ஸ்ரீமாவோ தலைமையிலான சுதந்திரக் கட்சியினர், ஐ.தே.கட்சிக்கு ஏட்டிக்குப்போட்டியாக தமிழரசுக் கட்சியை இணைத்துக்கொண்டு தாம் தேசிய ஆட்சி அமைக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.
தந்தை செல்வாவின் வீட்டுக்கு ஸ்ரீமாவோவின் பிரதிநிதியாக வந்த டாக்டர் என்.எம் பெரேரா, பண்டா, செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்ற சிறிமாவோ அம்மையார், தயாராக இருப்பதாக கூறியதுடன், சுதந்திரக்கட்சி ஆட்சி அமைக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
1960 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் பல வாக்குறுதிகளைத் தந்து அம்மையார் ஏமாற்றியதை தந்தை நன்கு அறிவார். எனவே சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை ஏற்காத நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி தேசிய அரசாங்கம் அமைக்க தமிழரசுக் கட்சி ஆதரவு நல்கியதன் பிரதி பலிப்பாக சொலிசிட்டர் ஜெனரலான மு.திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இருந்த போதிலும் தமிழரசுக்கட்சியின் மூளை என வர்ணிக்கப்பட்ட ஊர்காவற்துறை உறுப்பினர், வி. நவரத்தினம் தமிழரசுக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளித்த ஆதரவுக்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து கட்சியிலிருந்து விலகி, தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
டட்லி – செல்வா ஒப்பந்தம்
தேசிய அரசாங்கம் அமைக்கும்வரை இரகசியமாக வைத்திருந்த டட்லி – செல்வா ஒப்பந்த ஆவணம் 24.3.1965 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தில் தமிழ் மொழிக்கான அந்தஸ்து, அதிகாரப் பரவலாக்கம், வடக்கு கிழக்கு குடியேற்றம் ஆகிய மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதற்கு அமைய 1966 ஜனவரி 8 ஆம் திகதி தமிழ் மொழி உபயோக சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது வடக்கு கிழக்கு மாகாணங்களில் நீதிமன்ற நிர்வாக மொழியாக இடம்பெற வழிவகுத்தது.
இவ்வொப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத சுதந்திரக்கட்சியை சேர்ந்த தீவிரவாதிகளும், இடதுசாரிகள் தொழிற்சங்கத்தினர். ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தனர். போராட்டம், வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் ஆகியன இடம்பெற்றன. இதேபோன்றே ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களும், குறிப்பாக ஜே.ஆர்.ஜயவர்தனவும், மிகவும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
‘இவ்வொப்பந்தம் மூலம் வடக்கு கிழக்கில் பிராந்திய சபைகள் அமைக்க உடன்பாடு காணப்பட்டுள்ளது. அத்துடன் இரு மாகாணங்களிலும் தமிழ் மொழியை அரசகரும மொழியாக அங்கீகரிக்கவும், தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதில்லை என இவ்வொப்பந்தம் மூலம் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சமஸ்டி ஆட்சி கொண்டுவரப்படவுள்ளது’ என்ற பிரசாரங்களை சுதந்திரக்கட்சியனர் தீவிப்படுத்தினர். பண்டா – செல்வா ஒப்பந்தத்தின்போது ஐக்கிய தேசியக்கட்சியினர் எத்தகைய இனவாத பிரசாரங்களை மேற்கொண்டார்களோ அதன் இரட்டிப்புத்தன்மை இங்கு காணப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் காரணமாக தமிழ் மொழி விசேட ஏற்பாட்டுச்சட்டம் 1966 ஜனவரி 8 இல் கொண்டுவரப்பட்டபோது, நாட்டில் வன்செயல்கள் வெடித்தன. பிரதமர் டட்லி சேனாநாயக்காவின் ஒப்பந்தத்தில் உடன்பட்டிருக்கும் மாவட்டசபை முறை சமஷ்டியினதும், பிரிவினைவாதத்தினதும், முதற்படி என சுதந்திரக்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
டட்லியின் மந்திரி சபையிலுள்ள ஜே.ஆர். ஜயவர்தன உட்பட பிரதான அமைச்சர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து பாராளுமன்றத்துக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை சுதந்திரக்கட்சியனர் நடத்தினர். ஊர்வலத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பௌத்த துறவி ரத்தின சார தேரர் இறந்தார். நாடு தழுவிய எதிர்ப்பு நிலை உருவாகியது. குழப்பமும் கொந்தளிப்பும் எல்லை மீறியது. தமிழரசுக்கட்சி தான் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை வாபஸ் பெறவேண்டிய சூழ்நிலை உருவாகியது.
