தமி­ழ­ரசுக் கட்­சியின் இப்­போ­தைய நிலையை பற்றி குறிப்­பிட்ட ஒருவர், முள்ளில் விழுந்த சேலை­யுடன் ஒப்­பீடு செய்­தி­ருந்தார்.

அது சரி­யா­னதே என்­பதை, அண்­மையில் அந்த கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருக்­கின்ற சல­ச­லப்­புகள் உணர்த்­து­கின்­றன.

ஜனா­தி­பதி தேர்தல் அறி­விப்­புக்குப் பின்னர், பொது­வேட்­பாளர் விவ­கா­ரத்தில் தொடங்­கிய தமி­ழ­ரசுக் கட்­சியின் உள்­ளக முரண்­பா­டுகள், பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போதும், உள்­ளூ­ராட்சி தேர்­தலின் போதும், பகி­ரங்­க­மாக வெளிப்­பட்­டது.

ஒப்­பீட்­ட­ளவில் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போது, இருந்த சூழலை விட, உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் முரண்­பா­டுகள் குறை­வாக இருந்­தன.

அதற்கு முக்­கி­ய­மான காரணம், திடீ­ரென பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வீங்கி வெடித்த, தேசிய மக்கள் சக்­தியின் செல்­வாக்கு தான்.

அந்தக் கட்­சிக்கு கிடைத்த ஆச­னங்கள், தமி­ழ­ரசுக் கட்­சியை மாத்­தி­ர­மன்றி, ஒட்­டு­மொத்த தமிழ்த் தேசிய கட்­சி­க­ளையும் தட்டி எழுப்­பி­யி­ருந்­தது.

தேசிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பெற்ற வெற்­றியை தொடர்ந்து, தமி­ழர்­களின் உணர்­வு­களை சீண்டிப் பார்த்து, தன் பெயரைக் கெடுத்துக் கொண்­டது.

தேசிய மக்கள் சக்தி ஏற்­ப­டுத்­திய இந்த உணர்­வு­பூர்­வ­மான பிரச்­சினை கார­ண­மாக, தமி­ழ­ரசுக் கட்­சிக்குள் இருந்த முரண்­பா­டுகள், அதி­க­ளவில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அதற்குப் பதி­லாக, தேசிய மக்கள் சக்­திக்கு பாடம் கற்­பிக்க வேண்டும் என்­பதே முக்­கிய நோக்­க­மாக இருந்­தது.

உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தமி­ழ­ரசுக் கட்­சிக்கு மூன்று இலட்­சத்­திற்கு அதி­க­மான வாக்­கு­களும், 300 இற்கும் அதி­க­மான ஆச­னங்­களும் கிடைத்­தமை அந்தக் கட்­சிக்கு ஒரு பலத்தைக் ஏற்­ப­டுத்­தி­யது.

அதன் அடிப்­ப­டையில் இப்­பொ­ழுது அடுத்த சுற்று உள்­ளக முரண்­பா­டுகள் தலை­தூக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக தாமே கள­மி­றங்கப் போவ­தாக, சுமந்­திரன் அறி­வித்­ததும், சுமந்­தி­ரனை தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ராக தான் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்று சிறி­தரன் அறி­வித்­ததும், அந்த கட்­சிக்குள் இருக்­கின்ற முரண்­பா­டுகள், இன்­னமும் கொதி­நி­லை­யி­லேயே இருக்­கின்­றன என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஊடகச் சந்­திப்பு ஒன்றில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்த போதே, சுமந்­திரன் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் வேட்­பாளர் பத­விக்கு தான் போட்­டி­யிட இருப்­ப­தாக கூறி­யி­ருந்தார்.

சிறி­தரன் அந்த பத­விக்கு போட்­டி­யிட மாட்டேன் என்று அறி­வித்­தி­ருக்­கின்ற நிலையில், தான் அதற்குப் போட்­டி­யி­டுவேன் என அவர் கூறி­யி­ருந்தார்.

முன்­ன­தாக, சிறி­தரன் வடக்கு மாகாண முதல்வர் பத­விக்கு தான் போட்­டி­யிடப் போவ­தாக கூறி இருந்த போதும், கடந்த பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி­வுகள் வெளி­யான பின்னர் தாம் அப்­படி போட்­டி­யிடப் போவ­தில்லை என தெரி­வித்­தி­ருந்தார்.

ஏனென்றால், சிறி­த­ரனின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வறி­தானால், அது சுமந்­தி­ரனை நேர­டி­யா­கவே பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்பும்.

