸ் இளவரசி டயானாவின் மூத்த மகன். இப்போது அவர் அரியணை வாரிசுகள் வரிசையில் முதலிடம் வகிக்கிறார்.
அவரது தாயார் உயிரிழந்தபோது அவருக்கு 15 வயது. அவர் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார்.
அங்கு அவர் தனது வருங்கால மனைவி கேட் மிடில்டனை சந்தித்தார். அவர்கள் 2011-இல் திருமணம் செய்துகொண்டனர்.
அவரது 21வது பிறந்தநாளில், அலுவல்பூர்வ சந்தர்ப்பங்களில் ராணியின் பக்கம் நிற்கக்கூடிய நாட்டின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் ஜூலை 2013இல் முதல் குழந்தையாக ஜார்ஜ் மற்றும் 2015இல் இரண்டாவதாக சார்லோட் மற்றும் மூன்றாவதாக 2018இல் லூயி பிறந்தனர்.
வடக்கு வேல்ஸில் அமைந்துள்ள ஆங்கிலேசியில் இருக்கும் ஆர்ஏஎஃப் பள்ளத்தாக்கில் ஆர்ஏஎஃப் தேடல் மற்றும் மீட்பு விமானியாக மூன்று ஆண்டுகள் இருந்தார்.
அதற்கு முன்பு, இளவரசர் வில்லியம் ராணுவம், ராயல் கடற்படை மற்றும் ஆர்ஏஎஃப் உடன் பயிற்சி பெற்றார்.
அவர் தனது அரச கடமைகளுடன் கிழக்கு ஆங்கிலியன் ஏர் ஆம்புலன்ஸில் துணை விமானியாக இரண்டு ஆண்டுகள் பகுதி நேரமாகப் பணியாற்றினார்.
ராணி மற்றும் எடின்பரோ கோமகன் சார்பாக அதிக அரச பணிகளை மேற்கொள்வதற்காக அவர் ஜூலை 2017இல் அந்தப் பதவியை விட்டு விலகினார்.
அரியணையின் வாரிசாக, அவரது முக்கிய கடமைகள் அரசரை அவரது அரச கடமைகளில் ஆதரிப்பதாகும்.
2. கார்ன்வால் மற்றும் கேம்ப்ரிட்ஜின் இளவரசர் ஜார்ஜ்
பிறப்பு: 2013
கார்ன்வால் மற்றும் கேம்ப்ரிட்ஜ் இளவரசர் ஜார்ஜ், 22 ஜூலை 2013 அன்று லண்டனிலுள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் பிறந்தார்.
3.8 கிலோ எடையிருந்த தனது மகன் பிறக்கும்போது இளவரசர் வில்லியம் உடனிருந்தார்.
இளவரசர் ஜார்ஜ் தனது தந்தைக்குப் பிறகு அரியணைக்கு இரண்டாவது இடத்தில் உள்ளார்.
3. கார்ன்வால் மற்றும் கேம்ப்ரிட்ஜின் இளவரசி சார்லோட்
பிறப்பு: 2015
கார்ன்வால் மற்றும் கேம்ப்ரிட்ஜின் சீமாட்டி, 2 மே 2015 அன்று செயின்ட் மேரி மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
3.7 கிலோ இருந்த பெண் குழந்தை பிறந்தபோது கோமகனும் உடனிருந்தார். கோமகனும் சீமாட்டியும் அவருக்கு சார்லோட் எலிசபெத் டயானா என்று பெயரிட்டனர்.
அவர் தனது தந்தை,மூத்த சகோதரரைத் தொடர்ந்து அரியணை வாரிசாக மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மேலும், அவர் கார்ன்வால் மற்றும் கேம்ப்ரிட்ஜின் சீமாட்டியான இளவரசி ஷார்லோட் என்று அழைக்கப்படுகிறார்.
4. கார்ன்வால் மற்றும் கேம்ப்ரிட்ஜின் இளவரசர் லூயி
பிறப்பு: 2018
கார்ன்வால் மற்றும் கேம்ப்ரிட்ஸின் சீமாட்டி, லண்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் 23 ஏப்ரல் 2018 அன்று 3.8 கிலோ எடையுள்ள ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அரியணை வாரிசுகள் வரிசையில் நான்காவது இடத்திலுள்ள லூயி ஆர்தர் சார்ல்ஸின் பிறப்பின்போது கோமகன் உடனிருந்தார்.
5. இளவரசர் ஹேரி, சஸ்ஸெக்ஸ் கோமகன்
பிறப்பு: 1984
இளவரசர் ஹேரி சான்ட்ஹர்ஸ்ட் ராயல் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று ராணுவத்தில் லெப்டினன்ட் ஆனார். ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றினார்.
