கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 31 திகதி வரையிலான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 199 சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மே மாதத்தை தவிர ஏனைய அனைத்து மாதங்களிலும் இந்த வருடம் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் வருகை 159 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதற்கமைவாக கடந்த மாதம் இந்தியாவிலிருந்து 28,222 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 10,629 சுற்றுலாப் பயணிகளும்,

ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,454 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 7,548 சுற்றுலாப் பயணிகள் மற்றும் சீனாவிலிருந்து 6,211 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் அவுஸ்திரேலியா, மாலைத்தீவு, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 25 ஆயிரத்து 455 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply