100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்மரம் ஒன்றுக்காக ரூ. 1 கோடியை மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மத்திய ரயில்வே செலுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, ரயில்வே ரூ. 1 கோடியை செலுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயி, இந்த பணத்தில் இருந்து பாதியை அதாவது ரூ. 50 லட்சத்தை எடுத்துக் கொள்ளவும் ஏப்ரல் 9-ஆம் தேதி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
செம்மரம் ஒன்றுக்காக விவசாயி ஒருவர் இழப்பீடு பெற்றது எப்படி? நடந்தது என்ன? இங்கே பார்க்கலாம்!
உண்மையில் நடந்தது என்ன?
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ளது கர்ஷி என்ற கிராமம். இங்கே தன்னுடைய ஐந்து மகன்களோடு வாழ்ந்து வருகிறார் விவசாயி கேசவ் ஷிண்டே. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி அன்று செம்மரம் ஒன்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
விளம்பரம்
கர்ஷி கிராமத்தில் அவருக்கு 2.29 ஹெக்டர் நிலம் சொந்தமாக உள்ளது. வர்தா – யவத்மால் – புசத் – நந்தெத் ரயில் பாதை அவருடைய நிலத்தின் ஊடாக செல்கிறது.
இந்த திட்டத்திற்காக மத்திய ரயில்வே அவருடைய நிலத்தை கையகப்படுத்தியது. நிலத்திற்கான இழப்பீட்டை ஷிண்டே பெற்றார். கையகப்படுத்த வந்த அதிகாரிகளிடம், அவருடைய நிலத்தில் இருக்கும் செம்மரத்திற்கும் இழப்பீடு வேண்டும் என்று கேட்டார்.
அவருடைய நிலத்தில் இருந்த யேனா மற்றும் கருங்காலி மரத்திற்கும், நிலத்திற்கு அடியே இணைக்கப்பட்டுள்ள பைப்புகளுக்கும் இழப்பீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் ஷிண்டே.
அதற்கு அதிகாரிகள், முதலில் செம்மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். வனத்துறை அந்த ஆய்வை நடத்த வேண்டும் என்று கூறி கடிதம் ஒன்றையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.
கேசவ் ஷிண்டேவின் மகனும் இந்த வழக்கின் மனுதாரருமான பஞ்சாப் ஷிண்டே அளித்த தகவலின் படி, அந்த நிலத்தில் இருந்த மா உள்ளிட்ட சில மரங்களுக்கான இழப்பீட்டை ஷிண்டே பெற்றுள்ளார்.
அங்கே இருந்த கிணறுக்காக ரூ. 8 லட்சம் வரை இழப்பீட்டைப் பெற்றதாக தெரிவிக்கும் பஞ்சாப் ஷிண்டே, செம்மரம் உள்ளிட்ட இதர மரங்களுக்கும், பைப் இணைப்புகளுக்கும் இழப்பீடு அப்போது வழங்கப்படவில்லை என்று கூறுகிறார்.
இது தொடர்பாக அவர் 2014-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர், ரயில்வே, நீர்பாசனத்துறை உள்ளிட்ட பல துறைகளிடம் மனு கொடுத்திருக்கிறார்.
“இருப்பினும் எங்களுக்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து நாங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு உயர் நீதிமன்றத்தை அணுகினோம்,” என்று கூறுகிறார் பஞ்சாப் ஷிண்டே.
செம்மரத்தை மதிப்பாய்வு செய்த பிறகு இழப்பீடு அதிகரிக்குமா?
நீதிமன்றத்தை அணுகிய ஒரே வருடத்தில் இழப்பீட்டைப் பெற்றனர் ஷிண்டேவின் குடும்பத்தினர். இருப்பினும் அவருடைய நிலத்தில் இருக்கும் செம்மரத்தின் மதிப்பு இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.
மரத்தின் மதிப்பு ஆய்வு செய்யப்படுவதற்கு முன்பாக ரூ. 1 கோடியை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி பணமும் வழங்கப்பட்டுவிட்டது.
ஆனால் மரத்தின் மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் அதன் மதிப்பு ரூ. 5 கோடி வரை செல்லலாம் என்று என்று ஷிண்டேவின் வழக்கறிஞர் அஞ்சனா ராவத் நர்வதே பிபிசி மராத்தியிடம் தெரிவிக்கிறார்.
வனத்துறை அதிகாரிகள் மற்றும் இதர துறை அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்படும். அதன் பிறகே, நிலத்தில் இருக்கும் மரத்தின் மதிப்பை எப்படி ஆய்வு செய்வது என்பது முடிவு செய்யப்படும். அதன் மதிப்பைப் பொருத்து மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
மதிப்பீடு செய்வதில் உள்ள சிக்கல் காரணமாகவே இழப்பீட்டை வழங்கவில்லை என்று ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜா சௌபே கூறுகிறார்.
“உயிருடன், அந்த நிலத்தில் நிற்கும் மரத்தின் மதிப்பை எப்படி ஆய்வு செய்வது? ஆய்வு செய்யாமல் எப்படி இழப்பீட்டை வழங்குவது? இந்த காரணங்களால் தான் இழப்பீட்டை ரயில்வே வழங்கவில்லை. இப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரூ. 1 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது ரயில்வே. இது செம்மரத்திற்கான இழப்பீடு மட்டுமே,” என்று பிபிசி மராத்தியிடம் பேசும் போது அவர் தெரிவித்தார்.
