கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களை நாயைப் போல கழுத்தில் கயிறு கட்டி, தரையில் மண்டியிட்டு வரச் செய்ததாக வைரலாகப் பரவிய காணொளி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பரப்பிய நபர் மீது அதே நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பெரும்பாவூர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம், அங்கு பணியாற்றும் ஊழியர்களில் தினசரி விற்பனை இலக்கை எட்டாத ஊழியர்களை நாயைப் போல கயிறு கட்டி தண்டனை தருவதாக அங்குள்ள உள்ளூர் காட்சி ஊடகங்களில் ஒரு காணொளி வெளியானது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ள கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி தருவதாக கூறியுள்ளார். தொழிலாளர் நலத்துறை அதிகாரியிடம் இதுகுறித்து அறிக்கை கேட்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பு நடவடிக்கை குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.