ராசிபுரம் அருகே தனது மூன்று பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை உயிரை மாய்த்து கொண்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி அடுத்த வேம்பாகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் கோவிந்தராஜ் (35). இவர் ரிக் வண்டியில் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடகா சென்ற கோவிந்தராஜ் ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். இவரது மனைவி பாரதி (26), இவருக்கு பிரதிக்ஷா ஸ்ரீ (10), ரித்திகா ஸ்ரீ (7), தேவ ஸ்ரீ (6), மகன் அனீஸ்வரன் (2) உள்ளனர். இவரின் மூன்று மகள்களும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கோவிந்தராஜ்க்கு வீடு கட்டியதால் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பாரதியும் மகளிர் சங்கங்களில் கடன் பெற்றுள்ளார்.

வீட்டிற்கு வந்த கோவிந்தராஜ் கடன் பிரச்சினையை நினைத்து வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பிறகு பாரதியும் அனீஸ்வரனும் படுக்கை அறையில் தூக்கியுள்ளனர்.

அவர்கள் தூங்கிய பின் கோவிந்தராஜ் படுக்கையறை கதவை வெளியே தாள் போட்டுவிட்டு ஹாலில் தூங்கி கொண்டிருந்த தனது மூன்று பெண் குழந்தைகளையும் கொடுவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரை மாய்துகொண்டுள்ளார். இந்த நிலையில் அதிகாலை கதவை திறக்க முயன்ற பாரதி வெளியே தாள் போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார்.

இதையடுத்து அறைக்குள் இருந்த குத்து விளக்கை எடுத்து கதவை உடைத்து வெளியே வந்து வந்துள்ளார். அப்போது மூன்று குழந்தைகளும் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.

மேலும் கோவிந்தராஜும் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து பாரதி தனது உறவினர்களிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் எஸ்பி விமலா, ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். 3 மகள்களை கொன்று ரிக் மேனேஜர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த முதற்கட்ட விசாரணையில், வீடு கட்ட வாங்கிய கடனை திருப்ப செலுத்த முடியாத நிலையில் மகள்களை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version