மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மன்னாரில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்துள்ளார்.

மேலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் பாலியாறு மற்றும் பரங்கியாறு போன்ற ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்வடையும் நிலை காணப்படுகிறது.

அவ்வாறு நீர் மட்டம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மன்னார் – யாழ்ப்பாணம் (ஏ-32) பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கக்கூடும்.

எனவே, அந்த வீதியூடாக பயணிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் இதன்போது பொலிஸார், இராணுவத்தினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதே‍போல், மன்னார் தீவு மற்றும் பெரும் நிலப்பரப்புகளிலுள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வெள்ள நீர் வடிந்தோட வடிகான்களை துப்பரவு செய்து, வெள்ள நீர் கடலுக்குள் செல்லும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை, வெள்ளம் காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தேவன்பிட்டி பகுதியில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 161 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவுகள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், மன்னார் பிரதேச செயலக பிரிவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் பாதுகாப்புடன் செயற்படுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், தற்போதைய பலத்த மழை மற்றும் வெள்ள அனர்த்த நிலைமையில் மக்கள் அவசர உதவிக்கு மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொலைபேசி இலக்கமான 023-2250133 எனும் இலக்கத்துக்கும், மன்னார் பிரதேச செயலக பிரிவு தொலைபேசி இலக்கமான 076-1258120 எனும் இலக்கத்துக்கும் தொடர்புகொள்ளலாம்.

 

Share.
Leave A Reply

Exit mobile version