ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் போராட்டம் – அதன் பெயரால் அமுதரின் மகனுக்கு புகலிடம். யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலைக்கு காரணம் தமிழ் புதிய புலிகள்.

ஆங்கிலத்தில் TNT என்று சுருக்கமாக அழைக்கப்பட்டனர். TNT என்ற பெயர் வெடி மருந்து ஒன்றையும் குறிக்கும்.

தமிழ் புதிய புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் செட்டி. தனபாலசிங்கம் என்ற செட்டி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அடலேறு ஆலாலசுந்தரம்.

(இவர் தான் பின்னாளில் யாழ்.கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர். விடுதலைப் புலிகளால் காலில் சுட்டு (22.02.83) எச்சரிக்கப்பட்டவர். இவர் கதையும் பின்பு சொல்லப்படும்.)

ஆலாலசுந்தரமும் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர் தான்.

செட்டியை வைத்து பயன்படுத்தலாம் என்று நினைத்த ஆலாலசுந்தரம் செட்டி குழுவினரை அழைத்துப் பேசினார்.

‘தமிழ் புதிய புலிகள்’ என்ற பெயரில் ஒரு குழுவாக இயங்குமாறு ஆலோசனை கூறினார்.

தமிழ் புதிய புலிகள் இயக்கத்தில் முக்கியமாக இருந்தவர்களில் சிலர் செட்டி, பிரபாகரன், சிவராசா, ரமேஷ், இன்பம், கண்ணாடி, பத்மநாதன், பற்குணராஜா, கலாபதி, கிருபாகரன், ரட்ணகுமார் ஆகியோர்.

உமா மகேஸ்வரன்

தமிழ் புதிய புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சில:

யாழ்.தெல்லிப்பழை கூட்டுறவு பண்டகசாலையில் 97 ஆயிரம் ரூபா கொள்ளை (1974), யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலை (1975),புத்தூர் வங்கியில் ரூபா ஏழு லட்சம் கொள்ளை (1976 மார்ச் 5). தமிழ் புதிய புலிகளின் சகல முக்கிய நடவடிக்கைகளிலும் பிரபாகரன் பங்கு கொண்டிருந்தார்.

தமிழ் புதிய புலிகளின் தலைவராக இருந்த செட்டி பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கும் நபராக மாறினார்.

சி.ஐ.டி.இன்ஸ்பெக்டராக இருந்த பத்மநாதன் செட்டியை தனது கைக்குள் போட்டுக்கொண்டார்.

செட்டி மூலமாக தீவிரவாத இளைஞர்களின் விபரங்கள் பத்மநாதனால் சேகரிக்கப்பட்டன.

இதனால் வெறுப்புற்ற பிரபாகரன் செட்டியை தேடித் திரிந்தார்.

1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரியருகே செட்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.

செட்டியை சுட்டுக்கொன்றவர் குட்டிமணி. அப்போது பிரபாகரனும் குட்டிமணி குழுவினரோடு இருந்தார்.

5.5.76 அன்று தமிழ் புதிய புலிகள் இயக்கத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) என்னும் புதிய பெயர் சூட்டப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளில் முக்கியமானவர்களாக இருந்தவர்கள் – பிரபாகரன், உமா மகேஸ்வரன், நாகராசா, செல்லக்கிளி (இவர் செட்டியின் தம்பி) ஐயர், விச்சுவேஸ்வரன், ரவி ஆகியோர்.

துரையப்பா கொலையில் பங்கு கொண்ட பற்குணராசா என்னும் சரவணன் பிரபாகரனால் கொல்லப்பட்டார்.

மைக்கல் என்னும் இன்னொரு உறுப்பினரும் 1976ல் பிரபாகரனால் கொல்லப்பட்டார்.

இயக்க முடிவின்படியே மேற்கண்ட இருவரையும் பிரபா சுட்டுக்கொன்றார். ஆனால் அந்த முடிவுக்கு காரணமான சிலர் பின்னர் பிரபா மீது அவரது தனிப்பட்ட தவறு என்பது போல அக்கொலைகள் பற்றி சொல்லித் திரிந்தனர்.

பற்குணராசா என்ற சரவணனை பிரபாகரனிடமிருந்து தந்திரமாக அழைத்துச் சென்றவர்களில் ஒருவர் நாகராசா (வாத்தி). இவர் பின்னர் இயக்கத்திலிருந்து வெளியேறினார்.

வெளியேறிய பின்னர் பிரபாகரன் மீது கொலைகளுக்கான விமர்சனத்தை முன் வைத்தார். அதனால் கோபம் கொண்ட பிரபாகரன் தமிழ்நாட்டில் சென்னையில் இருந்த நாகராசாவை கடத்திச் சென்றார்.

அதன் பின்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘நக்சலைட்’ குழுக்களின் தலையீட்டாலும் தமிழக இரகசிய பொலிசாரின் முயற்சியாலும் நாகராசா விடுவிக்கப்பட்டார்.

புலிகள் இயக்க தலைவர்களாக அரசால் தலைக்கு விலை வைத்து தேடப்பட்ட முக்கியமான மூவர் பிரபாகரன், உமாமகேஸ்வரன், நாகராசா.

நாகராசா இயக்கத்தில்இருந்து வெளியேறி கடத்தல் தொழிலில் ஈடுபட்டு தற்போது செல்வந்தராக தமிழ்நாட்டில் இருக்கின்றார்.

இரகசியமான தலைமறைவு இயக்கத்தின் கட்டுப்பாட்டு விதிகள் நெகிழ்வானதாக இருக்கக்கூடாது என்று பிரபா நினைத்ததை முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது.

இயக்கத்தை விட்டு விலகிய பின் இயக்கத்தில் இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகளை வெளியே தெரிவிப்பது போராட்ட காலத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தும்.

கிய+பா புரட்சியின் போது சேகுவேராவும் கட்டுப்பாட்டை மீறுவோர் தண்டிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

கட்டுபாட்டை மீறிய ஒரு போராளியை சேகுவேரா சுட்டுக்கொன்ற நிகழ்வும் கிய+பா புரட்சியின்போது நடந்திருக்கின்றது.

உமா மகேஸ்வரனும் பிரபாகரனின் உட்கொலைகளை கண்டித்துப் பேசியவர்களில் ஒருவர்.

ஆனால், அவர் பின்பு புளொட் இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தியபோது புளொட் இயக்கத்தில் நூற்றுக்கணக்கான உட்கொலைகள் உமாவின் உத்தரவுப்படி நடந்ததாக புளொட் முக்கியஸ்தர்களே விமர்சித்தனர்.

இறுதியாகத் தனது இயக்க உறுப்பினரும் மெய்ப்பாதுகாவலருமான ஒருவராலேயே உமா மகேஸ்வரன் கொழும்பில் வைத்து கொல்லப்பட்டார்.

இனி , துரையப்பா கொலைக்குப் பின் நடந்த சம்பவங்களுக்கு வருவோம்.

துரையப்பா கொலையைப் பற்றி விசாரணை செய்ய பொலிசார் பல முனைகளில் முயற்சிகளை மேற்கொண்டனர்.

தீவிரவாத இளைஞர்களை வேரோடு களையவேண்டும் என்ற முனைப்போடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதே சமயம் துரையப்பா கொலையோடு தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் காண்டிபனின் பெயரும் சேர்க்கப்பட்டது.

காண்டிபனைத் தேடி பொலிசார் அலைந்தனர்.

துரையப்பாவை சுட்டது யார் என்பது கூட அமிர்தலிங்கம் சொல்லித் தான் காண்டிபனுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனாலும், காண்டிபனை பொலிசார் தேடிய வேகத்தைப் பார்த்த மக்கள் அமுதரின் மகனும் ஒரு வீரன் தான் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்டனர். இதனால் அமுதருக்கு இருந்த மதிப்பும் உயர்ந்தது.

காண்டிபன் இலண்டனுக்கு பத்திரமாகப் போய்ச் சேர்;ந்தார்.

அவருக்கு அரசியல் அடைக்கலம் பெற்றுக் கொடுக்க பலத்த முயற்சிகள் நடந்தன.

இறுதியில் அரசியல் புகலிடம் கிடைத்தது. தமிழர்கள் சந்தோசப்பட்டார்கள். தேடப்பட்டவுடன் தப்பிஓடி அரசியல் புகலிடம் தேடுவதா?

அப்படியானால் இங்கே போராடும் இளைஞர்கள், சுவரொட்டி ஒட்டி தலைக்கு விலை வைத்து தேடப்படும் இளைஞர்கள் புத்திகெட்டவர்கள் என்று தான் அர்த்தமா? என்றெல்லாம் தமிழர்களில் பலர் யோசிக்கவேயில்லை.

அந்தளவுக்கு அமுதர் மீது கண்மூடித்தனமான விசுவாசம் நிலவிய காலம் அது.

காண்டிபன், துரையப்பா கொலையில் தேடப்பட்டதால் ஏற்பட்ட இலாபங்கள் இரண்டு.

ஒன்று: அமுதர் குடும்பமே தியாகத்திற்கு தயாரான குடும்பம் என்ற பெருமை. அதனால் தளபதி என்ற பட்டம் அமுதருக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

இலாபம் இரண்டு: அந்தக் காலத்தில் இலண்டன் சென்று புகலிடம் பெறுவது சாதாரண காரியமல்ல. ஆனால் காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாக காண்டிபனுக்கு புகலிடம் சுலபமாகக் கிடைத்தது.

இலண்டனில் புகலிடம் தேடிய காண்டிபன் தமிழர்கள் போராட்டத்திற்கு அங்கிருந்து செய்த காரியம் என்னவென்று கேட்டால், பதில் ஒன்றுமேயில்லை என்பது தான்.

அமுதரின் தியாகங்களை மறுத்துப் பேசுவது என் நோக்கமல்ல: தமிழர்களுக்குக் கிடைத்த ஆளுமையுள்ள, உணர்ச்சிகரமான தலைவர் அவர்.

ஆனால், காண்டிபன் விடயத்தில் அமுதரின் போக்கு சரியானதாக இருக்கவில்லை.

அமுதரின் மகன் லண்டனில் புகலிடம் தேடிக்கொண்டார். வடக்கு – கிழக்கில் தீவிரவாத இளைஞர்கள் பொலிசாரின் தேடுதல் வேட்டைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள அங்கும் இங்கும் ஓடி அலைந்தார்கள்.

தேடுதலில் முன் நிற்கும் பொலிசாரை அழித்துவிடுவது தான் தப்பிக் கொள்ளவழி என்று தீவிரவாதக் குழுக்கள் முடிவு செய்தன.

குறிப்பாக தமிழ் பொலிஸ் அதிகாரிகள் மீது தான் இளைஞர்கள் அதிகமாகக் கோபப்பட்டார்கள்.

துப்பு துலக்குவதில் திறமையான பொலிஸ் அதிகாரி பத்மநாதன்.

சி.ஐ.டி. இன்ஸ்பெக்டரான பத்மநாதனின் வீடு நல்லூர் முடமாவடியில் இருந்தது.

1978 ஆம் ஆண்டு (திகதி – மாதம் நினைவில் இல்லை) சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பத்மநாதன் வீட்டின் முன்பாக இளைஞர்கள் சிலர் காத்திருந்தனர்.

இரவு நேரம். வெளியே காரில் சென்றிருந்த பத்மநாதன் எப்படியாவது வீடு வந்து சேர்ந்தேயாகவேண்டும்.

இளைஞர்களிடம் பரபரப்பு,குறி சரியாக அமையவேண்டுமே என்றும் படபடப்பு.

இது புலிகள் குழுவினரல்ல. வேறு குழு.

தூரத்தில் கார் ஒன்றின் ஹெட்லைட் வெளிச்சம்.

இளைஞர்களின் இதயத்துடிப்பு அதிகரித்தது. பத்மநாதனிடமும் கைத்துப்பாக்கி இருந்தது.

(தொடரும்)

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 1.. 2..3

 

Share.
Leave A Reply

Exit mobile version