t50 வயதுக்கு மேற்பட்ட சபல புத்திகொண்ட ஆண்களை, தன் காமவலையில் வீழ்த்தி, அவர்களிடமிருந்து தங்க நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துவந்த இளம்பெண்ணை அவரின் ஆண் நண்பருடன் சேர்த்துத் தூக்கி, சிறைக்குள் தள்ளியிருக்கிறது போலீஸ்!

தென்மாவட்டத்தைச் சேர்ந்த மணி, சென்னை ஆவடியில் மொத்த மளிகை வியாபாரம் செய்துவருகிறார்.

27-07-2025 அன்று தேனாம்பேட்டை பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மது அருந்தியிருக்கிறார் மணி.

அப்போது அதே ஹோட்டலுக்கு வந்திருந்த குன்றத்தூரைச் சேர்ந்த இளம்பெண் தீபிகா என்ற தீபலட்சுமி, மணியுடன் நெருக்கமாகப் பேசி, பழகியிருக்கிறார்.

பின்னர் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்த நிலையில், மணி அணிந்திருந்த 84 கிராம் எடையுள்ள தங்க செயின் மாயமாகியிருக்கிறது.

இது குறித்து மணி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்க, இளம்பெண் தீபிகாவையும், அவரின் ஆண் நண்பரான சதீஷ்குமாரையும் தட்டித் தூக்கிய போலீஸார்,

அவர்களது பின்னணி தெரிந்து கிறுகிறுத்துப்போயிருக்கிறார்கள்.இது குறித்துப் பேசுகிற தேனாம்பேட்டை போலீஸார்,

“சம்பவத்தன்று நட்சத்திர ஹோட்டலில் மணியைச் சந்தித்த தீபிகா, மது அருந்தியவாறே அவருடன் நெருக்கமாகப் பேசிப் பழகியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் மது போதையில் நிற்கக்கூட முடியாமல் தள்ளாடிய மணியை, கைத்தாங்கலாக ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் தீபிகா.

போதையில் படுத்துறங்கிய மணி, கண்விழித்துப் பார்த்தபோது இளம்பெண் தீபிகாவைக் காணவில்லை. அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் எடைகொண்ட தங்க செயினும் மாயமாகியிருந்திருக்கிறது.

உடனே செயின் திருட்டு குறித்து மணி எங்களிடம் புகாரளிக்க, ஹோட்டலிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தோம்.

அப்போது மணியின் அறைக்கு, தீபிகாவைத் தவிர வேறு யாரும் செல்லவில்லை என்பது தெரியவந்தது.

மேலும், மணியை அழைத்துக்கொண்டு அறைக்குச் சென்ற தீபிகா, சில மணி நேரத்திலேயே அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறிச் செல்லும் காட்சியும் சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது.

தீபிகாவின் செல்போன் நம்பரை நாங்கள் தொடர்புகொண்டபோது, சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சமயத்தில்தான், ஹோட்டலிலிருந்து வெளியில் வந்த தீபிகா, இளைஞர் ஒருவருடன் செல்வதைக் கண்டுபிடித்தோம்.

அந்த இளைஞர் யாரென்று விசாரித்தபோது, அவர் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், ஆக்டிங் டிரைவராக வேலை செய்துவருகிறார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சதீஷ்குமாரின் செல்போன் சிக்னலை ஆய்வுசெய்தபோது, அது ஏற்காடு பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றைக் காட்டியது.

உடனடியாக அங்கு சென்றபோது, தீபிகாவும் சதீஷ்குமாரும் ஹோட்டலில் அறை எடுத்து மது அருந்திக்கொண்டிருந்தனர்.

இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தோம். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

வழக்கமாக, தன் ஆண் நண்பர் சதீஷ்குமாருடன் நட்சத்திர ஹோட்டல்களுக்கு மது அருந்தச் செல்லும் தீபிகா,

அங்கு வரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் தன்னை ஒரு ‘பிசினஸ் உமன்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு சகஜமாகப் பழகுவார்.

பின்னர் அந்த நபரின் செக்ஸ் ஆசையைத் தூண்டும் வகையில், காமம் சொட்டச் சொட்டப் பேசி, தன்னுடைய வலையில் வீழ்த்துவார்.

சம்பந்தப்பட்ட நபர் லேசாக அசரும் நேரத்தில், அவரது நகை, பணத்தைத் திருடிச் செல்வதை வழக்கமாகவே வைத்திருந்திருக்கிறார் தீபிகா.

சம்பவத்தன்று மணியிடமும் செக்ஸியாகப் பேசி, மயக்கி அவருடன் ஒரே அறையில் தங்கியவர்,

போதையிலிருந்த மணியிடமிருந்து தங்க செயினைத் திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

பின்னர், திருடிய செயினை விற்று, அந்தப் பணத்தில் தன்னுடைய ஆண் நண்பர் சதீஷ்குமாருக்கு விலையுயர்ந்த பைக் ஒன்றை கிஃப்டாக வாங்கிக்கொடுத்திருக்கிறார்.

மீதிப் பணத்தில் இருவரும் ஏற்காடுக்கு இன்பச் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். அவர்களிடமிருந்த பைக், 3,14,700 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.

இந்த வழக்கை விசாரித்துவரும் போலீஸ் உயரதிகாரி பேசுகையில், “கைதுசெய்யப்பட்ட தீபிகாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி, ஒரு குழந்தையும் இருக்கிறது.

ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருபவர், ஆக்டிங் டிரைவரான சதீஷ்குமாருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்துவருகிறார்.

தீபிகாவின் டார்கெட்டே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்.

ப்ளஸ் டூ வரை மட்டுமே படித்திருக்கும் தீபிகா, சபல புத்திகொண்ட பிசினஸ்மேன்களை நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி, மயக்கி அவர்களிடமிருந்து நகை, பணத்தைத் திருடி ஆடம்பரமாக வாழ்ந்துவந்திருக்கிறார்.

நகை, பணத்தை இழந்தவர்களும்கூட ‘மகள் வயதுடைய இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டது வெளியில் தெரிந்தால் அவமானம்’ எனக் கருதி, யாரும் தீபிகா மீது புகாரளிக்கவே இல்லை.

அதனால்தான், தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து இவர் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுவந்திருக்கிறார்” என்றார்.

காமம்… போதை… பணம்… எல்லாம் ஒன்று சேர்ந்தால், அது குற்றத்தில்தானே போய் முடியும்!

Share.
Leave A Reply

Exit mobile version