இந்த ஒப்பந்தத்திலுள்ள நான்கு அம்ஷங்களில் முதல் இரண்டு பிரிவுகள் தமிழ் மொழி பற்றியது. மூன்றாவது, மாவட்ட சபைகளை அமைத்தல் தொடர்பானது. நான்காவது, சிங்கள குடியேற்றங்கள் தொடர்பானது.
மாவட்ட அபிவிருத்திச் சபைகள்
தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வில் மாவட்ட சபைகளை உடன் நிறுவி உரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும்படி தந்தை செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன்பின் வலியுறுத்திவந்தார். இதற்காக தமிழரசுக் கட்சியில் ஒரு விசேட குழுவை தந்தை அமைத்திருந்தார். அக்குழவில் டாக்டர் நாகநாதன், திருச்செல்வம், இரசமாணிக்கம், அமிர்தலிங்கம். ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
அவர்கள் பிரதமர் டட்லியை சந்தித்து இது பற்றி கலந்துரையாடினார்கள். அப்போது அமைச்சராக இருந்த ஜே.ஆர் ஜயவர்தன, மாவட்ட சபைக்கான சட்டவரைபைத் தயாரித்து மந்திரி சபைக்கு சமாப்பிக்கும்படி மேற்படி குழுவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். மேற்படி குழுவால் வரைபு தயாரிக்கப்பட்டது.
1. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு மாவட்ட சபை அமைக்கப்படும்.
2. இதில் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள். இடம்பெறுவர்.
3. நிர்வாக குழு அமைக்கப்படும்.
4. நிர்வாக குழுவின் பணி சபையை நிர்வாகித்தல், அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்தல்.
5. மாவட்ட சபைகளுக்குரிய அதிகாரங்கள் என வரைபு தயாரிக்கப்பட்டது.
இதைப் பூதாகரப்படுத்திய எதிர்க்கட்சியினா,; மாவட்ட சபை மூலம் டட்லி நாட்டை பிளவுபடுத்தப்போகிறார் என அவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பிரசாரம் காரணமாக டட்லி பயந்து போனார்.
தன்னை சிங்கள மக்களின் விரோதியென்றோ நாட்டை துண்டாடுபவரென்றோ சிங்கள மக்கள் நினைத்துவிடக் கூடாது என்ற பயத்தில் ‘நான் சமஷ்டிவாதிகளின் உதவியுடன் அமைத்த தேசிய அரசாங்கம் இந்த நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டதல்ல’ என ஒருஅறிக்கையை (17.10.1968) வெளியிட்டார். மேற்படி மசோதாவை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பயந்தார். இதனால் பின்வரும் காரணங்களின் காரணமாக தமிழரசுக் கட்சி டட்லி தலைமையிலான தேசிய அரசாங்கத்திலிரு;து விலகிக் கொண்டது.
1. மாவட்டசபை மசோதா நிறைவேற்றப்படாமை.
2. தமிழ் மொழி விசேட வசதிகள் சட்டத்தை அமுல் படுத்தாமை.
3. கோணேஸ்வரம் புனித நகரப் பிரகடனத்தை செய்யாமை.
4. கோணேஸ்வர ஆலயத்திலிருந்து இராணுவத்தை அகற்றாமை.
5. திருகோணமலை கித்துள் ஊற்று கிராமத்து சிங்கள குடியேற்றம்.
6. திருகோணமலை தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவாமை.
7. 1966 அக்டோபரில் திருகோணமலைத் துறைமுகத்தை தேசிய மயமாக்கியமை
போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற டட்லி அரசாங்கம் பின்வாங்கியதன் காரணமாக டட்லியின் தேசிய அரசாங்கத்திலிருந்து தமிழரசுக் கட்சி விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தங்கள் கோரிக்கை எதையும் டட்லி தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றவில்லை என காரணங்காட்டி 15.9.1968 ஆம் திகதி அரசாங்கத்தை விட்டு தமிழரசுக் கட்சியினர் வெளியேறினர்.
1970 குடியரசு யாப்பும் சமஷ்டியும்
தமிழரசுக்கட்சி 1970 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ் பேசும் மக்கள் சமஷ்டி அதிகார பகிர்வு முறையைக் கோரி வந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது:
சோல்பரி யாப்பு தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகள் ஆக்கியுள்ளது. தங்களைத் தாங்களே ஆளும் வழியை அது கோலவில்லை. அழிவுகளிலிருந்து தமது இனத்தை பாது காத்துக் கொள்ள சமஷ்டி அமைப்பு முறை அத்தியாவசியம். அப்போதுதான் தமிழ்ப் பேசும் மக்கள் கௌரவத்துடனும் சிங்கள மக்களுடன் சமத்துவமாக வாழும் பிறப்புரிமையுடன் வாழ முடியும் என்று தமிழரசுக்கட்சி கேட்டுக் கொள்கிறது என விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மற்றொரு விடயத்தையும் கோடிட்டு காட்டியிருந்தார்கள்.
இலங்கையைத் துண்டாடும் எந்த இயக்கத்துக்கும், குழுக்களுக்கும் ஆதரவளிக்க வேண்டாமென்று விஞ்ஞாபனத்தில் தங்களைக்கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
1970 மே 27 தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஐக்கிய முன்னணி அமோக வெற்றி பெற்றது. இத்தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு 13 ஆசனங்களும் தமிழ்க் காங்கிரஸுக்கு 3 ஆசனங்களும் கிடைத்தன.
அடுத்தடுத்;து ஐந்து தேர்தல்களில் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்கள் சமஷ்டி தீர்வுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர் என தமிழரசுக் கட்சி பெருமை பேசியது.
புதிய அரசியல் சாசனமொன்றை தயாரித்து நிறைவேற்றி நடைமுறைப்படுத்தும் பணியை ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் டாக்டர் கொல்வின் ஆர்.டி . சில்வாவிடம் ஒப்படைத்தது.
புதிய அரசியல் சாசனத் தயாரிப்பில் தமிழரசுக்கட்சி கலந்து கொள்ளவேண்டுமா இல்லையா என்ற முடிவை எடுப்பதற்காக கொழும்பில் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அதன்பின் எடுக்கப்பட்ட முடிவின்படி சமஷ்டிக் கோரிக்கையை அரசியல் நிர்ணய சபையில் முன்வைக்க வேண்டுமென ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
அரசியல் நிர்ணய சபைக்கு தலைவராக செயற்பட்ட கொல்வின் ஆர்.டி சில்வா, வழிகாட்டல் குழுவுக்கு ஒவ்வொரு கட்சியும் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்கும்படி கோரினார். அதற்கு அமைய தமிழரசுக்கட்சி ஒரு மாதிரி அரசியல் அமைப்பு திட்டத்தை தயாரித்திருந்தார்கள். அது இரு முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டதாக தயாரிக்கப்பட்டது.
1. சமஷ்டி அமைப்பு முறை யாப்பு
2. சோஷலிச பொருளாதார முறையான யாப்பு. என்ற அடிப்படையில் சமஷ்டி முறையான யாப்பு மாதிரியை தமிழரசுக் கட்சிக் குழுவினர் தயாரித்திருந்தார்கள்.
கொல்வின் தலைமையில் அரசியல் நிர்ணய சபை கூடி சில தீர்மானங்கள் மேற்கொண்டது. முதலாவதாக இலங்கை ஒரு சுதந்திரமான சோஷலிச குடியரசு என்ற தீர்மானமாகும். இதை தமிழரசுக்கட்சியினர் ஏற்றுக் கொண்டார்கள். இரண்டாவது இலங்கை ஒரு குடியரசு ஒற்றையாட்சி நாடாக இருக்க வேண்டும் என்ற தீர்மானமாகும்.
இத்தீர்மானத்தின்மீது தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான உடுவில் தர்மலிங்கம் திருத்தமொன்றை முன்வைத்தார். அத்திருத்தம் யாதெனில் இலங்கை ஒரு மத சார்பற்ற சமஷ்டி குடியரசாக இருக்க வேண்டுமென முன்வைத்த திருத்தத்தை அரச தரப்பினர் கடுமையாக எதிர்த்ததுடன் ‘சமஷ்டி ஆட்சி முறையை ஆராய மக்கள் ஆணையில்லை.
