;இந்தியா – பாகிஸ்தான் போர், எல்லையில் ஓய்ந்துவிட்டது. ஆனால் இந்திய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பிரசார யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கிறது!

இந்தியா அறிவிப்பதற்கு முன்பே, போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததையொட்டி, பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திய இறையாண்மையை அவர் விட்டுக்கொடுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட முறைமீது, அவரின் ஆதரவாளர்களே அதிருப்தியடைந்திருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையும்கூட அவரது அரசின்மீதான விமர்சனங்களை நிறுத்தவில்லை..

அவர் பேசியதைக் காட்டிலும், பேசாமல் விட்டவையே ஊடகங்களில் அதிகமும் பேசுபொருளாகின.

‘ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது…’ என்ற அறிவிப்போ, ‘சிந்து நதி ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டதில் மாற்றமில்லை’ என்ற அறிவிப்போ… பிரதமர் மோடியின் பிம்பத்தில் ஏற்பட்டிருக்கும் உடைப்பை மறைக்கப் போதுமானதாக இல்லை.

அமெரிக்க அதிபரின் அடுத்தடுத்த அறிவிப்புகள்… அதிலும் குறிப்பாக, போர் நிறுத்தத்துக்கு வர்த்தகத்தைக் காரணமாகக் காட்டியதும், காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியதும் பிரதமர் மோடியின் பிம்பத்தைப் பெருமளவில் சேதப்படுத்திவிட்டன.

போருக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்த காங்கிரஸ் கட்சியும், மற்ற எதிர்க்கட்சிகளும் பிரதமரை விமர்சிக்க அதுவே காரணமாகிவிட்டது.

நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டன.

தேசத்தைப் பலவீனப்படுத்திய ‘தேசபக்தி’!

போரை தமது பிரசாரத்துக்குச் சார்பாக மாற்ற முடியாமல் தோற்றுப்போன மோடி ஆதரவு சங்கப் பரிவாரங்கள், என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்தன.

போர் நிறுத்தம் செய்ததற்கு யாரையாவது பலி கொடுக்க வேண்டும் என்று தேடி, வெளியுறவுத்துறைச் செயலாளர் திரு விக்ரம் மிஸ்ரி அவர்கள் மீதே பாய்ந்தன.

அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் அவை விட்டுவைக்கவில்லை. போரின்போது அதைப் பற்றி ஊடகங்களுக்குத் தெரிவிப்பதற்கென நியமிக்கப்பட்டிருந்த ராணுவ அதிகாரி சோபியா குரோஷியும் இலக்கு தவறிய இந்த வெறுப்புப் பிரசாரத்துக்குத் தப்பவில்லை.

மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் ஒருவர், அவரை பயங்கரவாதிகளோடு இணைத்து வசை பாடியது,

இப்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறது. தனது பலவீனத்தை மறைப்பதற்கு வழி தெரியாத மோடி அரசு துருக்கி, சீன அரசுகளின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்கியதாக அறிவித்தது.

அதுவும்கூட சில மணி நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. பா.ஜ.க அரசின் இந்தத் தடுமாற்றங்கள், விமர்சனத்துக்கு ஆளாவதைக் கடந்து, இப்போது ‘மீம்ஸ் ’களுக்குத் தீனியாகி வருகின்றன.

பாகிஸ்தான் ராணுவம், துருக்கி நாட்டில் தயாரிக் கப்பட்ட டிரோன் களைப் பயன்படுத்தியதைக் காரணம் காட்டி, “துருக்கி நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். துருக்கி நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும். விமானப் பயணங்களை ரத்துசெய்ய வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச், அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது.

இன்னொரு பக்கம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ‘துருக்கி நாட்டுப் பல்கலைக்கழகங்களோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டதாக’ அறிவித்திருக்கிறது.

சுதேசி ஜாக்ரன் மஞ்ச்சின் அறிவிப்பு, “பாகிஸ்தான் அனுப்பிய டிரோன்களை வெற்றிகரமாக அழித்துவிட்டோம்” என்ற இந்திய ராணுவத்தின் கூற்றை மறுப்பதாகவும், இந்தியாவுக்கு அவற்றால் பாதிப்பு நேர்ந்தது என்று ஒப்புக்கொள்வதாகவும் இருக்கிறது.

`தேசபக்தி’ என்கிற பெயரில், சுதேசி ஜாக்ரன் மஞ்ச் முன்வைத்திருக்கும் யோசனை, இந்தியாவைப் பலவீனப்படுத்துவதற்கே காரணமாகியிருக்கிறது.

துருக்கியா?… சீனாவா?

உலகில் எந்தவொரு நாடும் தனது சொந்த நாட்டில் தயாரித்த ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்துவதில்லை. இந்தியாவும் அப்படித்தான்.

இந்திய ராணுவம் பயன்படுத்துகிற விமானங்கள், எறிகணைகள், துப்பாக்கிகள் பெரும்பாலும் அயல்நாடுகளிலிருந்து வாங்கப்படுபவைதான்.

பாகிஸ்தானும் அப்படித்தான் அயல்நாட்டு ஆயுதங்களை வாங்கியிருக்கிறது.

China’s J-10C

தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய பாகிஸ்தான் போரில், ‘இந்தியத் தரப்புக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியவை, சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே 10-சி என்கிற போர் விமானமும், அதில் பயன்படுத்தப்பட்ட பிஎல் 15 என்கிற ஏவுகணையும்தான்’ என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Rafale fighters

பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா அதிக விலை கொடுத்து வாங்கிய இரண்டு ரஃபேல் விமானங்கள் இந்தப் போரின்போது சீனா தயாரிப்பான ஜே 10-சி விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

அதை இந்தியத் தரப்பும் மறுக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவம் அதிக எண்ணிக்கையில் டிரோன்களைப் பயன்படுத்தியது உண்மைதான் என்றாலும், அவற்றால் ஏற்பட்ட பாதிப்பைவிட சீனத் தயாரிப்பு விமானங்களாலும் எறிகணைகளாலும் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளே அதிகம் எனக் கூறப்படுகிறது.

அவ்வாறிருக்கும்போது, பாகிஸ்தான் ராணுவம் துருக்கி நாட்டைச் சேர்ந்த டிரோன்களைப் பயன்படுத்தியது என்பதற்காக, துருக்கி நாட்டுப் பல்கலைக்கழகத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்வது வேடிக்கையாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச்சின் தர்க்கத்தின்படி பார்த்தால், சங்கப் பரிவாரங்களின் கோபம் சீனாவுக்கு எதிராகத்தான் திரும்பியிருக்க வேண்டும்.

அதற்குத்தான் வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளை சீனா ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது.

ஆனால் மோடி அரசோ, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அதை மூடி மறைத்து வருகிறது. பாகிஸ்தானோடு போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில்கூட, சீனா அருணாச்சலப் பிரதேசத்திலிருக்கும் ஊர்களின் பெயர்களைச் சீன மொழியில் மாற்றி, இந்தியாவைச் சீண்டுகிறது.

இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததைப் பற்றி மௌனம் காக்கும் மோடி அரசும், சங்கப் பரிவாரங்களும் இப்போதும்கூட சீனாவை எதிர்க்காமல் துருக்கியை எதிர்ப்பது அவர்களின் உள்ளார்ந்த இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்பாடே ஆகும்.

இது தேசபக்தி அல்ல, வெறுப்பு அரசியல்.வெளியுறவுக் கொள்கையின் தோல்வி!

ஒரு போரின் வெற்றி, தோல்வி என்பது ராணுவங்களுக்கு இடையிலான மோதல்களில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை.

சர்வதேச அரங்கில் ஒரு நாடு பெறுகிற ஆதரவு அல்லது கண்டனம் என்பதும்கூட ஒரு போரின் வெற்றி, தோல்வியை மதிப்பிடுவதற்கான காரணியாக இருக்கிறது.

அந்த வகையில் பார்த்தால், இந்தப் போரின்போது சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தி லிருந்து இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்ததும், இந்திய ராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்களில் பெருமள விலான வற்றை சப்ளை செய்வதுமான ரஷ்யா,

இந்தப் போரின்போது இந்தியாவுக்கு ஆதரவாக எந்தவோர் உறுதியான நடவடிக் கையையும் எடுக்கவில்லை.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் இடையே இருக்கும் நெருக்கமும் இதுவரை இருந்துவந்த ரஷ்யா எதிர் அமெரிக்கா என்ற முரண் நிலையை மாற்றிவிட்டன.

