கனேடிய தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று கொழும்பால் நம்பப்படுபவரும், இனப்படுகொலை, நினைவுத்தூபி என்பனவற்றிற்கு பின்னணியில் நின்று செயற்படுவரும் , இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பல தடவைகள் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டவருமான ஹரி ஆனந்தசங்கரி ஈழத்தமிழ் குடும்பம் ஒன்றுக்கு சார்பாக எழுதிய கடிதங்கள் தொடர்பாக அரசியல் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.
இனி விடயத்திற்கு வருவோம்……..!
இலங்கையைச் சேர்ந்த செந்தூரன் செல்வகுமாரன் என்பவர் இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியவர். அவரது அரசியல் தஞ்ச கோரிக்கை பிரித்தானிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
தன்னை விடுதலைப்புலிகளின் ஒரு உறுப்பினர் என்றும், புலிகளின் பிரச்சாரப் பிரிவில் சம்பளத்திற்கும், சம்பளம் இல்லாமலும் தான் வேலை செய்ததாகவும் அதிகாரிகளுக்கு சுயமாக தெரிவித்த செந்தூரன் தனக்கு இலங்கையில் வாழ்வது உயிராபத்தானது என்று அரசியல் தஞ்சத்திற்கு காரணம் காட்டியிருந்தார்.
இந்த தகவல்களை விசாரணை செய்த பிரித்தானிய அதிகாரிகள் செந்தூரனின் கூற்றுக்கள் நம்பகத்தன்மை அற்றவை என்று கூறி அவரது அரசியல் தஞ்ச கோரிக்கை நிராகரித்ததாக சர்வதேச ஊடகங்கள் பலவும் பேசுகின்றன.
இதற்கிடையில் செந்தூரன் கனடாவைச்சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் 2005 இல் இங்கிலாந்தில் நடந்துள்ளது. அப்போது மாப்பிள்ளை இங்கிலாந்தில் வசித்துள்ளார்.
பின்னர் செந்தூரனின் மனைவி குடும்ப இணைவுக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பமும் கனேடிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
செந்தூரன் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்பதும், அவர் கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக கனடாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று என்றும் அதிகாரிகளும், நீதித்துறையும் குடும்ப இணைவுக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
கனடா குளோபல் செய்தி சேவையின் தகவல்களின் படி, இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட செந்தூரனுக்கு, 2007 இல் கொழும்பு கனேடிய தூதரகத்தில் குடும்ப இணைவுக்கான நேர்காணல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த நேர்காணலில் செந்தூரன் தனது கதையை சற்று மாற்றி சொன்னார் என்றும், அப்போதும் அவர் புலிகளுக்கு தான் வேலை செய்ததை மறுக்கவில்லை என்றும் தெரியவருகிறது. இங்கிலாந்து, கொழும்பு விசாரணைகளில் செந்தூரன் புலிகளுக்கு சம்பளத்திற்கு வேலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது பொதுவானது.
இன்னொரு சந்தர்ப்பத்தில் தான் தவறான ஆலோசனை ஒன்றின் பேரில் விடுதலைப்புலிகளுக்கு வேலை செய்ததாக சொன்னதாகவும், அது சோடிக்கப்பட்ட கதை என்றும் மறுத்துள்ளார்.
தான் விடுதலைப்புலிகளுக்கு சம்பளத்திற்கோ, சம்பளம் இல்லாமலோ வேலைசெய்யவில்லை என்றும் மறுத்துள்ளார்.
இந்த குளறுபடியான, முன்னுக்கு பின் முரணான கதைகளும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்பதும், கனேடிய அதிகாரிகளின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற முடிவும் செந்தூரனின் வாழ்க்கையோடு விளையாடுகின்றன.
இது செந்தூரன் விவகார புனைகதை என்றால் ……..,
இந்த புனை கதையில் இருந்து அவரை பிணையெடுக்க அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி பண்ணிய காரியம் தான் கடிதக்கதை.
