இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் சுமார் எட்டரைக் கோடி ரூபா  பெறுமதியான  4 கிலோ 611 கிராம்  தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றியுள்னர்.

இந்நிலையில்,  சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் தங்கத்தைக்  கொண்டுவர முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில்  பிரான்ஸ் பிரஜை ஒருவரைக்  கைது செய்துள்ளனர்.

35 வயதுடைய இந்த பிரான்ஸ் நாட்டவர்,  இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இம்முறை 24 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு வருவதைக் கருத்தில் கொண்டு அவரது பயணப் பொதிகளை பரிசோதித்தபோது சுங்க அதிகாரிகளால்  தங்கத்தைக கண்டுபிடிக்க முடிந்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

சந்தேக நபர் 3 ஆம் திகதி காலை  6.45 மணியளவில் பாரிஸிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-501 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே  அவரது பொதியிலிருந்து தங்கம்  கண்டுபிடிக்கப்பட்டதாகவும் முதல் சோதனையில் அதனைக்  கண்டுபிடிக்க முடியாத வகையில் அவற்றின் மீது  கறுப்புப்பூச்சு  பூசப்பட்டிருந்ததாகவும்  அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான பிரான்ஸ் நாட்டவர் தண்டப்பணத்தை செலுத்த தவறிய நிலையில், சுங்க அதிகாரிகளால் நீர்கொழும்பு பதில் நீதிவான்  முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை  8  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply