அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி நடத்திய இரு தரப்பு சந்திப்பின்போது ஏற்பட்ட திடீர் சர்ச்சை மற்றும் முறுகல் நிலை தொடர்பாகவே உலகம் தற்போது பாரியளவில் பேசிக்கொண்டிருக்கிறது.
உண்மையில் இவ்வாறு திடீரென இந்த இரு தரப்பு சந்திப்பில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்கள் மற்றும் சர்ச்சை நிலைமைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் அதன் பின்னணி தொடர்பாக பல்வேறு வழிகளில் பார்க்க வேண்டியிருக்கிறது.
மேலும் உலகம் தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பின் பின்னர் புதியதொரு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் இது டொனால்ட் ட்ரம்புக்கும் செலன்ஸ்கிக்கும் இடையில் முறுகலாக தெரிந்தாலும் இது மிகத் தெளிவாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவில் ஏற்படுகின்ற விரிசலுக்கான சமிக்ஞையாகவே தெரிவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைத்துக்கொண்டிருக்கும் அட்லாண்டிக் சமுத்திரத்தில் பிளவு ஏற்படுவதாகவே இது வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.
எனவே, அந்த புதிய நகர்வுகள் மற்றும் அணுகுமுறையின் அடிப்படையிலேயே ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்கி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் முறுகல் நிலையை நோக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், இந்த புதிய நிலைமைகள், அணுகுமுறைகள், நகர்வுகளை உக்ரேன் ஜனாதிபதி சரியான முறையில் புரிந்துகொண்டாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2022ஆம் ஆண்டு உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நேரடி யுத்தம் ஆரம்பமானது. ஆனால் அதற்கு முன்னரும் கூட தொடர்ந்து பல்வேறு தடவைகள் இந்தப் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது மோதல்களும் இடம்பெற்றன.
எனினும் இதுவரை அமெரிக்காவானது முழுமையாக உக்ரேனுக்கு இந்தப் போரில் உதவி வழங்கியதுடன் ஆயுத உதவி முதல் நிதி உதவி உள்ளடங்கலாக பல்வேறு வழிகளிலும் உக்ரேனுக்கு ஆதரவாகவே நின்றது. மிகக் குறிப்பாக கடந்த ஜோ பைடன் ஆட்சியின்போது உக்ரேனுக்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கியது.
அமெரிக்காவின் செல்லப் பிள்ளை போன்றே உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி கருதப்பட்டார். எனினும், யாரும் எதிர்பாராத வகையில் தற்போது அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், யாரும் எதிர்பாராத மாற்றம் என்று கூற முடியாது. காரணம், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பத்திலிருந்தே இந்த ரஷ்யா – உக்ரேன் போரில் அமெரிக்கா ஏன் இந்தளவு தூரம் தலையிட வேண்டும் அல்லது செலவழிக்க வேண்டும் என்ற வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
அதுமட்டுமன்றி ஜனாதிபதியானதுடன் தான் இந்தப் போரை நிறுத்தி சமாதானத்தைக் கொண்டு வருவதாக டொனால்ட் ட்ரம்ப் கூறி வந்தார். எனினும், ஆரம்பத்திலிருந்து அமெரிக்கா புதிய ஜனாதிபதியின் சாய்வு உக்ரேனை விட ரஷ்யாவின் பக்கத்தில் காணப்பட்டதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பின்னணியில் அவர் இரு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகினார். அதன் அடிப்படையிலேயே உக்ரேனிய ஜனாதிபதியுடனான சந்திப்பு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. ஆனால் அதற்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வுகளையும் இங்கு பார்க்க வேண்டியிருக்கிறது.
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியான உடனேயே ரஷ்யா ஜனாதிபதி புட்டினுடன் இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார்.
அதன் பின்னர் ட்ரம்ப் உக்ரேன் – ரஷ்யா விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக தனது தூதுவராக நியமித்துள்ள பிரதிநிதி உக்ரேன் மற்றும் ரஷ்ய தரப்புக்களுடன் பேச்சு நடத்தினார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தை ஐரோப்பிய நாடுகள் ஆதரித்த போதிலும் 18 நாடுகள் அதனை எதிர்த்தன.
அந்த 18 நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா காணப்பட்டன. இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு காணப்படுகின்ற உறவில் விரிசல் ஏற்படுவதற்கான ஒரு சமிக்ஞை வெளிப்பட்டது.
இதன்போது பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் பிரிட்டன் பிரதமர் ஆகியோரின் ட்ரம்புடனான சந்திப்பின்போதும் ஒரு சில நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதாவது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனக்கே உரிய பாணியில் ஒரு சில கிண்டல்களை வெளிப்படுத்தியதை காண முடிந்தது. எனினும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைவர்கள் அவர்களுக்கே உரிய முதிர்ச்சியுடன் அந்த நிலைமைகளை கையாண்டனர்.
அதற்கு முன்னர் ஜேர்மனின் முனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் உரையாற்றினார். இதில் அவர் சில ஐரோப்பிய நாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதாவது ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து எதிரிகள் வரவில்லை என்றும் ஐரோப்பாவுக்குள்ளே எதிரிகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவருடைய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. ஐரோப்பாவின் ஒரு சில தலைவர்கள் இந்த அமெரிக்க உப ஜனாதிபதியின் பேச்சுக்கு எதிர்ப்பையும் வெளிக்காட்டினர்.
இந்தப் பின்னணியிலேயே ட்ரம்ப் – செலன்ஸ்கியின் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது உக்ரேனுடன் அமெரிக்கா கனியவள அகழ்வு தொடர்பான உடன்படிக்கையும் கைச்சாத்திட ஏற்பாடாகியிருந்தது.
இதற்கு முன்னர் செலன்ஸ்கி அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்பையும் நடத்தினார். இந்நிலையில் ட்ரம்ப் – செலன்ஸ்கி சந்திப்பின்போது ஆரம்பம் நன்றாகவே இருந்தது.
உக்ரேன் இராணுவ வீரர்களை ட்ரம்ப் பாராட்டி பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்களின் போது கனியவள உடன்படிக்கையில் தான் கைச்சாத்திட தயார் என்றும் ஆனால் அமெரிக்கா உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் செலன்ஸ்கி ட்ரம்புக்கு கூறினார்.
ஆனால் அதற்கு பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்க தரப்பினர் உக்ரேனில் கனியவள அகழ்வில் ஈடுபடும் போது அதனை எதிர்த்து யாரும் நிற்கமாட்டார்கள். அப்படி யாராவது எதிர்த்தால் அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் தலையிடுவார்கள் என்று பதிலளித்தார்.
இந்த விடயம் உக்ரேன் ஜனாதிபதிக்கு பெரிதாக பிடிக்கவில்லை. எனவே அவர் தொடர்ந்து அந்த பேச்சுக்களை திசை திருப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகவே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த இடத்திலிருந்தே இந்த சர்ச்சை முறுகல் நிலை ஆரம்பமானது.
30 நிமிடங்கள் வரை பேச்சுவார்த்தை சுமுகமாகவே நடைபெற்றது. அதன் பின்னரே நிலைமை தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் 2015ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா ஒப்பந்தங்களை மீறி வருவதாகவும் 2017ஆம் ஆண்டு ட்ரம்ப் காலத்திலும் ரஷ்யா மீறல்களை செய்ததாகவும் உக்ரேன் ஜனாதிபதி கூறினார்.
இந்தக் கூற்று அமெரிக்க ஜனாதிபதியை மேலும் விசனப்படுத்தியது என்றே கூறலாம். அந்தக் கட்டத்திலிருந்தே பேச்சுவார்த்தை சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதற்கிடையில் இராஜதந்திர அணுகுமுறை தொடர்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமெரிக்க உப ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.
இதற்கு ‘‘எந்தவகையான இராஜதந்திரம் பற்றி நீங்கள் பேசுகின்றீர்கள் ஜே.டி.’’ என்று செலன்ஸ்கி கேள்வி எழுப்பினார். இதனையடுத்தே இந்த சர்ச்சை நிலை முற்றியது. அதனை தொடர்ந்து தர்க்கம் தீவிரமடைந்தது. உக்ரேன் ஜனாதிபதி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.
இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து நடைபெறவிருந்த விருந்துபசாரம் மற்றும் கனியவள ஒப்பந்த கைச்சாத்திடல் ஆகியவற்றை தவிர்த்து உக்ரேன் ஜனாதிபதி வெளியேறினார்.
அவர் அங்கிருந்து நேரடியாக பிரிட்டன் பறந்தார். பிரிட்டனில் செலன்ஸ்கிக்கு மரியாதை வழங்கப்பட்டது. அவர் பிரிட்டிஷ் அரசரையும் சந்தித்தார். மேலும் பிரிட்டன் பிரதமர் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அழைத்து ஒரு மாநாட்டையும் நடத்தி உக்ரேனுக்கான ஆதரவை வெளிப்படுத்தி னார்.
இதனையடுத்து அமெரிக்கா தற்போது உக்ரேனுக்கான பாதுகாப்பு உதவிகளை நிறுத்தியிருக்கிறது. எனவே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதே முக்கியமாகும்.
அமெரிக்காவின் உதவியின்றி உக்ரேனினால் ரஷ்யாவுடன் போரை நடத்த முடியுமா? ஐரோப்பிய நாடுகள் அந்தளவுக்கு உக்ரேனுக்கு உதவி செய்யுமா? ஐரோப்பிய நாடுகளிடம் அந்தளவுக்கு நிதி வசதி இருக்கிறதா போன்ற கேள்விகள் எழுகின்றன.
மறுபுறம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் நடைபெறுகின்ற இந்த புதிய சர்ச்சை மற்றும் நகர்வுகளை ஒருவர் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.
எனினும் இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், கடந்த 80 வருட காலமாக (02ஆவது உலக யுத்தத்துக்குப் பின்னர்) அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த மிக நெருங்கிய நட்பு மற்றும் உறவுகளில் விரிசல் நிலை ஏற்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு விவகாரம் மற்றும் பொருளாதார விடயம், தீர்வைகள் விதிப்பு போன்றவற்றில் நன்றாக இந்த விடயம் தெரிகிறது. அதேபோன்று தற்போது உக்ரேன் விடயத்திலும் அமெரிக்காவின் ஐரோப்பாவுடனான புதிய முறுகல் நிலை களே வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன.
எனவே 80 வருடங்களின் பின்னர் தற்போது உலகளவில் பாரிய அணுகுமுறை மாற்றம் ஒன்று நடைபெறுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இது அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் அட்லாண்டிக்கில் பிளவை ஏற்படுத்துவதாக தெரிகிறது.
மறுபுறம் ஐரோப்பிய நாடுகள் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் கைகோர்க்கும் சாத்தியமும் தெரிகிறது. அடுத்தடுத்த வாரங்களில் புதிய புதிய திருப்பங்கள் உலக நிலைமைகளில் ஏற்படலாம். பொறுத்திருந்து பார்க்கலாம்.
-ரொபட் அன்டனி-