அவர் கேப்டன் வேல்ஸ் என்று அறியப்பட்டார். தனது 10 ஆண்டுகால ஆயுதப்படை சேவைகளில், ஆப்கானிஸ்தானில் இரண்டு முறை, 2012 முதல் 2013 வரை அபாச்சி ஹெலிகாப்டர் துணை விமானியாகவும் துப்பாக்கி சுடும் வீரராகவும் பணியாற்றினார்.
அவர் 2015-இல் ராணுவத்தை விட்டு வெளியேறினார். இப்போது ஆப்பிரிக்காவில் காட்டுயிர் பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் காயமடைந்த உறுப்பினர்களுக்கு இன்விக்டஸ் விளையாட்டுகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட சேவைகளில் கவனம் செலுத்துகிறார்.
அவர் தனது 21வது பிறந்தநாளில் இருந்து அலுவல்பூர்வ கடமைகளில் ராணியின் பக்கம் நிற்கும் நாட்டின் ஆலோசகராக உள்ளார்.
அவர் 19 மே, 2018 அன்று விண்ட்சர் கோட்டையில் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை மணந்தார்.
ஜனவரி 2020இல், அரச தம்பதி தாங்கள் “மூத்த” அரச குடும்ப உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து பின்வாங்குவதாகவும் பிரிட்டன் மற்றும் வட அமெரிக்காவுக்கு இடையே தங்கள் நேரத்தைப் பிரித்துக் கொள்வதாகவும் கூறினர்.
அவர்கள் “நிதி ரீதியாகச் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு” உத்தேசித்துள்ளதாகக் கூறினர்.
ஓராண்டுக்குப் பிறகு, தம்பதி அரச கடமைகளுக்குத் திரும்பப் போவதில்லை, அவர்களின் கௌரவ ராணுவ நியமனங்கள் மற்றும் அரச ஆதரவை விட்டுக் கொடுப்பார்கள் என்பதை பக்கிங்ஹாம் மாளிகை உறுதி செய்தது.
6. ஆர்ச்சி ஹேரிசன் மவுன்ட்பேட்டன் -விண்ட்சர்
பிறப்பு: 2019
சஸ்ஸெக்ஸ் தம்பதியின் முதல் குழந்தை, ஆர்ச்சி ஹாரிசன் மவுன்ட்பேட்டன் – விண்ட்சர், 6 மே 2019 அன்று 3.26 கிலோ எடையுடன் பிறந்தார்.
அவரது பிறப்பின்போது சஸ்ஸெக்ஸ் கோமகன் உடனிருந்தார். இப்படிப் பெயரிடுவதன் மூலம், சஸ்ஸெக்ஸ் தம்பதி முதல் குழந்தைக்கு ஒரு அரச பட்டத்தைப் பயன்படுத்த வேண்டாமென்று தேர்வு செய்தனர்.
பெயர் அறிவிக்கப்பட்டபோது, பிபிசி அரச குடும்ப நிருபர் ஜானி டைமண்ட், இந்த முடிவு தம்பதி அவரை ஒரு முறையான அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக வளர்க்க விரும்பவில்லை என்பதற்கான வலுவான அறிகுறி என்றார்.
7. லலிபெட் டயானா மவுன்பேட்டன் – விண்ட்சர்
பிறப்பு: 2021
சஸ்ஸெக்ஸின் சீமாட்டி தனது இரண்டாவது குழந்தையை கலிஃபோர்னியாவின் சான்டா பார்பராவில் 4 ஜூன், 2021 அன்று பெற்றெடுத்தார்.
லில்லி என்றழைக்கப்படும் லலிபெட் டயானா மவுன்ட்பேட்ட -விண்ட்சர், அரச குடும்பத்தில் ராணிக்கு இருக்கும் புனைப்பெயரைத் தொடர்ந்து பெயரிடப்பட்டது. அதோடு, லில்லி அவரது 11வது கொள்ளுப் பேரக்குழந்தை.
இளவரசர் ஹாரியின் தாயாரின் நினைவாக அவருக்கு டயானா என்று பெயரிடப்பட்டது. அவர் 1997ஆம் ஆண்டில் ஹாரி 12 வயதாக இருந்தபோது கார் விபத்தில் உயிரிழந்தார்.