செம்மரத்தின் விலை தொடராக ஆந்திர பிரதேசத்தில் உள்ளவர்களிடம் பேசியதாக தெரிவிக்கிறார் ஷிண்டே. தனியார் பொறியாளர் ஒருவரை வைத்து செம்மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ததாகவும் அவர் கூறுகிறார்.
ஷிண்டேவின் கருத்துப்படி, இந்த மரம் ரூ. 4 கோடி 94 லட்சம் மதிப்புடையது. நிலத்தை கையகப்படுத்திய காலம் முதல் இந்த நாள் வரையில், இந்த மதிப்பிற்கான வட்டியையும் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டுள்ளார்.
நிலத்திற்கு அடியே பதிக்கப்பட்டுள்ள பைப் மற்றும் இதர மரங்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கான இழப்பீட்டையும் விரைந்து வழங்க வேண்டும் என்று ஷிண்டேவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
செம்மரத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டைப் பெற்ற விவசாயி, மகாராஷ்டிரா செய்திகள், மும்பை, பம்பாய் உயர் நீதிமன்றம்
செம்மரம் இருப்பது தெரியவந்தது எப்படி?
கேசவிற்கு இப்போது வயது 94. அவருடைய மகன்கள் அனைவருக்கும் வயது 50-ஐ தாண்டிவிட்டது. அவருடைய குடும்பத்தினர் உதவியுடன்தான் இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் கேசவ். அவருடைய நிலத்தில்தான் ரயில் நிலையம் அமைய உள்ளது என்பதால் அவருடைய பெரும்பான்மை நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அவருடைய நிலத்தில் மா மற்றும் இதர மரங்கள் பயிரப்பட்டிருந்தன. ஆனால் அங்கே செம்மரம் ஒன்று இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. ரயில்வே திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் போதுதான் அவர்களுடைய நிலத்தில் செம்மரம் இருந்தது தெரிய வந்தது. ரயில்வே நிர்வாகம் அந்த மரத்தை அடையாளப்படுத்த உதவியது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பஞ்சாப் ஷிண்டே அளித்த தகவலின் படி, நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பே சில ரயில்வே ஊழியர்கள் வந்து நிலத்தை அளவிட்டுள்ளனர். அவர்கள் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூலமாகவே அந்த மரம் செம்மரம் என்பதை ஷிண்டேவின் குடும்பத்தினர் அறிந்துள்ளனர்.
அவர்களின் நிலத்தில் அப்படி ஒரு மரம் இத்தனை ஆண்டுகள் இருந்தது என்பதை அவர்களால் நம்பவே இயலவில்லை. செம்மரம் உண்மையாகவே பார்க்க எப்படி இருக்கும் என்று அவர்கள் யுடியூப் வீடியோக்களை பார்வையிட்டுள்ளனர்.
இதில் அனுபவம் உள்ள ஆட்களிடம் மரம் குறித்து விசாரித்த போதுதான் இந்த மரம் செம்மரம் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். எனவேதான் நிலம் கையகப்படுத்தப்படும் போது, செம்மரத்திற்கும் இழப்பீடு வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.
“ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம்,” என்று ஷிண்டே தெரிவிக்கிறார்.
உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரூ. 1 கோடி அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 50 லட்சத்தை எடுக்க அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம். தற்போது மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதிப்பாய்வு முடிந்த பிறகு, செம்மரத்தின் மதிப்பைப் பொறுத்து அதற்கான இழப்பீட்டை ஷிண்டேவின் குடும்பம் பெறும்.
ரூ. 1 கோடி இழப்பீடு பெறப்பட்டது குறித்து ஷிண்டே கூறியது என்ன?
“நாங்கள் எதிர்பார்த்த இழப்பீடு எங்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வந்த பின், மரத்தின் மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிறகு முறையான இழப்பீடு கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்களுக்கு நியாயமான முறையில் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை,” என்று பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார் பஞ்சாப் ஷிண்டே.
பஞ்சாப் ஷிண்டே பொதுத்துறையில் பணியாற்றியவர். பணி ஓய்வு பெற்ற பிறகு கிடைத்த ஓய்வூதியம் அனைத்தையும் இந்த வழக்கிற்காக செலவிட்டதாக அவர் தெரிவிக்கிறார். தற்போது ஷிண்டேவின் நிலத்தில் ரயில்வே பாதைக்கான பணிகள், வழக்கு காரணமாக தாமதம் அடைந்துள்ளது.
செம்மரம் என்றால் என்ன? அதன் மதிப்பு ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது?
சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில், சேஷாசலம் மலைத்தொடரில் செம்மரங்கள் அதிகமாக காணப்படுகிறது
தமிழ்நாடு – ஆந்திரபிரதேசம் எல்லையில் அமைந்துள்ள சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் செம்மரங்கள் அதிகமாக காணப்படுகிறது.
ஐந்து லட்சம் சதுர ஹெக்டர் பரப்பில் உள்ள செம்மரங்களின் சராசரி உயரமானது 8 முதல் 11 மீட்டர்கள் ஆகும். இது மிகவும் மெதுவாக வளரக் கூடியது. அதனால்தான் இது மிகவும் அடர்த்தியான மரமாக உள்ளது.
சீனா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இந்த மரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.