சிங்கள மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்’ என எதிர்ப்புத் தெரிவித்தார்கள். எதிர்ப்பை தெரிவித்ததில் பிரதானமானவர்களாக இருந்தவர்கள் இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள். தர்மலிங்கத்தின் திருத்தம் நிராகரிக்கப்பட்டு இலங்கை ஒற்றையாட்சி நாடு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த தீர்மானமாக தாய் மொழியில் கல்வி கற்கும் உரிமையை ஏற்றுக் கொள்ளும்படி தமிழரசுக்கட்சியினர் வாதடியபோதும், அதுவும் நிராகரிக்கப்பட்டது. எல்லா சட்டங்களும் சிங்களத்தில் இயற்றப்படும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது தமிழரசுக்கட்சியினர் சிங்களமும் தமிழும் என திருத்தத்தை முன்மொழிந்தார்கள்.
பண்டிதர் க.பொ. இரத்தினத்தால் கொண்டுவரப்பட்ட இத்திருத்தத்தை எதிர்த்து எம்.பிக்கள் 87 பேர் வாக்களித்தனர். இவர்களில் தமிழர்களும் அடங்கியிருந்தார்கள்.
நல்லூர் அருளம்பலம், யாழ் எம் சுப்பிரமணியம், வட்டுக்கோட்டை ஆ. தியாகராஜா, யாழ்ப்பாணம் மாட்டின், நியமன எம்.பி. குமாரசூரியர், மட்டக்களப்பு ராஜன் செல்வநாயகம் ஆகியோர் குறித்த 87 பேரில் உள்ளடங்குவர். தமிழ் எம். பிக்கள் 13 பேர் மட்டுமே ஆதரித்து வாக்களித்தனர்.
இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில், ‘ஒரு மொழியானால் இரண்டு நாடுகள், இரு மொழியானால் ஒரு நாடு’ என பண்டாரநாயக்கா காலத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக பேசிய கொல்வின் ஆர்.டி. சில்வா, சிங்களம் மட்டும் சட்டத்தையும் பௌத்தம் அரசகரும மொழி என்ற ஷரத்தையும் அரசியல் சாசனத்தில் கொண்டுவந்தார் என்பது கவனத்துக்குரியது.
சேகுவரா புரட்சி
இந்த மறுதலிப்பான நிலையில் அரசியல் நிர்ணய சபையிலிருந்து வெளியேறுவது எனத் தமிழரசுக் கட்சியினர் முடிவெடுத்தனர். இதேவேளை, நாட்டில் இன்னொரு நெருக்கடி நிலையொன்று உருவாகியது. இலங்கையில் எதிர்பாராத அரசியல் புரட்சி யொன்று வெடித்தது. 1971 (5.4.1971) முற்பகுதியில் ஜே.வி.பியினர் அரசுக்கு எதிரான புரட்சி யொன்றை நடத்தினர்.
இது சேகுவராப் புரட்சி என அழைக்கப்பட்டது. சிங்கள இளைஞர்கள் ஆயுதம் மூலம் தென்னிலங்கை முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இப்புரட்சியை இலங்கை அரசாங்கம் இந்தியப்படையின் உதவியுடன் அடக்கியது. பல்லாயிரக்கணக்கான சிங்கள் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இது நாட்டில் அமைதியின்மையை உருவாக்கியபோதும் புதிய அரசியல் சாசன முயற்சிகள் மெல்ல மெல்ல முன்னெடுக்கப்பட்டன.
1972 ஆம் ஆண்டு ஜனவரி 12 இல் தமிழரசுக்கட்சி இந்திய, பாகிஸ்தான், இந்திய யுத்தத்தில் இந்திய வெற்றியை கொண்டாடும் முகமாக ஆறு அரசியல் கட்சிகளோடு இணைந்து மாபெரும் கூட்டமொன்றை காங்கேசன் துறையில் நடத்தியது.
தந்தை செல்வா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தந்தை செல்வா தமது சமஷ்டி சம்மந்தமான கோரிக்கை புதிய அரசியல் சாசனத்தில் தோல்வி கண்டு விட்டது என்ற உண்மையை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்.
சமஷ்டி கோரிக்கை வெற்றிபெறுவதற்கு சிங்கள மக்களின் ஒத்துழைப்பு தேவை 1960 முதல் 1972 வரை உள்ள 12 ஆண்டுகளில் சிங்கள கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டதென ஒத்துக் கொண்டார் தந்தை.
இந்த சம்பவங்களுக்குப் பிறகு மனம் சோர்ந்து, தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டுமென கூறிய செல்வா முயற்சியை கை விடாது தொடர்ந்தார்.
திருமலை நவம்(தொடரும்)
சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா? – பகுதி 4