குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று (07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு வாயு நிரப்புவதற்காக வந்த லொறி ஒன்றுக்கு வாயு நிரப்பும் போது, 6,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாயு தொட்டிகளில் ஒன்று வெடித்ததால் இந்த தீ ஏற்பட்டுள்ளது.

வெடிக்காத மற்றொரு 6,000 லீற்றர் வாயு தொட்டியை மாநகர சபை ஊழியர்கள் மிகுந்த முயற்சியுடன் மூடியதால், ஏற்படவிருந்த பாரிய சேதம் ஓரளவு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version