ஹரி ஆனந்தசங்கரி இலங்கை தமிழ்த்தேசிய மூத்த அரசியல்வாதி ஆனந்தசங்கரியின் மகன். 1983 இல் இருந்து கனடாவில் வாழும் இவர் அங்கு படித்து பொருளாதாரம், சட்டத்துறைகளில் பட்டம்பெற்று, வர்த்தகம், அசையா ஆதன சந்தை தரகர்,
சட்டத்தரணி, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ,…….. மற்றும் லிபரல் கட்சி அரசியல்வாதியாக ஒட்டாவா நாடாளுமன்றத்தில் எம்.பி.யாகவும், தற்போது கனடா பொதுப்பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கிறார்.
கனடாவின் அதிகாரம் மிக்க ஒரு அரசியல் வாதியாக, ஈழத்தமிழ் வம்சா வழியைச் சேர்ந்தவராக, செந்தூரன் விவகாரத்தில் அவரின் கடித தலையீடு சட்ட ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் கனடாவில் அவரின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியும் ஒன்று.
கிடைக்கின்ற தகவல்களின் படி ஹரி ஆனந்தசங்கரி கனடா நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பினரின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கடிதம் 1 : 2016 செப்டம்பர் 28 திகதியிடப்பட்டது. முதலாவது கடிதம் எழுதியபோது ஹரி எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடங்கள் கூட ஆகவில்லை. இங்கு கனேடிய பாராளுமன்ற அரசியல் நடைமுறை அனுபவமின்மை குறித்து பேசப்படுகிறது.
கடிதம் 2 : 2023 யூலை 19 திகதியிடப்பட்டது. பொதுப்பாதுகாப்பு அமைச்சரிடம் சட்டநிவாரணம் (மீள் முறையீடு) கோரும் இக் கடிதம் யூலை 25 ம் திகதி சட்ட நிறுவனத்திற்கு நேரடியாக மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளது.
ஹரி ஆனந்தசங்கரி 2015 முதல் கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2015, 2019, 2021, 2025 ஆண்டுகளில் இடம்பெற்ற நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருபவர்.
ஈழத்தமிழர்களும், ஆசிய குடியேற்றவாசிகளும் அதிகமாக வாழும் SCARBOROUGH GUILDWOOD ROUGE PARK தொகுதியில் தமிழ்த்தேசிய அடையாள அரசியலையும் ஒட்டாவாவில் லிபரல் அரசியலையும் செய்யும் ஒருவராக இவரை இனம் காணமுடியும்.
ஆரம்பகால இவரது தொழில்துறை தேர்வானது விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைப்பேணவும், விடுதலைப்புலிகள் தங்கள் அரசியலுக்கு இவரைப்பயன்படுத்தவும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
கனேடிய தமிழர் வர்த்தக சபை, கனேடிய தமிழர் காங்கிரஸ், கனேடிய தமிழ் இளைஞர் மேம்பாட்டு மையம் என்பன விடுதலைப்புலிகளுக்கான லொபி ஆக செயற்பட்டு வருவதாகவும், ஹரி தடைசெய்யப்பட்ட பயங்கரவாத விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டுக்களும் எதிர்த்தரப்பால் முன்வைக்கப்படுகிறது.
ஹரியின் கடிதங்கள் நீதித்துறையில் தலையிடுவதாகவும், நீதித்துறையின் சுதந்திர செயற்பாட்டை மறுதலிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. இது அரசியல் அதிகார துஷ்பிரயோகம், அதிகார அத்துமீறல் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“செல்வகுமாரனுக்கு நிரந்தர வதிவிடத்தை வழங்க மறுத்ததன்மூலம் 48 வயதான இலங்கையர் தனது கனேடிய மனைவி, குழந்தையிடமிருந்து பிரிந்து விட்டதாகவும் இது கொடூரமானது மற்றும் மனிதாபிமான மற்றது.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” :- 19.யூலை , 2023 அன்று நீதி அமைச்சர், மற்றும் சட்டமா அதிபரின் நாடாளுமன்ற செயலாளராக இருந்த பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுவே சட்ட நிறுவனத்திற்கு யூலை 25 இல் நேரடியாக மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளது. மறுநாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் ஹரி அரச – ஆதிவாசிகள் தொடர்புகள், வடக்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இங்கு எழுகின்ற கேள்வி நீதியமைச்சராக பதவி மாற்றம் செய்யப்படவுள்ளது என்பதை அறிந்து அதற்கு முன்னர் இந்த கடிதத்தை அவர் அவசர அவசரமாக எழுதினாரா? என்பதாகும். ஹரி பதவிமாற்றத்திற்கான இறுதி நாட்களில் திட்ட மிட்டு இந்த கடிதத்தை எழுதினாரா? என்பதுதான் எதிரணியின் சந்தேகம். இன்றைய அரசாங்கத்தில் 13, மே, 2025 இல் ஹரி கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஹரியின் முதலாவது கடிதம் இவ்வாறு கூறுகிறது “ பிரிவினால் நிலுஷி மனநிலை பாதிக்கப்பட்டு மனச்சோர்வு, பதட்டம்,மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஏதேனும் கேள்விகள், கவலைகள் இருந்தால் எனது அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்” இது அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம்.