சிறி­தரன், வடக்கு மாகாண முதல்வர் பத­விக்கு போட்­டி­யிட முன்­வந்தால் சுமந்­தி­ர­னுக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை கொடுத்­தது போலாகி விடும்.

அப்­படி ஒரு வாய்ப்பை கொடுப்­பதை தவிர்ப்­ப­தற்கே, சிறி­தரன் தாம் முத­ல­மைச்சர் பத­விக்கு போட்­டி­யிடப் போவ­தில்லை எனக் கூறி­யி­ருந்தார்.

எட்­டாத பழம் புளிக்கும் என்ற நிலையில் சுமந்­திரன், எட்­டு­கின்ற பழத்­தை­யா­வது எட்டிப் பிடிப்போம் என்ற முடி­வுக்கு வந்­தி­ருக்­கிறார்.

சுமந்­தி­ரனின் அறி­விப்பு தொடர்­பாக, தொலைக்­காட்சி செவ்­வியில் கேள்வி எழுப்­பப்­பட்ட போது, மாவை சேனா­தி­ராஜா, துரை­ரா­ஜ­சிங்கம் போன்­ற­வர்கள் தோல்­வி­ய­டைந்­த­வர்கள் என்­பதால், போட்­டியில் நிறுத்­தப்­ப­டக்­கூ­டாது எனக் கூறிய சுமந்­திரன் மட்டும் முத­ல­மைச்சர் பதவி போட்­டி­யி­டு­வது சரியா என சிறி­தரன் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

இது சுமந்­திரன் அந்த பத­விக்கு போட்­டி­யி­டு­வதை சிறி­தரன் விரும்­ப­வில்லை என்­பதை வெளிக்­காட்டி இருக்­கி­றது.

அதே­போல, கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தெரிவு தொடர்­பான கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளித்த சிறி­தரன், சுமந்­தி­ரனை பொதுச்­செ­ய­லா­ள­ராக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்று கூறி­யி­ருந்தார். இது சுமந்­தி­ரனை கொதிப்­ப­டையச் செய்­தது.

அதன் உட­னடி விளை­வாக, கிளி­நொச்சி மாவட்­டத்தின் இரண்டு உள்­ளூ­ராட்சி சபை­களின் தவி­சாளர் மற்றும் உப­த­வி­சாளர் நிய­ம­னங்கள் தொடர்­பான, சிறி­த­ரனின் பரிந்­து­ரையை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு அனுப்­ப­மாட்டேன் என கட்­சியின் பதில்­செ­ய­லா­ள­ரான சுமந்­திரன் கூறி­யி­ருந்தார்.

சுமந்­தி­ரனின் அந்த நிலைப்­பாடு அவ­ச­ரத்­த­ன­மாக எடுக்­கப்­பட்­டது, ஆத்­தி­ரத்தில் எடுக்­கப்­பட்­டது.

எனினும், கட்­சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவ­ஞானம் தலை­யிட்டு, அந்த கடி­தத்தை அனுப்பி வைக்க ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

அவ்­வாறு சுமந்­திரன் தனது கையெ­ழுத்­துடன் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு கடிதம் அனுப்­பாமல் போயி­ருந்தால், குறித்த இரண்டு பிர­தேச சபை­களின் தலைவர் நிய­ம­னங்கள் இழு­ப­றிக்­குள்­ளா­கி­யி­ருக்கும்.

அது கட்­சிக்குள் முரண்­பாட்டை இன்னும் மோச­மான கட்­டத்தை நோக்கி நகர்த்­தி­யி­ருக்கும்.

ஏனென்றால், உள்­ளூ­ராட்சி சபை­களில் கிளி­நொச்சி மாவட்­டத்தில் தமி­ழ­ரசுக் கட்சி பெற்ற வெற்றி, சிறி­த­ரனின் முயற்­சி­யினால் பெறப்­பட்ட ஒன்று.

சிறி­த­ரனை பழி­வாங்கும் நோக்கில் சுமந்­திரன் அவ்­வாறு நடந்து கொண்­டி­ருப்­பா­ரே­யானால், கிளி­நொச்­சியில் உள்ள தமி­ழ­ரசுக் கட்சி ஆத­ர­வா­ளர்கள், வாக்­கா­ளர்­க­ளுக்கும், சுமந்­தி­ர­னுக்கும் இடை­யி­லான இடை­வெளி, மேலும் அதி­க­ரிக்கும் நிலை ஏற்­பட்­டி­ருக்கும்.