8. யார்க் கோமகன்
பிறப்பு: 1960
ராணி மற்றும் எடின்பரோ கோமகனின் மூன்றாவது குழந்தை, இளவரசர் ஆண்ட்ரூ அரியணை வாரிசுகள் வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூ, அரியணை வரிசையில் எட்டாவது, ராணியின் மூன்றாவது குழந்தை – ஆனால் 103 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னருக்கு பிறந்த முதல் குழந்தை.
1986ஆம் ஆண்டு யார்க் சீமாட்டியான சாரா பெர்குசனை திருமணம் செய்தபோது அவர் யார்க் கோமகன் ஆனார்.
அவர்களுக்கு இரண்டு மகள்கள். 1988இல் பியாட்ரீஸ், 1990ஆம் ஆண்டில் யூஜீன் ஆகியோர் பிறந்தனர்.
மார்ச் 1992இல் கோமகனும் சீமாட்டியும் திருமண உறவிலிருந்து பிரிவதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் 1996இல் விவாகரத்து செய்தனர்.
கோமகன் ராயல் கடற்படையில் 22 ஆண்டுகள் பணியாற்றினார். 1982இல் பாக்லாண்ட்ஸ் போரில் பணியாற்றினார்.
அரச ஈடுபாடுகளோடு கூடுதலாக, அவர் 2011 வரை அரசாங்கத்தின் சிறப்பு வர்த்தக பிரதிநிதியாகப் பணியாற்றினார்.
பாலியல் கடத்தல் மற்றும் சதி குற்றச்சாட்டுகள் குறித்த தன் மீதான விசாரணைக்காகக் காத்திருந்தபோது தற்கொலை செய்துகொண்ட அமெரிக்க நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது உறவு குறித்து இளவரசர் ஆண்ட்ரூ 2019இல் பிபிசிக்கு அளித்த நேர்காணலுக்குப் பிறகு, அரச கடமைகளில் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.
பிப்ரவரியில், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்காவில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட சிவில் பாலியல் வன்கொடுமை வழக்கைத் தீர்ப்பதற்காக வெளியிடப்படாத தொகையைச் செலுத்த அவர் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும் அவர் எந்தப் பொறுப்பையும் அதற்கு ஏற்கவில்லை. அதோடு குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் மறுத்தார்.
9. இளவரசி பியாட்ரீஸ்
பிறப்பு: 1988
இளவரசி பியாட்ரீஸ், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் யார்க் சீமாட்டி சாராவின் மூத்த மகள்.
அவரது முழு பட்டப் பெயர், யார்க்கின் சீமாட்டி இளவரசி பியாட்ரீஸ். அவருக்கு அதிகாரப்பூர்வ குடும்பப்பெயர் இல்லை. ஆனால், யார்க் என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்.
அவர் ஜூலை 2020இல், விண்ட்சரில் உள்ள ராயல் லாட்ஜில் ரியல் எஸ்டேட் அதிபர் எட்வர்டோ மாபெல்லி மோஸ்ஸியை திருமணம் செய்தார். இவர்கள் மே மாதம் திருமணம் செய்யவிருந்தனர். ஆனால், கோவிட் பேரிடர் திட்டங்களைத் தாமதப்படுத்தியது.
10. சியென்னா எலிசபெத் மாபெல்லி மோஸ்ஸி
பிறப்பு: 2021
இளவரசி பியாட்ரீஸுக்கு செப்டம்பர் 2021இல் சியென்னா எலிசபெத் என்ற பெண் குழந்தை பிறந்தது.
ராணியின் 12வது கொள்ளு பேரப்பிள்ளையான இவர், அவர் அரியணையில் 10வது இடத்தில் உள்ளார்.
இளவரசி பியாட்ரீஸ், தாரா ஹூவாங்குடனான தனது முந்தைய உறவிலிருந்து வோல்ஃபி என்று அழைக்கப்படும் மாபெல்லி மோஸ்ஸின் மகன் கிறிஸ்டோஃபர் வூல்ஃப் என்பவருக்கு வளர்ப்புத் தாயாகவும் உள்ளார்.
11. இளவரசி யூஜீன்
பிறப்பு: 1990
இளவரசி யூஜீன், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் யார்க் சீமாட்டி சாராவின் இளைய மகள். அவரது முழு பட்டப்பெயர் யார்க்கின் சீமாட்டி இளவரசி யூஜீன். அவர் அரியணையில் 11வது இடத்தில் உள்ளார்.
அவரது சகோதரி இளவரசி பியாட்ரீஸை போலவே, அவருக்கு அதிகாரபூர்வ குடும்பப் பெயர் இல்லை. ஆனால், யார்க்கை பயனப்டுத்துகிறார். அவர் 12 அக்டோபர் 2018 அன்று விண்ட்சர் கோட்டையில் தனது நீண்ட கால காதலர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்கை மணந்தார்.