கடிதம் தொடர்பான கேள்விகளுக்கு ஹரியின் பதில் மேற்குலக அரசியல்வாதி ஒருவர் வழங்கும் பொறுப்புமிக்க சட்டவாக்க சபை உறுப்பினர் ஒருவரின் பதிலாக இல்லை. மாறாக இலங்கை அரசியல் வாதிகள் “எனது தொகுதியின் ஆதரவாளருக்கு கடிதம் கொடுத்தேன்” என்ற பாணியில் உள்ளது. இது விக்கினேஸ்வரன் சாராயக்கடை லைசென்ஸ்க்கு சிபார்சு கடிதம் கொடுத்தற்கு கூறிய ஒப்புதல் வாக்குமூலப் பாணி.
இந்த குடும்ப இணைவுக்கான மேன்முறையீடுகள் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
2006 செப்டம்பர் 1ம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பில் செந்தூரனின் முன்னுக்கு பின் முரணான கூற்று முதன்மைப்படுத்தப்படுகிறது.
அதில் தனக்கு சட்டவாளர் ஒருவர் தவறாக ஆலோசனை வழங்கி விட்டார் என்று செந்தூரன் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை ஹரியும் தனது கடிதத்தில் சட்டத்தரணியின் தவறான வழிகாட்டல் என்று குறிப்பிட்டிருப்பதாக கனேடிய குளோபல் செய்திச்சேவை கூறுகிறது.
செந்தூரன் கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சருக்கு சட்டநிவாரணம் கோரி செய்திருந்த மேன்முறையீட்டில் “தான் புலிகளுக்கு வேலைசெய்யவில்லை என்றும், அப்படி செய்திருந்தாலும் அதனால் கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும், அது வன்முறையற்றது என்றும் கூறியிருப்பதாக செய்திச்சேவை தெரிவிக்கிறது.
இந்த மேன்முறையீட்டை அன்றைய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங் நிராகரித்தார். கனேடிய சமஷ்டி நீதி மன்றமும் 2024 யூலை 9 இல் நிராகரித்துள்ளது.
உண்மையில் செந்தூரன் குடும்ப இணைவு விவகாரம் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் இடையிலான போராட்டமாக உள்ளது.
சட்டம், நீதி, நிர்வாகம் என்பன சுயமாக இயங்கும் மேற்குலகில் இவை இரண்டும் ஒரு புள்ளியில் சந்திப்பதில்லை. இரு சமாந்தரக்கோடுகளாக நகர்கின்றன. ஹரி ஆனந்தசங்கரியின் மனிதாபிமான அடிப்படையிலான கடிதங்களும், செந்தூரனின் மனிதாபிமான மேன்முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டிருப்பதும், சட்டத்துறை நிர்வாகம் கனேடிய சட்டங்களைப்பற்றியே பேசுவதும் இந்த சமாந்தரமான இரு நேர்கோட்டு அணுகுமுறைகளாகும்.
எனினும் மேற்குலகில் அரசியல் தஞ்சம் கோரும் ஈழத்தமிழர்கள் செந்தூரன் விவகாரம் தொடர்பாக கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
மேற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவது அந்தந்த நாடுகளின் வேறுபட்ட சட்ட நடைமுறைகள் சார்ந்தது. இவை பெரும்பாலும் ஐ.நா. அகதிகள் பிரகடனத்தின் அடிப்படையிலானவை.
இங்கிலாந்து போன்ற சில நாடுகளில் சட்டத்தரணிகள் அல்லது அவர்களின் உதவியாளர்கள் காசுக்காக “கேஸ்” எழுதும் இந்த வேலையைச் செய்கிறார்கள்.
இதில் முக்கியம் இவர்களும் ஈழத்தமிழர்கள் என்பதாகும். இவர்கள் செந்தூரன், ஹரி ஆகியோர் குறிப்பிட்டிருப்பது போன்று பொய்யான புனைகதைகளை சோடித்து எழுதி ஈழத்தமிழ் அகதிகளை ஏமாற்றுகிறார்கள். அரசியல் தஞ்சம் கோருவது என்பதே 90 வீதம் பொய் சொல்வது. அதில் சித்தியடைவதும், பெயில் பண்ணுவதும் அதிர்ஷ்டத்தை பொறுத்தது.
புலிகள் இயக்கத்தில் ஆயுதம் ஏந்தி அரச படைகள், இந்திய படைகளுக்கு எதிராக போராடியவர்களும், மாற்று இயக்க உறுப்பினர்கள், மற்றும் மக்களை கொன்றவர்களும் தங்களுக்கும் இயக்கத்திற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் அகிம்சாவாதிகளாக, அரசியல் போராளிகளாக, மனித உரிமைகள், ஊடகவாதிகளாக பொய்சொல்லி தஞ்சம் பெற்றிருக்கின்ற நிலையில் , புலியே தன்னை புலி தேடுகிறது என்று அடைக்கலம் பெற்றுள்ள நிலையில் செந்தூரன் குடும்ப இணைவு விவகாரம் பலருக்கு மனதைத்தொடும் மனிதாபிமான விவகாரம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நிலைக்கு பொறுப்பு செந்தூரனா…? காசுக்கு கதை எழுதிய சட்டவாளரா….?
செந்தூரனுக்காக சட்டவாளர் எழுதிய புனைகதையில் புலிகளுக்கு வேலைசெய்தார் என்று காட்டுவதன் மூலம் அன்றைய காலகட்டத்தில் நாட்டுக்கு திருப்பி அனுப்பமுடியாது என்று கருதியிருக்கக்கூடும்.
அதேவேளை புலிகளுக்கு கூலிக்கு வேலை செய்தார் என்பதன் மூலம் செந்தூரன் புலிகளின் இயக்க உறுப்பினர் அல்ல என்பதையும், தொழிலுக்காக அதைச் செய்தார் என்பதையும் காட்டி ஒரு சமநிலைப்படுத்தலுக்கு முயற்சித்துள்ளார்.
இது செந்தூரன் அனுபவித்த சொந்தக்கதையல்ல. சட்டவாளரின் மூளையில் உதித்த யாவும் கற்பனை புனை கதை. இதனால் செந்தூரனால் முன்னுக்கு பின் முரணான பதில்களையே குறுக்கு விசாரணையில் செயற்கையாக அளிக்கக்கூடியதாக இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
செந்தூரனதும், அவரது குடும்பத்தினதும் உண்மையான வாழ்க்கையில் காசுக்கு எழுதிய தஞ்சகோரிக்கை புனை கதை புகுந்து விளையாடுகிறது. காசுக்கு கதை எழுதிய சட்டவாளர் புலிகளுக்கு காசுக்கு வேலை செய்தார் என்று எழுதியதன் வினை. ஹரி ஆனந்தசங்கரியின் மனிதாபிமான கடிதங்கள் இனியும் செந்தூரன் குடும்பத்திற்கு உதவப்போவதில்லை. ஆனால் தவித்த முயலடிக்கும் காசுக்கு கதை எழுதுபவர்கள் மட்டும் இன்னும் எழுதிக்கொண்டே இருப்பார்கள்.
செந்தூரன் குடும்பத்தின் வாழ்வியல் எதிர்காலம் போன்றே, ஹரி ஆனந்தசங்கரியின் அரசியல் எதிர்காலமும் ஒரு விடையைத்தேடுகிறது. விடை கனடாவின் கரங்களில்………!
— அழகு குணசீலன் —