திபெத்தின் கைலாய மலையில் ஊற்றெடுத்து, சீனா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து கடலில் கலக்கும் பிரம்மபுத்திரா நதிக்கு குறுக்காக சீனா இரகசியமாக அணை கட்டும் வேலையில் ஈடுபட்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரம்மபுத்திரா நதியை சீனாவில் யார்லங்க் டிசாங்போ என்று அழைக்கிறார்கள்.
இந்த அணை இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் நிர்மாணிக்கப்படும் சூழலில், இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுமென்பது உறுதி. சீனா வோட்டர் பொம்’ என்ற தண்ணீர் குண்டு திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாகவே முறுகல் போக்கு நீடித்து வருகிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளுடன் இணைந்து சீனா இந்தியாவுக்கு எதிராக இவ்வாறான மறைமுக திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக இந்திய தரப்பில் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
அதுமாத்திரமன்றி, எல்லையில் இந்தியாவுக்குச் சொந்தமான இடங்களை, சீனா தனக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருவதாக இந்திய அரசியல்வாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்தியாவுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேச மாநிலம் சீனாவுக்குத்தான் சொந்தம் என்ற ரீதியில் சீனா சமீபத்தில் வரைபடங்களை வெளியிட்டிருந்ததாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இவ்வாறான நிலையில்தான் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திபெத்தின் கைலாய மலையில் பிரம்மபுத்திரா என்ற நதி உருவாகி கடலில் கலக்கிறது. இந்த நதி சீனா, இந்தியா வழியாக வங்கதேசம் சென்று அங்கிருந்து வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது. உலகின் மிக நீண்ட நதிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்தியாவில் இந்த நதி பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. சீனாவில் இந்த நதி யார்லங் சாங்கோ’ என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நதிக்குக் குறுக்காக இந்தியாவை மிரட்டும் வகையில் சீனா புதிய அணையை கட்டும் பணியை தீவிரமாக தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்டத்துக்கு 2024 ஆம் ஆண்டில் சீனா ஒப்புதல் வழங்கியிருந்தது. தற்போது மிகவும் இரகசியமான முறையில் அதற்கான பணி தொடங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த அணையானது இந்திய நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. 137 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் பிரமாண்டமாக இந்த அணை கட்டப்படுகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் சீனாவின் மின்சாரத் தேவையில் 30 சதவீதத்தை இந்த அணை மூலமாக பூர்த்தி செய்ய முடியும்.
சீனாவில் யாங்சே நதியின் குறுக்கே ‘த்ரீ கார்கிஸ்’ (மூன்று பள்ளத்தாக்குகள்) என்ற பிரம்மாண்ட அணை ஏற்கனவே உள்ளது. அதை விட மூன்று மடங்கு பெரியதாக பிரம்மபுத்திரா நதியின் குறுக்காக அணையை சீனா நிர்மாணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது இந்திய எல்லையில் அமைய உள்ளதால் இந்தியாவுக்குக் கிடைக்கும் தண்ணீர் கிடைக்காமல் போகலாம்.
அதேபோல் மழை காலத்தில் சீனா அதிகப்படியான தண்ணீரை அணையில் இருந்து திறந்தால் அருணாச்சல பிரதேசத்தில் வெள்ளம் ஏற்படும் ஆபத்துள்ளது.
இதனால் இந்த அணை இந்தியாவுக்கு எதிரான தண்ணீர் பொம்’ என்று அழைக்கப்படுகிறது.
சீனா கட்டும் அணையானது இந்தியாவுக்கு தண்ணீர் வெடிகுண்டு போன்றது என்று அருணாசல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.
“சீனாவை நம்ப முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. சீனா கட்டும் அணையால் நமது பழங்குடியினர் மற்றும் நமது வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும்.
இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது. தண்ணீர் வெடிகுண்டாக இந்த அணையை சீனா பயன்படுத்தலாம்.
இந்த அணை கட்டுமானப் பணியை சீனா தொடங்கியிருக்கலாம். அல்லது விரைவில் தொடங்கலாம். ஆனால், அவர்கள் இது தொடர்பான எந்த தகவலையும் பகிர மாட்டார்கள். அணை கட்டும் பணி முடிந்தால், நமது சியாங் மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் வரண்டு போகும்” என்று அருணாசல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு அச்சம் தெரிவித்துள்ளார்.
-எஸ்.சாரங்கன்-