12. அகஸ்ட் ஃபிலிப் ஹாக் ப்ரூக்ஸ்பேங்க்
பிறப்பு: 2021
இளவரசி யூஜீன் மற்றும் ஹாக் ப்ரூக்ஸ்பேங்க்கின் மகன், ஆக்ஸ்ட் 9, பிப்ரவரி 2021 அன்று பிறந்தார். இவர் ராணியின் ஒன்பதாவது கொள்ளுப் பேரக்குழந்தை.
13. வெஸ்ஸெக்ஸ் கோமகன்
பிறப்பு: 1964
இளவரசர் எட்வர்டுக்கு 1999ஆம் ஆண்டு சோஃபி ரைஸ்-ஜோன்ஸ் உடனான திருமணம் நடந்தபோது, வெஸ்ஸெக்ஸ் கோமகன் மற்றும் விஸ்கவுன்ட் செவர்ன் பட்டம் வழங்கப்பட்டது. இந்தத் தம்பதிக்கு 2003இல் லேடி லூயி, 2007இல் ஜேம்ஸ், விஸ்கவுன்ட் செவர்ன் ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
ராயல் மெரைன்களுடன் பணியாற்றிய சிறிது காலத்திற்குப் பிறகு, இளவரசர் தனது சொந்த தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். அவர் இப்போது ராணியின் அலுவலபூர்வ கடமைகளை ஆதரிப்பதோடு தன்னார்வ நிறுவனங்களுக்கான பொது செயல்பாடுகளை மேற்கொள்கிறார். அவர் அரியணை வாரிசுகள் வரிசையில் 13வது இடத்தில் உள்ளார்.
14. ஜேம்ஸ், விஸ்கவுன்ட் செவர்ன்
பிறப்பு: 2007
விஸ்கவுன்ட் செவர்ன் வெஸ்ஸெக்ஸின் கோமகனுக்கும் சீமாட்டிக்கும் பிறந்த இளைய குழந்தை. தம்பதி தங்கள் குழந்தைகளுக்கு இளவரசர், இளவரசி என்றில்லாமல், கோமகனின் மகன், கோமகனின் மகள் என்று மரியாதை நிமித்தமான பட்டங்களை வழங்க முடிவு செய்தனர். அரச பட்டங்களின் சில சுமைகளைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
15. லேடி லூயி
பிறப்பு: 2003
2003இல் பிறந்த லேடி லூயி, விண்ட்சர் வெஸ்ஸெக்ஸின் கோமகன் மற்றும் சீமாட்டிக்கு மூத்த குழந்தையாகப் பிறந்தார். இருப்பினும், அவர் தனது இளைய சகோதரனை விட வாரிசு வரிசையில் பின்னால் உள்ளார். ஏனெனில், மூத்த மகளை விட இளைய மகனுக்குத்தான் முன்னுரிமை என்ற சட்டம் நீக்கப்படுவதற்கு முன்பு அவர் பிறந்தார்.
16. இளவரசி ஆன்
பிறப்பு: 1950
இளவரசி ஆன், ராணியின் இரண்டாவது குழந்தையும் ஒரே மகளும் ஆவார். அவர் பிறந்தபோது அரியனைக்கான வாரிசு வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்தார். ஆனால், இப்போது 16-ஆவது இடத்தில் இருக்கிறார். ஜூன் 1987இல் அவருக்கு இளவரசி பட்டம் வழங்கப்பட்டது.
இளவரசி ஆன், இரண்டு முறை திருமணம் செய்துகொண்டார். அவரது முதல் கணவர் கேப்டன் மார்க் ஃபிலிப்ஸ், இளவரசியின் இரண்டு குழந்தைகளான பீட்டர் மற்றும் ஜாராவின் தந்தை. இரண்டாவது கணவர் அட்மிரல் டிமோதி லாரன்ஸ்.
இளவரசி தான், கேப்டன் ஃபிலிப்ஸுடனான திருமணத்திற்குப் பிறகு திருமணப் பதிவேட்டில் அதிகாரபூர்வ ஆவணத்தில் மவுன்ட்பேட்டன் -விண்ட்சர் என்ற குடும்பப் பெயரைப் பயன்படுத்திய முதல் நபர். அவர் 1976இல் மான்ட்ரியல் ஒலிம்பிக்கில் கிரேட் பிரிட்டனுக்காக குதிரையேற்ற போட்டிகளில் பங்கேற்றார். அவர் 1970 முதல் தலைவராக இருக்கும் சேவ் தி சில்ட்ரன் உட்பட பல தன்னார்வ நிறுவனங்களில் ஈடுபட்டுள்ளார்.