அது சிறி­த­ரனை அங்கு இன்­னமும் பலப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்கும்.

சுமந்­திரன் அதனை உணர்ந்து கொண்டோ, அல்­லது சி.வி.கேயின் தலை­யீட்­டுக்குப் பின்­னரோ, தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு கடிதம் அனுப்ப எடுத்த முடிவு, இந்த சிக்­கலில் இருந்து அவரை காப்­பாற்­றி­யி­ருக்­கி­றது.

இந்த விவ­கா­ரத்தில் இரண்டு தரப்­புக்­களும் முரண்­பா­டு­களை வளர்ப்­ப­தி­லேயே சிரத்தை காண்­பிக்­கின்­றன.

முத­ல­மைச்சர் பதவி தொடர்­பான கேள்வி தொடுக்­கப்­பட்ட போது, இப்­பொ­ழுது மாகாண சபை தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் இல்லை, தேர்தல் வரும்­போது அதனைப் பற்றி பார்த்துக் கொள்வோம் என, சுமந்­திரன் கூறி­யி­ருந்­தால்­ அது பக்­கு­வ­மா­ன­தாக இருந்­தி­ருக்கும்.

இப்­பொ­ழுது சி.வி.கே. சிவ­ஞானம் அப்­ப­டித்தான் கூறி சமா­ளித்­தி­ருக்­கிறார்.

அதே­போல, பொதுச்­செ­ய­லாளர் பற்­றிய கேள்வி வந்­த­போது, சிறி­தரன் தான் ஏற்றுக் கொள்­ளாது போயி­ருந்­தாலும், கட்­சியின் பதில் பொதுச் செய­லா­ள­ராக சுமந்­திரன் பணி­யாற்­று­கிறார் என்­பதை அவர் உறுதி செய்­தி­ருக்க வேண்டும்.

உள்­ளூ­ராட்சி தேர்­தலில், சுமந்­திரன் போட்ட கையெ­ழுத்­துடன் தான், வேட்­பு­ம­னுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டன. சிறி­தரனால் அதனை தவிர்க்க முடி­ய­வில்லை.

சுமந்­தி­ரனின் கட்­டுப்­பாட்­டி­லேயே இன்று தமி­ழ­ரசுக் கட்சி இருக்­கி­றது என்­பது அப்­பட்­ட­மான உண்மை.

இதனை விளங்கிக் கொண்டு சிறி­தரன் செயற்­பட்­டி­ருக்க வேண்டும்.

அவர் கட்­சியை சிக்­கலில் இருந்து மீட்கக் கூடிய நிலை­யிலும் இல்லை, அதே­வேளை அவர் கட்­சியை சுமந்­தி­ரனின் கட்­டுப்­பாட்டில் முழு­மை­யாக விட்டு விடவும் தயா­ராக இல்லை.

சுமந்­தி­ரனை பொறுத்­த­வ­ரையில், தமி­ழ­ரசுக் கட்­சியை முற்று முழு­தாக தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­ப­தற்கு முயற்­சிக்­கிறார்.

அதில் அவர் பெரு­ம­ளவில் வெற்­றியும் பெற்­றி­ருக்­கிறார்.

இவ்­வா­றான நிலையில், கட்­சியை சிக்­க­லுக்குள் இருந்து வெளியே கொண்டு வரு­வ­தற்கு ஏற்ற சூழல் ஏதும் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

ஏனென்றால் கட்சியில் இவர்கள் இருவர் மீதும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய எவரும் இன்று இல்லை.

கட்சியின் மூத்த தலைவர்கள் என கூறக் கூடியவர்கள் பலர் இருந்தாலும்- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்சிக்குள் வந்த இவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள்.

சம்பந்தன் போன்ற ஒருவர் இன்று தமிழரசுக் கட்சிக்கு தேவைப்பட்டாலும், அத்தகைய ஒருவர் இல்லாதது அந்தக் கட்சியின் மிகப்பெரிய பலவீனம்.

முள்ளில் விழுந்த சேலையை சேதம் இன்றி வெளியே எடுப்பது சிக்கலானது.

அப்படியானால் இன்னொரு வழி உள்ளது.

முட்களை அகற்றி விட்டு சேலையை பத்திரமாக எடுக்கலாம்.

இதில் எது எதனை செய்ய முயன்றாலும், அது தமிழரசுக் கட்சிக்கு சேதங்களையே ஏற்படுத்தும்.

ஏனென்றால், தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் முள்ளும் தேவை, சேலையும் தேவை.

-கபில்

Share.
Leave A Reply

Exit mobile version