இதைப் புரிந்துகொண்டு, யுத்த தந்திரரீதியில் இந்தியா தனக்கான ஆதரவைக் கட்டியமைத்திருக்க வேண்டும். அதைச் செய்ய மோடி அரசு தவறிவிட்டது.

இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையில், மோடி அரசு கண்டுபிடித்த புதிய கூட்டாளியான இஸ்ரேலும்கூட இந்தப் போரின்போது சம்பிரதாயமான ஓர் ஆதரவையே தெரிவித்தது.

சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டு நிற்கிறது என்ற அவலநிலையை இந்தப் போர் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இதை மாற்றுவதற்கு முனைப்பாகச் செயல்பட்டிருக்கவேண்டிய வெளியுறவுத்துறை அமைச்சர் களத்தில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை. அவரது துணை அமைச்சர்போல சசி தரூர்தான் பேசிக்கொண்டிருக்கிறார்.

பாசிசத்தால் ஏற்பட்ட பலவீனம்!

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசைப் பற்றிய சர்வதேச மதிப்பீட்டை, பிரதமர் மோடியும் பா.ஜ.க-வினரும் பலவீனப் படுத்திவிட்டார்கள்.

இந்தியாவுக்குள் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்மீது அவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வெறுப்பு அரசியல், இந்திய அரசைக் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்படுத்திவிட்டது.

உள்நாட்டில் மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான், அயல்நாட்டினர் நம்மை எதிர்ப்பதற்கு அஞ்சுவார்கள்.

மோடி அரசாங்கத்தினுடைய மதவாத பாசிச அரசியல், இந்திய மக்களிடையே ஒற்றுமையைச் சீர்குலைத்துவிட்டது.

அது வெளிநாடுகள் நம்மை பலவீனமான நாடாகக் கருதுவதற்கு வழிவகுத்துவிட்டது. இந்த இஸ்லாமிய வெறுப்பு அரசியல் காரணமாக, நீண்டகாலமாகப் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்த நிலையை மாற்றி, இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மோடி அரசு எடுத்தது.

அதனால், இந்தியாவை நட்போடு பார்த்துவந்த இஸ்லாமிய நாடுகள், எதிராகப் பார்க்கத் தொடங்கின.

அதன் தொடர்ச்சியாகவே, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, முன்னெப்போதும் இல்லாதவிதமாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, இந்தியாவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது.

இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்து, நமது இறையாண்மைக்குச் சவால்விடுகிற சீனாவுக்கு எதிராக வாய் திறக்காமலும், உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்காமலும் மோடி அரசு கடைப்பிடித்துவந்த மௌனம், அதன் சரணாகதிப் போக்குக்குச் சாட்சியமாக அமைந்துவிட்டது.

அது பாகிஸ்தான் மட்டுமல்ல, அமெரிக்காவும் இந்தியாவை இளக்காரமாகப் பார்ப்பதற்கு வழிவகுத்துவிட்டது.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியக் குடிமக்களை, கை கால்களில் விலங்கு பூட்டி அமெரிக்க அரசு திருப்பி அனுப்பியது.

மோடி அரசு அதை எதிர்த்து பேசவில்லை. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு எதிராக 26% வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.

அப்போதும்கூட மோடி அரசு எந்தவோர் எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாகவே இப்போது போர் நிறுத்தத்தை ட்ரம்ப் முதலில் அறிவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இது, இந்தியாவின் இறையாண்மை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இந்திய அரசமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசுகிற நேரத்தில் (25.11.1949), ‘இந்தியர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு மேலாக நாட்டைக் கருதப்போகிறார்களா அல்லது நாட்டைவிட மத நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார்களா?’ என்ற கேள்வியை எழுப்பினார் டாக்டர் அம்பேத்கர்.

“நாட்டைவிட தங்கள் மதக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நமது சுதந்திரத்துக்கு இரண்டாவது முறையாக ஆபத்து என்பதுடன், என்றென்றைக்குமாக நமது சுதந்திரத்தை இழப்பது நிச்சயம்” என்றும் அவர் எச்சரித்தார்.

அம்பேத்கரின் எச்சரிக்கை இப்போது பொருத்தமாக இருக்கிறது. இந்திய ஆட்சியாளர்கள் மதவாத வெறுப்பு அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கப்போகிறார்களா… அல்லது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கப்போகிறார்களா’?

 

Share.
Leave A Reply

Exit mobile version