17. பீட்டர் ஃபிலிப்ஸ்
பிறப்பு: 1977
பீட்டர் ஃபிலிப்ஸ் ராணியின் பேரக்குழந்தைகளில் மூத்தவர். அவர் 2008இல் கனடியரான ஆட்டம் கெல்லியை மணந்தார். அவர்களுக்கு 2010இல் பிறந்த சவான்னா, 2012இல் பிறந்த இஸ்லா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
இளவரசி ஆன் குழந்தைகளுக்கு அரச பட்டங்கள் இல்லை. ஏனெனில், அவர்கள் பெண் பரம்பரையில் இருந்து வந்தவர்கள். மார்க் ஃபிலிப்ஸ் திருமணம் செய்துகொண்ட போது கோமகன் பட்டத்தை மறுத்துவிட்டார். அதனால் அவர்களின் குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய பட்டங்கள் இல்லை.
பீட்டர் ஃபிலிப்ஸ் மற்றும் அவரது மனைவி பிப்ரவரி 2020இல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
18. சவான்னா ஃபிலிப்ஸ்
பிறப்பு: 2010
சவான்னா, 2010ஆம் ஆண்டு, பீட்டர் மற்றும் ஆட்டம் ஃபிலிப்ஸின் மூத்த மகளாகப் பிறந்தார். இவர் தான் ராணியின் முதல் கொள்ளுப் பேரக்குழ்ந்தை.
19. இஸ்லா ஃபிலிப்ஸ்
பிறப்பு: 2012
2012ஆம் ஆண்டு பிறந்த இஸ்லா, பீட்டர் மற்றும் ஆட்டம் ஃபிலிப்ஸின் இரண்டாவது மகள்.
20. ஜாரா டிண்டால்
பிறப்பு: 1981
லண்டன் 2012 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றது உட்பட, ஜாரா டிண்டால் தனது தாய் மற்றும் தந்தையைப் பின்தொடர்ந்து வெற்றிகரமான குதிரையேற்றத்தை மேற்கொண்டார். அவர் 2011-இல் முன்னாள் இங்கிலாந்து ரக்பி வீரர் மைக் டிண்டாலை திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு 2014இல் மியா கிரேஸ் என்ற முதல் குழந்தை பிறந்தது.
இளவரசி ஆனின் குழந்தைகள் அரச பட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், அவர்கள் பெண் வாரிசு வரிசையில் வந்தவர்கள். ஆனால், அவர் அரியணை வாரிசுகள் வரிசையில் 20ஆவது இடத்தில் இருக்கிறார். அவர்களின் தந்தை, மார்க் பிலிப்ஸ், இளவரசி ஆன்னை மணந்தபோதும் கோமகன் பட்டத்தை நிராகரித்தார். அதனால் அவர்களுக்கு மரியாதைக்குரிய பட்டங்கள் இல்லை.
21. மியா கிரேஸ் டிண்டால்
பிறப்பு: 2014
ராணியின் பேத்தி ஜாரா டிண்டால் ஜனவரி 2014இல் தனது முதல் குழந்தையான மியா கிரேஸை பெற்றெடுத்தார்.
22. லேனா எலிசபெத் டிண்டால்
பிறப்பு: 2018
இந்த தம்பதியின் இரண்டாவது குழந்தை, லேனா எலிசபெத் 18 ஜூன் 2018 அன்று க்ளவ்செஸ்டர்ஷையரில் உள்ள ஸ்ட்ரௌட் மகப்பேறு பிரிவில் 4.2 கிலோ எடையுடன் பிறந்தார். லேனா எலிசபெத்துக்கு அவருடைய கொள்ளுப்பாட்டியை கௌரவிக்கும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
அவரது சகோதரியைப் போலவே, லேனா எலிசபெத்துக்கு அரச பட்டம் இல்லை. எனவே அவர் மிஸ் டிண்டால் என்றும் அழைக்கப்படுவார்.
23. லூகாஸ் ஃபிலிப் டிண்டால்
பிறப்பு: 2021
ஜாரா மற்றும் மைக் டிண்டாலின் மூன்றாவது குழந்தையான மகன் லூகாஸ் ஃபிலிப், ராணியின் 10வது கொள்ளுப் பேரக்குழந்தை. அவர், 21 மார்ச் 2021 அன்று 3.7 கிலோ எடையுடன் பிறந்தார்.