அப்பா, தம்பி நாங்க இல்லையா.. உனக்கு நாங்க இல்லையா.. உனக்கு நாங்க இல்லையா. ஐயோ என் சாமி.. என் சாமி.. என் சாமி அம்மா சொல்லறேன் எந்திரி.. என் புள்ளைக்கு மூச்சு வருது.. எனக் கதறிய தாயின் வலி அனைவரையும் உலுக்கி உள்ளது.
ரிதன்யாவின் மரணத்துக்கு என்ன காரணம்? ரிதன்யாவின் திருமணம் வாழ்க்கையில் நடந்த சம்பவம்? ரிதன்யா தற்கொலை? போன்ற விவரங்களை பார்ப்போம்.
ரிதன்யாவின் திருமணம்?
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அண்ணாதுறையின் மகள் ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணனின் பேரன் கவின் குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் அவிநாசி பழங்கரையில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.
கொடுமைக்கு உள்ளான ரிதன்யா
திருமணத்திற்கு 300 சவரன் நகை போட்டுள்ளனர். கூடுதலாக 200 சவரன் கேட்டு கணவன் மற்றும் அவரது வீட்டார் கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த நிலையில், தாய் வீட்டிற்கு கடந்த வாரம் சென்றுள்ளார்.
கணவர் கவின் குமார் ரிதன்யாவுக்கு தினமும் டார்ச்சர் செய்துள்ளார். இதையெல்லாம் சொன்னால் அம்மா அப்பா கஷ்டப்படுவார்கள் என நினைத்து மனம் புழுங்கிய ரிதன்யா கடந்த சனிக்கிழமை பெற்றோரிடம் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு காரை எடுத்து கொண்டு கிளம்பினார்.
வாய்ஸ் மெசேஸ் அனுப்பிய ரிதன்யா
தாளக்கரை பெருமாள் கோயிலில் சாமி கும்பிட்ட பிறகு மொண்டிபாளையம் பெருமாள் கோயிலுக்கு புறப்பட்டார்.
வழியில் என்ன நினைத்தாரோ செட்டிபுதூரில் ஒரு தோட்டத்தின் அருகே காரை நிறுத்தினார். கணவன் கவின் குமார் டார்ச்சர் செய்வது பற்றியும், மாமனார், மாமியார் துன்புறுத்தல் பற்றியும் கதறி கதறி அழுதபடி வாய்ஸ் மெசேஜை பதிவு செய்து அப்பாவிற்கு அனுப்பினார்.
ரிதன்யா வாய்ஸ் மெசேஸின் முக்கிய அம்சம்
அதில், போலீசோ வேற யாராச்சும் வந்து ஏதாவது சொன்னா நீங்க யாருக்காகவும் தலைக்குளிய வேண்டாம். இத போட்டு காமிச்சிருங்க. ஏன்னா அவங்க இதுதான் சாக்குன்னு உங்களை இன்னும் அசிங்கப்படுத்த நினைப்பாங்க. என்னோட இந்த முடிவுக்கு என்னோட திருமண வாழ்க்கைதான். உண்மையான காரணமே அவங்களும் அவங்க குடும்பமும் தான்.
போதும் உடல் ரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சுட்டேன், மனரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சுட்டேன்.
எனக்கு இந்த லைப் வேண்டாம். அவங்க மாற மாட்டாங்க. என்னோட இந்த முடிவுக்கு கவினும், ஈஸ்வரமூர்த்தியும், சித்ராதேவியும் தான் காரணம். என் கல்யாண வாழ்க்கையே மோசமா போயிருச்சு. என்னை மன்னிச்சிருங்கப்பா என்னை மன்னிச்சிருங்கம்மா காரில் உட்கார்ந்தபடியே தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்துவிட்டார்.
தற்கொலை செய்துக்கொண்ட ரிதன்யா
தோட்டத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண் நீண்ட நேரம் கார் நிற்பதை பார்த்து உள்ளே எட்டி பார்த்தார். வாயில் நுரை தள்ளிய நிலையில், ரிதன்யா கிடப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்துள்ளார்.
ரிதன்யா இறந்து போனதை கிராமத்தினர் உறுதி செய்தனர். கடைசியாக அப்பாவுக்கு மெசேஜ் அனுப்பி இருப்பதை பார்த்து அந்த நம்பருக்கு போன் செய்தனர்.
அப்பா அண்ணாதுரை அம்மா ஜெயசுதா இருவரும் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தனர். அண்ணாதுரை அதிர்ச்சியில் உரைந்து நின்றார். மகள் உடலை கட்டிப்பிடித்து ஜெயசுதா கதறி அழுதார்.
கதறி அழுத ரிதன்யாவின் தாய்
அம்மா முத்தம் கொடுக்கிறேன். எழுந்திருடா என் தங்கம்,என் சாமி என ஜெயசுதா கதறி எழுந்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது. ஐயோ என் சாமி, என் சாமி, என் சாமி, அம்மா முத்தம் கொடுத்தா எந்திரி, நான் உனக்கு என்ன குறை வச்சேன் என அவரது தாய் கதறினார்.
ரித்தன்யா இறந்துவிட்டதை உறுதி செய்த டாக்டர்
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சில் உடலை ஏற்றிய போது, என் பிள்ளைக்கு மூச்சு இருக்குது என ஜெயசுதா அலறியதும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கை வைத்து பார்த்த போது, உயிர் இல்லை. என் மகள் உயிரோடு வந்துவிட மாட்டாளா என்ற ஏக்கத்தில் அப்படி கூறியிருக்கிறார்.
ஆனால் திருப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரித்தன்யா ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
ரித்தன்யாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் கைது
தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டனர். சித்ராதேவிக்கு உடல்நிலம் சரியில்லாததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். திருமணமான இரண்டரை மாதங்களில் ரிதன்யா இறந்த நிலையில் மரணத்துக்கான காரணங்கள் குறித்து திருப்பூர் கோட்டாட்சியர் தனியாக விசாரித்து வருகிறார்.